தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல நட்சத்திரங்கள் பின்னாளில் திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருவார்கள். சிலர் குழந்தை நட்சத்திரமாக நடித்தது போதும் என முடிவெடுத்து வளர்ந்த பின்பு வேறு துறையில் கவனம் செலுத்துவார்கள். அப்படி திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சில நடிகர், நடிகைகள் குறித்துபார்க்கலாம் வாங்க.
ஐந்து வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். சாவித்ரி-ஜெமினி கணேசனின் மகனாக அறிமுகமானார். மழலை முகத்துடன் காதில் பூ, நெற்றியில் திருநீறு சகிதமாக ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என அவர் பாடி நடித்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக ‘பார்த்தால் பசிதீரும்’, ‘பாத காணிக்கை’, ‘வானம்பாடி’, ‘ஆனந்தஜோதி’ என ஏராளமான படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன் இப்போது படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
'வெற்றி’ என்ற படம் மூலம் தனது தந்தை எஸ்.ஏ.சி. இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பத்தாவது வயதில் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். பின்பு, ’குடும்பம்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ‘எங்கள் நீதி’, ‘வசந்த ராகம்’ உள்ளிட்டப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தனது 20வது வயதில் ‘நாளைய தீர்ப்பு’ மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோ என்ற பயணத்தில் எப்படி இவரது தந்தை எஸ்.ஏ.சியின் பங்கு முக்கியமானதோ அதுபோலவே நடிகர் விஜயகாந்தின் பங்கும் தவிர்க்க முடியாதது. இதனை பல மேடைகளில் நடிகர் விஜய் நினைவு கூர்ந்துள்ளார்.
தனது தந்தையால் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு ஹீரோவான இன்னொருவர் நடிகர் சிலம்பரசன். தான் கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே தனது மகனை குழந்தை நட்சத்திரமாக தோன்ற வைத்தார் டி.ஆர். ‘உறவைக் காத்த கிளி’, ‘மைதிலி என்னைக் காதலி’ என எக்கச்சக்கமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு கடந்த 2002ம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தில் கதாநாயகன் ஆனார்.
மலையாள கிறிஸ்டியன் குடும்பத்தைச் சேர்ந்த ஷாலினி மற்றும் ஷாம்லி இருவரின் தந்தையான பாபுவுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையால் கேரளாவில் இருந்து மெட்ராஸிற்கு வந்தார். ஆனால், அவரின் ஆசை நிராசையாக தனது குழந்தைகள் மூலம் தன் கனவை நிறைவேற்றிக் கொண்டார்.
ஷாலினி மற்றும் ஷாம்லி இருவரும் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெற்றிகரமான குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்தனர். ’பிள்ளை நிலா’, ‘ஓசை’, ‘அஞ்சலி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இருவரும் வளர்ந்த பின்பும் திரையில் கதாநாயகிகளாக ஜொலித்தார்கள்.
'அழகே பொறாமைப்படும் பேரழகு’ என திரையில் கதாநாயகியாக ஜொலித்த நடிகை ஸ்ரீதேவியும் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகி ஆனவர் தான். ‘கந்தன் கருணை’ படத்தில் முருகனாக அறிமுகமானவர் அதன் பிறகு ’துணைவன்’, ‘நம் நாடு’, ‘குலவிளக்கு’ என ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
ரிக்ஷா மாமா...ரிக்ஷா மாமா என அந்த மழலை குரலையும் அமுல் பேபி போன்ற அந்த முகத்தையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். சத்யராஜ் நடித்த ‘ரிக்ஷா மாமா’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதேவி அடுத்து ’டேவிட் அங்கிள்’, ‘அம்மா வந்தாச்சு’ என ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு கதாநாயகி ஆனார்.
நடிகை ராஷ்மிகா கடந்த 2016ம் ஆண்டு ’கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும் சிறுவயதில் 'கோகுலம்’ போன்ற குழந்தைகளுக்கான மேகசினில் இவரது படம் அட்டைப்படமாக வந்திருக்கிறது.