`உணவை எப்படி தயாரிக்கிறார்கள் என்று சொல்லிக் கொடுக்கிறோமா?'- நடிகர் கார்த்தி வேதனை

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி `உணவை எப்படி தயாரிக்கிறார்கள் என்று சொல்லிக் கொடுக்கிறோமா?'- நடிகர் கார்த்தி வேதனை

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக உழவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, சிவக்குமார், பொன்வண்ணன், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடி தெரிந்து கொள்வதும் இல்லை. உழவன் அறக்கட்டளை தொடங்கிய புதிதில் விவசாயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் செய்யலாம் என்று நினைத்தேன். அச்சமயத்தில் என்னை நிறைய விழாக்களுக்கு அழைத்திருந்தார்கள். குறிப்பிட்ட விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த போது, விவசாயம் சார்ந்த பெர்னான்ட்ஷா மற்றும் ஆண்டனிதாஸ் இவர்கள் 30, 40 வருடங்களாக விவசாயம் செய்கின்றவர்களை அழைத்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வரும்போது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இவர்கள் தானே நம்முடைய நாயகர்கள்? இவர்களை ஏன் நாம் அடையாளப்படுத்தவில்லை? இவர்கள் ஏன் சமூகத்திற்கு தெரியவில்லை? எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது.

உழவன் அறக்கட்டளை தொடங்கும்போது சமுதாயத்தில் விவசாயத்தை நோக்கி என்னென்ன விஷயங்கள் குறைவாக இருக்கிறது என்று பார்க்கும்போது, விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றியது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால், சின்ன சின்ன ஊர்களில் எதையும் எதிர்பார்க்காமல் அதிசயங்கள் நிகழ்த்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பரிசுக்காகவும், நாம் அழைத்து பாராட்டுவதற்கும் செய்யவில்லை. இது அத்தியாவசியம், சமூகத்திற்கு முக்கியம், நம் எதிர்காலத்திற்கு மிக அவசியம் என்று தங்களுடைய முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்கள் கணக்கிடமுடியாத அளவிற்கு இருக்கிறார்கள். இவர்களை அந்த ஊரில் உள்ளவர்கள் கூட மதிப்பார்களா? என்று தெரியாது. அப்படிபட்டவர்களை அழைத்து வந்து நமது குழந்தைகளுக்கு, இவர்கள் தான் நமது கதாநாயகர்கள், இவர்கள் தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் உழவர் விருதுகளை தொடங்கினோம்.

இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்தால், ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும் என்று கூறுவது போல ஒரு குறிப்பிட்ட விதையை இழந்துவிட்டால் அதை திரும்ப உருவாக்க முடியாது. அப்படிப்பட்ட விதையை 19 வயதில் இருந்து ஒருவர் பாதுகாத்து வருகிறார். இந்த வயதில் வெளிநாடு சென்றோமா, சம்பாதித்து வீடு வாங்கினோமா என்று இல்லாமல், தன் வாழ்க்கை மொத்தமும் சமூகத்திற்காக செலவழிக்கிறார். ஆனால், அந்த சமூகம் நன்றாக இருக்கிறது என்று கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. யாரோ ஒருவர் பெட்ரோல் போட்டு அனுப்பி வைப்பார்கள் என்று கேட்பதற்கு ஆசையாக இருக்கிறது. சுற்றிலும் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள், இதை அகரத்திலும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். டிரெண்டிங்கான விஷயங்களை அனைவரும் எடுத்து செய்யும்போது, தினேஷ் உலர்ந்து போன விஷயமான விவசாயத்தை எடுத்து செய்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிறைய பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. பெண்கள் விவசாயத்தில் எதுவும் செய்யமுடியாது. பின்தங்கிதான் இருப்பார்கள் என்று இருக்கும் நிலையில், பெண்கள் கூட்டம் சாதித்துக் கொண்டிருக்கிறது.

உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக உழவர்களுக்கு விருது வழங்கும் விழா
உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக உழவர்களுக்கு விருது வழங்கும் விழா

நம்முடைய குழந்தைகளுக்கு சாப்பாட்டை வீண் செய்யாதீர்கள் என்று கூறுவோம். ஆனால், சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று சொல்லித் தருகிறோமா? இதற்கு முன்பு சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்று குழந்தைகளைக் கேட்டால், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வருகிறது என்பார்கள். ஆனால், இன்று ஸ்விகி, சொமோட்டோவில் ஆர்டர் செய்தால் வரும் என்கிறார்கள். ஒரு காரை எப்படி தயாரிக்கிறார்கள், ஐஸ்கிரீம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்கிறோம். ஆனால், உணவை எப்படி தயாரிக்கிறார்கள்? என்று சொல்லிக் கொடுக்கிறோமா? பள்ளிகளில் அதற்கான பார்வையிடல் இருக்கிறதா? என்று யோசித்துப் பார்க்கிறேன். நான் உமையாளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் விவசாய நிலத்தைச் சுற்றி காண்பித்தேன். பல பள்ளிகள் இன்று அழைத்துச் செல்கிறது. சில பள்ளிகளில் விவசாயத்திற்கென ஒரு வகுப்பை தனியாகவே ஒதுக்குகிறார்கள். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலா கட்டாயமாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பல திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வருவோம். இந்நிலையில், நீரும் நாமும் என்பது எனக்குப் பிடித்த விஷயம். இதை நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் இதை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். இத்திட்டத்திற்கு பல நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.

அதேசமயம், அந்து சார் கூறியது போல சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கேற்ப கருவிகளை வடிவமைக்கும் போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற வருடமே முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தாமதமாகிவிட்டது. இந்த வருடம் நிச்சயம் நடத்துவோம். இதற்கு அண்ணா பல்கலைக் கழகமும் உடன் இருக்கிறார்கள் என்பதில் மிகப் பெரிய சந்தோஷம். ஏனென்றால், பொறியியலாளர்களால் தான் சுலபமாகவும், எளிமையாக உருவாக்க முடியும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in