நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

மயில்சாமி
மயில்சாமி

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மயில்சாமி(57) இன்று(பிப்.19) அதிகாலை காலமானார்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்த நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மயில்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்திருப்பதாக உறுதி செய்தனர்.

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் தனித்துவம் மிக்கவர்களில் ஒருவராக மயில்சாமி விளங்கினார். அவரது தனி அடையாளமாகவும், பெயருடனும் ’மிமிக்ரி’ என்பது இணைந்திருந்தது. திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த காலம்தொட்டே, பின்னணி குரல் கலைஞராகவும் விளங்கினார். ரஜினி, கமல் தொடங்க் விஜய், அஜித் வரை 2 தலைமுறை நடிகர்களுடன் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விவேக் உடன் இணைந்து மயில்சாமி தோன்றிய பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்றைக்கும் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வீடியோக்கள் வாயிலாக மக்களை மகிழ்வித்து வருகின்றன. நேரடி திரைப்படங்களுக்கு அப்பால், டப்பிங் திரைப்படங்களிலும் அதிகளவு பணிபுரிந்திருக்கிறார். நகைச்சுவை நடிப்புக்கு அப்பால் குணச்சித்திர வேடங்களிலும் பங்களித்திருந்தார்.

திரைப்படங்களுக்கு அப்பால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆன்மிகப் பணிகள், பொது சேவை மற்றும் அரசியலிலும் மயில்சாமி ஈடுபாடு கொண்டிருந்தார். சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் தவித்தபோது இவர் முன்னெடுத்த நிவாரணப் பணிகள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றன. இந்த நிலையில் நடிகர் மயில்சாமியின் மரணம், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in