நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜின் 70-வது பிறந்தநாள் இன்று. அவரை திரை உலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் பட்டறையில் பயிற்சிபெற்ற நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், பாக்யராஜ் குறித்து நெகிழ்ச்சியாக தன் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக இருந்து தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் கே.பாக்யராஜ். நடிப்பு, வசனம், இயக்கம் என பலத்துறைகளிலும் முத்திரை பதித்தவர். இன்று அனைவராலும் அறியப்படும் நடிகர் பார்த்திபன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், வி.சேகர் உள்ளிட்டோர் பாக்யராஜிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்தான். இந்நிலையில் நடிகர் பாக்யராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் குறித்து நன்றிப்பெருக்கோடு நடிகர் பார்த்திபன் தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அதில் பார்த்திபன், “ஒரு தட்டில் அரிசி குவித்து, அதில் பிஞ்சு விரல் பிடித்து ‘அ’ எழுதி, இன்னும் 246-ஐ அறிமுகம் செய்து வைப்பதைப் போல.. தன் ‘ஆர்’ மோதிரக்கையால் என் அறிவில் சினிமாவைக் கொட்டி, இன்று நான் உண்ணும் அரிசியில் என் பெயரை கொட்டை எழுத்துகளில் எழுதி, என் நாட்காட்டியில் கிழித்தெறியும் ஒவ்வொரு நாளையும் சிறந்த தினமாக்கிய என் குருநாதரின் பிறந்த தினமின்று. நான் வணங்க, நீங்கள் வாழ்த்த,நாளும் அவர் ஆரோக்கியம் ஆரோக்கணமாகி புகழ் சூழ வாழவேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.