
``தனக்கு சாதி குறித்து எதுவும் தெரியாது'' என நடிகர் கார்த்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.
இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. தீபாவளி பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக நடிகர் கார்த்தி புரோமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் ’மெட்ராஸ்’ படம் சாதி சார்ந்தது என்ற முத்திரை விழுந்துள்ளே என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கார்த்தி, “நான் மெட்ராஸில் வளர்ந்தவன். எனக்கு சாதி தெரியாது. எனக்கு மட்டுமல்ல மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது. நமக்கு பேர் மட்டும் தான் தெரியும். அதை தாண்டி எதுவுமே பார்த்தது கிடையாது. அந்த கதையில் எனக்கு பிடித்திருந்தது சுவர் தான்.
உலக சினிமா மாதிரி ஒரு சுவரை சுற்றி ஒரு அரசியல், இது மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதில் இருக்கிற கதாபாத்திரங்கள் மட்டும் தான் கண்ணில் பட்டது. அதை சாதி படமாக எப்போதுமே பார்த்ததில்லை. இப்போது வரைக்கும். எனக்கு அந்த படத்தில் சாதி இருப்பதாக தெரியவில்லை. அது அவரவர் பார்வையில்தான் இருக்கிறது" என்றார்.
மேலும் ‘ஜப்பான்’ படம் குறித்து இயக்குநர்கள் ராஜூமுருகன், அனுமோல் ஆகியோருடன் பேட்டி கொடுத்துள்ளார் கார்த்தி.