`எனக்கு ஜோடியாக சிம்ரன் வேண்டாம் என நிராகரித்தேன்’: கருணாஸ்

`எனக்கு ஜோடியாக சிம்ரன் வேண்டாம் என நிராகரித்தேன்’: கருணாஸ்

``எனக்கு ஜோடியாக சிம்ரன் வேண்டாம் என்று அவரை நிராகரித்தேன்'' என நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

கருணாஸ் நடித்துள்ள படம், ’ஆதார்’. ராம்நாத் பழனிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அருண்பாண்டியன், இனியா, ரித்விகா, உமா ரியாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாரதிராஜா வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர்.

இசையமைப்பாளர் தேவா, பூச்சி முருகன், இயக்குநர்கள் அமீர், இரா.சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ராம்நாத்
இயக்குநர் ராம்நாத்

விழாவில் நடிகர் கருணாஸ் பேசும்போது, ``இங்கு, இயக்குநர் அமீர் என்னை வாழ்த்தி பேசியதை மறக்க முடியாத தருணமாக நினைக்கிறேன். அமீர் இயக்கிய ராம் படத்தில் நான்தான் நடிக்க ஒப்பந்தமானேன். போட்டோஷூட்டிலும் கலந்து கொண்டேன். பிறகு அவர்கள், நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் மூன்றாம் மனிதராக வேடிக்கை பார்த்திருக்க வேண்டும். சற்று உரிமை எடுத்துக்கொண்டு, உள்ளே புகுந்து சிலவற்றை பேசினேன். அது தவறாக முடிந்துவிட்டது. இன்று அவர் மறைந்த நடிகர் நாகேஷுடன் ஒப்பிட்டு பேசியதை மறக்க இயலாது.

ஆதார் பட பாடல் வெளியீட்டு விழா
ஆதார் பட பாடல் வெளியீட்டு விழா

‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிம்ரனைதான் எனக்கு நாயகியாக அளித்தார்கள். நான், என் தகுதிக்கு சிம்ரன் வேண்டாம் என உறுதியாகக் கூறினேன். அவர் நடித்திருந்தால் இந்த படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்காது. ஏனெனில் அந்தக் கதைக்கு அவ்வளவு பெரிய நாயகியை நடிக்க வைத்தால், ரசிகர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேபோல் இந்த படத்திலும் இந்த கதை, தனக்கான நடிகர்களை தேர்வு செய்து கொண்டது.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்தேன். லாபத்தையும் பார்த்தேன். நஷ்டத்தையும் பார்த்தேன். சினிமாவில் நான் நிறைய கஷ்டங்களும் லாபங்களும் தோல்விகளும் சந்தித்தாலும் சினிமா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. நான் சினிமாவுக்கு உண்மையாக இருந்தேன். அதனை அளவுகடந்து நேசித்தேன். நேசித்தும் வருகிறேன்'' என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in