‘வந்தியத்தேவா... நான் படுற பாடு இருக்கே!’

சினிமாவில் 25-வது ஆண்டில் வாழ்த்து சொன்ன கார்த்தியைச் செல்லமாகச் சீண்டிய சூர்யா
‘வந்தியத்தேவா... நான் படுற பாடு இருக்கே!’

நடிகர் சூர்யா நாயகனாக அறிமுகமான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளாகின்றன. இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் 1997 செப்டம்பர் 6-ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா, ரகுவரன், சாந்தி கிருஷ்ணா எனப் பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில் முதலில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருந்தவர் நடிகர் அஜித் தான். பின்பு சில காரணங்களால் அவர் விலக, அந்த வாய்ப்பு சூர்யாவுக்குக் கிடைத்தது. முதல் படத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சூர்யா, இயக்குநர் பாலாவின் ‘நந்தா’ படத்துக்குப் பின்னர் தனக்கான பாதையை வகுத்துக்கொண்டு வெற்றிகரமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிளிர்ந்துவருகிறார்.

அவரது திரையுலகப் பிரவேசத்தைக் கொண்டாடும் வகையில், ‘நேருக்கு நேர்’ வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் தனது அண்ணன் சூர்யாவின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வாழ்த்தும் வகையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். தனது சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். தகுதியான ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார் என் சகோதரர் சூர்யா’ எனத் தெரிவித்திருக்கிறார் கார்த்தி. அந்தப் பதிவில், இருவரும் குழந்தைப் பருவத்தில் இருக்கும் புகைப்படத்தை இணைத்திருக்கும் அவர், #25YearsOfCultSuriyaism எனும் ஹேஷ்டேகையும் அதில் சேர்த்திருக்கிறார்.

இதையடுத்து, நடிகர் சூர்யா அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து, ‘வந்தியத்தேவா!அண்ணனா பொறந்துட்டு படுற பாடு இருக்கே’ எனச் செல்லமாக கார்த்தியைச் சீண்டியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in