இயக்குநர் பாரதிராஜாவை நெகிழ வைத்த நடிகர் தனுஷ்: மருத்துவமனையில் நடந்தது என்ன?

இயக்குநர் பாரதிராஜாவை நெகிழ வைத்த நடிகர் தனுஷ்: மருத்துவமனையில் நடந்தது என்ன?

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை நடிகர் தனுஷ் சந்தித்து 2 மணி நேரம் பேசியுள்ளார். அப்போது மருத்துவச் செலவு மொத்த செலவையும் ஏற்பதாக அவர் கூறியதால் இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ந்து போனதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு தனி இடம் உண்டு. காட்சியமைப்பில் அவர் காட்டும் அக்கறை, அரங்கிற்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்து வந்த தனித்தன்மை இன்றளவும் இளைய படைப்பாளிகளுக்கு உற்சாக டானிக்காக இருக்கிறது. அவர் இயக்கிய மண் மணம் மாறாத படங்கள் தனித்த அடையாளம் கொண்டவை. அவர் இயக்கிய '16 வயதினிலே', 'மண் வாசனை', 'கடலோரக் கவிதைகள்', 'கருத்தம்மா', 'முதல் மரியாதை', 'கிழக்குச் சீமையிலே' ஆகிய படங்கள் தனி முத்திரை படைத்தவை.

இயக்குநர் பாரதிராஜாவிற்கு 80 வயது ஆகிவிட்டாலும் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் பாரதிராஜாவின் நடிப்பை பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரை நடிகர் தனுஷ் சந்தித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளார். தனுஷின் வருகையால் பாரதிராஜா மிகுந்த உற்சாகமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் இருந்து நடிகர் தனுஷ் கிளம்பும் போது, மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று பேசியுள்ளார். 'பாரதிராஜா டிஸ்சார்ஜ் ஆனதும், அவருக்கான மருத்துவம் பார்த்த மொத்த பில்லையும் எனக்கு அனுப்பி விடுங்கள். நான் செலுத்தி விடுகிறேன்’ என்று கூறியுள்ளார். ஆனால், ஏற்கெனவே புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்குநர் பாரதிராஜாவிற்கு உதவ முன்வந்தது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in