`அவர் இல்லாமல் நான் இல்லை'- சினிமாவில் இருபது வருட பயணம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!

`அவர் இல்லாமல் நான் இல்லை'- சினிமாவில் இருபது வருட பயணம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!
Silverscreen Inc.

கடந்த 2002-ம் வருடம் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தில் தன் இளைய மகன் தனுஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியபோது அந்த ஒடிசலான தேகம் கொண்ட சினிமாவில் கதாநாயகனுக்கான கவர்ச்சி எதுவும் இல்லாத அந்த இளைஞனை யாரும் கதாநாயகனாக ஏற்கவில்லை.

அடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் திவ்யா திவ்யா என சுற்றி வரும் இளைஞன், 'திருடா திருடி', 'சுள்ளான்' என சினிமாவில் நுழைந்த முதல் ஐந்து வருடங்கள் தன் உருவகேலியையும் தாண்டி தன் திறமையை நிரூபித்து தனக்கான இடத்தை பிடிக்க தனுஷ் போராட வேண்டி இருந்தது.

'புதுப்பேட்டை' படம் நடிகராக இவருக்கு அடையாளம் கொடுத்தாலும் 2007-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'பொல்லாதவன்' தனுஷ், வெற்றிமாறன் இருவரது சினிமா வாழ்விலும் திரும்பி பார்க்க வைத்த மிக பெரிய திருப்புமுனை.

தனுஷ் திரையுலகில் நல்ல நடிகராக நிலை நிறுத்தி கொள்ள உதவிய திரைப்படம் அது. பின்பு, 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'மாப்பிள்ளை' என தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்ஷியல் நாயகனாகவும் இன்னொரு பக்கம் 'மயக்கம் என்ன', 'ஆடுகளம்', 'அசுரன்' என நடிப்புக்கு தீனி போடும் படங்கள் என இரண்டையும் பேலன்ஸ் செய்து நடித்து வந்தார் தனுஷ்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என தன் பன்முகத்தையும் அவர் நிரூபிக்க தவறவில்லை. கோலிவுட்டில் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்ட நடிகர் இன்று 20 வருடத்தில் ஹாலிவுட்டில் நடிகராக தடம் பதித்து தலை நிமிர்ந்து நிற்கிறார்.

சினிமாவில் 20 வருடங்கள் நிறைவு செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில், 'சினிமாவுக்குள் நுழைந்து 20 வருடங்கள் கடந்து விட்டது என்பதை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. 'துள்ளுவதோ இளமை' ஆரம்பித்த காலத்தில் இத்தனை காலம் கடப்பேன் என நினைக்கவில்லை. இந்த ஆதரவிற்கும் அன்பிற்கும் எனது ரசிகர்களுக்கு நன்றி. ஊடக நண்பர்கள், சினிமா விரும்பிகள், இணையதள நண்பர்களுக்கும் நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கேமராவுக்கு பின் இருந்து வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.

என்னுடைய குருவும் அண்ணனுமான செல்வராகவனுக்கும் அப்பா கஸ்தூரி ராஜாவுக்கும் நன்றி. கடைசியாக என் அம்மாவிற்கு நன்றி. அவரது பிரார்த்தனை தான் என்னை இத்தனை தூரம் பாதுகாத்து கொண்டு வந்திருக்கிறது. அவர் இல்லாமல் நான் இல்லை. நான் எங்கோ ஒரு இடத்தில் படித்திருக்கிறேன். நீங்கள் ஒரு விஷயத்தில் பிஸியாக இருப்பது தான் வாழ்க்கை. இதை நான் ஒத்து கொள்கிறேன். இருக்கும் ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். எண்ணம் போல் வாழ்க்கை!' என முடித்துள்ளார் தனுஷ். தனுஷின் இந்த பயணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in