கார்த்தி பர்த் டே ஸ்பெஷல்: திறமையான நடிகனின் திறம்பட்டக் கலை!

கார்த்தி பர்த் டே ஸ்பெஷல்: திறமையான நடிகனின் திறம்பட்டக் கலை!

‘நடிப்பு, அறிவுபூர்வமானதல்ல, இயந்திரத்தனமானதும் அல்ல, அது உள்ளுணர்வு’ என்பார் அமெரிக்க நடிகர் கிரேக் மேக்டொனால்ட். உண்மைதான். உள்ளுணர்வை, உடலின் வெளி கொண்டு வருவதுதான் திறமையான நடிகனின் திறம்பட்டக் கலை. தன்னை வேறொருவராக மாறி வாழ்கிற அந்தக் கலை வாய்த்துவிட்டால், அதுபோன்ற சுகம் வேறில்லை. அந்தச் சுகத்தை இயல்பாகப் பெற்ற நடிகர்களில் ஒருவர் கார்த்தி!

முதல் படம் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் அரிவாள் மீதேறி ஆகாயம் பார்க்கும் ஆபத்துதான். அதை அரிதாக வென்ற கலைஞர் கார்த்தி. அமீரின் ’பருத்திவீரன்’, கார்த்தி-க்கிற்குள் இருக்கின்ற கலைஞனை, புழுதி பறக்கிறப் பொட்டல்காட்டு வெயிலோடு, ரத்தமும் சதையுமாகக் காட்டியது. தூக்கிக் கட்டிய லுங்கியும் நாக்கைத் துறுத்தி நடக்கிற பாங்குமாக கார்த்தியின் நடிப்பு அதில் வேறொரு ரகம்! அதுதான் அவருக்கு முதல் படம் என்பதை சத்தியம் செய்து சொன்னாலும் நம்ப மறுக்கும் சாத்தியமில்லாத மனம். கார்த்தியின் அந்தக் கடும் வெயில் உழைப்புக்கு அமீரின் பங்கும் அதிகம்.

அடுத்து, ’ஆயிரத்தில் ஒருவன்’ என்கிற ஃபேண்டஸி படத்தில் வேறொரு கார்த்தி. படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அவருக்கு அந்தப் படம் அடையாளம் தந்தது. இந்த இரண்டு படங்களின் பாதிப்பில் இருந்து அவரை பக்காவான கமர்சியல் உலகுக்கு இழுத்து வந்தது லிங்குசாமியின் ’பையா’. தமன்னா, கார்த்தியின் கெமிஸ்ட்ரியும், ’என் காதல் சொல்ல வார்த்தையில்லை’ என்ற யுவனின் ஏங்கிய குரலும் இந்தப் படத்தில் அவருக்கு ஸ்பெஷல்.

பிறகு, சுசீந்திரனின் நான் மகான் அல்ல, சிவாவின் சிறுத்தை உட்பட சில சீரியஸ் மற்றும் ஜாலி கேலி படங்கள் வரிசையாக வந்தாலும் அவரின் இன்னொரு முகத்தை இயல்பாகக் காட்டியது பா. ரஞ்சித்தின் ’மெட்ராஸ்’. சுவர் அரசியல் பேசிய இந்தப் படத்தில் ஹவுசிங் போர்டு இளைஞனாக கச்சிதமாகத் தன்னை மாற்றியிருப்பார் கார்த்தி.

தொடர்ந்து ’கொம்பன்’ படத்தில் புழுதி மண் வாசத்தோடு, திருகிய மீசைக் கொண்ட கொம்பையாவை, அசலான திமிரோடு அப்படியே வாழ்ந்தார் கார்த்தி. தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் கார்த்தி, அடுத்து விருமனாகவும் சர்தாராகவும் ரசிகர்களுக்கு முகம் காட்ட இருக்கிறார். ஆனாலும் கல்கியின் அந்த வந்தியத்தேவன் இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஆவலோடு ஏற்படுத்தி இருக்கிறது. தெறித்து ஓடும் குதிரைகளின் குழம்படியும் வீசுகிற வாள்களின் சத்தமும் காதுகளில் இப்போதே ஒலிக்கத் தொடங்குகின்றன.

‘எத்தனை படங்கள்ல நடிக்கிறோம்ங்கறது முக்கியமில்ல, என்ன படத்துல நடிக்கிறோங்கிறது அவசியம்’ என்பது கார்த்தி சொல்லும் வார்த்தை என்கிறார்கள் அவருக்கு வேண்டியவர்கள். அதே நேரம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டால், அந்த தேதியில் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்லக் கூடாது என்பது அவர் அப்பா சொன்ன வாக்கு என்பதால் அதை அப்படியே கடைபிடித்து வருவதாகவும் சொல்கிறார்கள். சினிமாவுக்கு நேர்மையாக இருந்தால், சினிமா தன் நேர்மையை காட்டும் என்பார்கள். அது அவருக்கு கார்த்திக்-க்கு சாத்தியம் தான்.

விசில் சத்தங்களிலும் கைத்தட்டல்களிலும் உறைந்துவிடாமல், நடிப்பைத் தாண்டி கார்த்தி தொடங்கியிருக்கிற ’உழவன் பவுண்டேஷன்’ இன்றைய சமூகத்துக்கு இயல்பான தேவை. நடிகன் என்பவனும் சமூகத்தின் அங்கம் என்பதை உணர்ந்து ஆக்கப்பூர்வ செயலில் இறங்கியிருக்கும் கார்த்தி-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்பது வெறும் வார்த்தையல்ல. அது அதையும் தாண்டியது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in