
நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவாக அவரது பயோபிக்கில் நடிக்க இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 80, 90-ம் ஆண்டுகளில் முன்னணி இசையமைப்பாளராகக் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் இருந்து தமிழ் சினிமா திரையுலகில் நுழைந்து தன் இசையால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயம் கவர்ந்தவரின் வாழ்க்கைத் தற்போது படமாக உருவாகிறது.
இந்தப் பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடிக்கப் போகிறார் என்ற செய்தி முன்பே வலம் வந்தது. இந்த நிலையில், இது தற்போது உறுதியாகி இருக்கிறது. இதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளையராஜாவை சந்தித்து அவருடன் இதற்காக தனுஷ் உரையாடி வருகிறார்.
நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது நமக்குத் தெரியும். அவரின் பல பாடல்கள் தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது என்பதையும் அவர் கூறியிருக்கிறார். சமீபத்தில் கூட இளையராஜாவின் இசையில் ‘விடுதலை’ படத்தில் பாடல் பாடியது பற்றியும் மகிழ்ச்சியை தனுஷ் வெளிப்படுத்தினார்.
தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ மற்றும் அவரது ஐம்பதாவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கி 2025-ம் ஆண்டு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை கனெக்ட் மீடியா தயாரிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் தனுஷ் இயக்குவார் எனவும் தெரிகிறது.