பெருங்கனவு... 30 வருஷ போராட்டம்... 'என் உயிர் தோழன்’ நடிகர் பாபு காலமானார்!

பெருங்கனவு... 30 வருஷ போராட்டம்... 'என் உயிர் தோழன்’  நடிகர் பாபு காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பாபு நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார்.

தான் அறிமுகமான படத்தின் பெயராலேயே ‘என் உயிர் தோழன்’ பாபு என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அந்தப் படத்திற்குப் பிறகு ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் நடித்தார். தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படம் தான் அவரது மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.

’என் உயிர் தோழன்’ பாபு
’என் உயிர் தோழன்’ பாபு

கண்களில் கனவுகளைத் தேக்கி, திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த பாபுவின் உச்சம் யாரும் எதிர்பார்த்திராதது. அதன் பின்னான்ன வீழ்ச்சியும் பலருக்கு அதிர்ச்சி.

கிராமத்து கதைகளில் அத்தனை பாந்தமாய் பொருந்தியிருந்தார் பாபு. தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும், வெள்ளந்தி மனிதர்களின் உடல்மொழியாலும் அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த பாபு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே, படுத்த படுக்கையானார். அதன் பின்னான 30 வருஷ போராட்டம். மீண்டும் எழுந்து நிற்போம் என்கிற அத்தனை நம்பிக்கையும், முயற்சியும் வீணாய் போனது. படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது அந்த விபரீதம் நிகழ்ந்தது.

மாடியில் இருந்து கதாநாயகன் குதிக்க வேண்டும். ‘டூப் போட்டுக் கொள்ளலாம்’ என்று படக்குழுவினர் சொல்லியும் அதை மறுத்த பாபு, காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என சொல்லி அவரே கீழே குதித்து இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பாபு தவறுதலாக வேறு இடத்தில் விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்து நொறுங்கியது. முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தும் அது முழுதாக பலனளிக்கவில்லை.

’என் உயிர் தோழன்’ பாபு
’என் உயிர் தோழன்’ பாபு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று நலம் விசாரித்து தேம்பியழுத வீடியோ பலரையும் நெகிழச் செய்தது. பாபுவின் 80 வயதான தாயார் மட்டுமே அவரை உடனிருந்து இறுதி வரை கவனித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு காலமானார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்த பாபுவின் மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in