
சினிமாவை வடக்கு- தெற்கு என பிரித்து பார்க்க விரும்பவில்லை என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள ‘தி க்ரேமேன்’ படம் மூலமாக நடிகர் தனுஷ் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இன்று இந்திய நேரப்படி மதியம் 12.30க்கு நெட்ஃபிளிக்ஸ்ஸில் படம் வெளியாகிறது. இதில் நடிகர் தனுஷ் முதன் முறையாக ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
படத்தின் புரோமோஷன்களுக்காக கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் படக்குழு பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறது. அதில் நடிகர் தனுஷிடம் வடக்கு தெற்கு என இந்திய சினிமாவைப் பிரித்து பார்ப்பது தொடர்பான கேள்வி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது எழுப்பப்பட்டது.
ஏனெனில் சமீப காலமாக பான்-இந்தியா படங்கள், இந்திய சினிமாவை வடக்கு- தெற்கு என பிரித்து பார்ப்பது போன்ற விவாதங்கள் தொடர்ந்து கவனிக்கத்தக்கதாக மாறி வருகிறது. இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, “வட இந்திய நடிகர், தென்னிந்திய நடிகர் என பிரித்து அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. சினிமாத்துறை என்பது மிகவும் பெரியது. வடக்கு, தெற்கு என்ற பாகுபாட்டை மறந்து அனைத்தும் இதன் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவது தான் சிறந்த ஒன்றாக இருக்கும்.
வட இந்திய நடிகர்கள், தென்னிந்திய நடிகர்கள் என்ற பாகுப்பாட்டை மறந்து இந்திய நடிகர்கள் என்று அடையாளப்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லா படங்களுமே தேசிய படங்கள் தான்” என்றும் அந்த சந்திப்பில் பேசியுள்ளார் நடிகர் தனுஷ்.
’தி கிரேமேன்’ படம் தவிர்த்து, இயக்குநர் செல்வராகவனுடன் ‘நானே வருவேன்’, தெலுங்கு- தமிழ் என பைலிங்குவலாக உருவாகி வரும் ‘வாத்தி’ ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.