நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

நடிகை மீரா மிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்திமாறி உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். மாடலான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி மீரா மிதுன் வெளியிட்டிருந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீரா மிதுன் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், மீரா மிதுனை 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு நடிகை மீரா மிதுன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.