நடிகர் துல்கர் சல்மான் வீட்டு கார் டிரைவர் மயங்கி விழுந்து சாவு: சென்னையில் பரபரப்பு

நடிகர் துல்கர் சல்மான்.
நடிகர் துல்கர் சல்மான்.

சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் கார் ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரம் கிரின்வேஸ்லேன் பகுதியில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் 'சீதாராமம்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'சார்லி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர். இவரது வீட்டில் வடபழனி ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்த பாஸ்கர்(51) என்பவர் ஒரு மாதமாக ஆக்டிங் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தினமும் துல்கர்சல்மானின் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து சென்று வரும் பணியில் ஓட்டுநர் பாஸ்கர் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகர் துல்கர் சல்மானை விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதால், அவரது வீட்டிற்கு நேற்று இரவே ஒட்டுநர் பாஸ்கர் வந்து தங்கியுள்ளார். இதன் பின் பீட்சா மற்றும் கோக் குடித்து விட்டு அறையில் பாஸ்கர் தூங்கச் சென்றார். நள்ளிரவு 2.30 மணியளவில் திடீரென பாஸ்கருக்கு அதிகளவில் இருமல் வந்து மயங்கிய விழுந்தார். இதைப் பார்த்து பணியாளர் ஸ்ரீஜித் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே பாஸ்கர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த அபிராமபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே பாஸ்கர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் துல்கர்சல்மான் வீட்டில் கார் ஒட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in