HBD Geminiganesan| சாவித்திரியுடன் காதல் தொடங்கிய ‘மிஸ்ஸியம்மா’ படமும், பிரிய வைத்த ‘பிராப்தம்’ படமும்!

சாவித்திரி- ஜெமினி கணேசன்
சாவித்திரி- ஜெமினி கணேசன்

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். என்ற இருபெரும் துருவங்கள் கோலோச்சிய சமயத்தில் தனக்கென்று திரைத்துறையில் தனி இடத்தையும் ரசிகர்களையும் உருவாக்குவது சாதாரண விஷயம் இல்லை. அப்படி சிவாஜி-எம்.ஜி.ஆர். காலத்தில் உள்ளே நுழைந்து தனக்கான இடத்தை உருவாக்கியவர் நடிகர் ஜெமினி கணேசன். எத்தனை எத்தனைப் படங்கள், எத்தனை விதமான கதாபாத்திரங்கள்! ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசனின் 103வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

ஜெமினி கணேசன்...
ஜெமினி கணேசன்...

புதுக்கோட்டையில் வசதியான குடும்பத்தில் ராமசாமி-கங்கம்மா தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் கணேஷ். புதுக்கோட்டை, சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். மருத்துவக்கனவைச் சுமந்தவருக்கு அவரது தந்தை மற்றும் பாட்டியின் மரணம் திசை மாற்றியது. பின்னாளில் தனது மகன், மகள்களை மருத்துவர்களாக்கி தன் ஆசையை அவர் நிறைவேற்றிக் கொண்டது வேறு கதை. சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி. கெமிஸ்ட்ரி முடித்துவிட்டு, அந்தக் கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியை ஆரம்பித்தார்.

இவருடைய 19வது வயதில் அலமேலு என்பவருடன் திருமணம் நடந்தது. கல்லூரியில் வேலைப் பார்த்தபோதே சினிமா மீது ஆசை வர ஜெமினி ஸ்டுடியோவில் சேர முயற்சி எடுத்தார். ஆனால், ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்புத் தேடி வருபவர்களின் திறமையைக் கண்டுபிடித்து அனுப்பும் பணியில் இருந்தார் ஜெமினி கணேசன். அங்கு வேலைப் பார்த்ததால் அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது.

முதல் மனைவி அலமேலுவுடன் ஜெமினி
முதல் மனைவி அலமேலுவுடன் ஜெமினி

1947-ம் ஆண்டு வெளியான ‘மிஸ் மாலினி’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றின் மூலம் திரையுலகில் ஜெமினி அறிமுகமானார். அதன் பிறகு, ‘தாய் உள்ளம்’, ‘மனம் போல் மாங்கல்யம்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘பாசமலர்’ என பல படங்களில் நடித்த குடும்பங்கள் கொண்டாடும் காதல் மன்னனாக வலம் வந்தார். நடிகை சாவித்திரி மீது அளவுகடந்த அன்பும், காதலும் வைத்திருந்தார் ஜெமினி.

ஜெமினி கணேசன் - சாவித்திரி
ஜெமினி கணேசன் - சாவித்திரி

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ‘மனம் போல் மாங்கல்யம்’. அவர்கள் இருவருக்கும் காதல் உண்டாகக் காரணமாக அமைந்த படம் ‘மிஸ்ஸியம்மா’. சாவித்திரி மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்றால் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ படத்தில் வெள்ளையத்தேவனாக நடிக்க வந்த வாய்ப்பை சாவித்திரிக்காக விடத்துணிந்தார். ஏனெனில், அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார்.

ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன்
ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன்

ஆனால், பின்பு சிவாஜியின் அன்பிற்காக ஜெய்ப்பூரில் நடந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றார் ஜெமினி. ‘மிஸ்ஸியம்மா’ எப்படி ஜெமினி-சாவித்திரி காதலுக்கு வழிவகுத்ததோ அதேபோல அவர்களது பிரிவுக்கு முதல் விதையிட்ட படம் ‘பிராப்தம்’.

தெலுங்கில் வெளியான ’மூகமனசுலு’ படத்தைத் தயாரித்து, இயக்க ஆசைப்பட்ட சாவித்திரியிடம் இந்தப் படத்தைத் தமிழில் தயாரிப்பது ஆபத்து என எச்சரிக்கை விடுத்தார் ஜெமினி. இதனால், இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், ஜெமினி சொன்னது போலவே, இந்தப் படம் சாவித்திரிக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது.

சிவாஜி கணேசனுடன் கிட்டத்தட்ட 13 படங்கள் இணைந்து நடித்த ஜெமினி, எம்.ஜி.ஆருடன் ஒரே படத்தில் மட்டும்தான் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசன்
ஜெமினி கணேசன்

இவர்கள் மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், விஜயகாந்த், பிரபுதேவா, அர்ஜூன் என தனது அடுத்த தலைமுறை நாயகர்களுடனும் இணைந்து நடித்தார் ஜெமினி. இவருடன் அதிக படங்களில் இணைந்து நடித்த கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி மற்றும் பத்மினி. ’பத்மஸ்ரீ’ விருது பெற்ற ஜெமினி கணேசன் கடந்த 2005 மார்ச் 22- ம் நாள் அதிகாலை இரண்டு மணியளவில் காலமானார். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஜெமினிகணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in