
லீசுக்கு வீடு எடுத்து பணம் கொடுத்து ஏமாந்ததாக நடிகர் டேனியல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில், இதேபோன்று நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்தும் ஏமாற்றப்பட்டார்.
தமிழில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’மரகத நாணயம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் டேனியல். இதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வசித்து வந்த நிலையில் டேனியல் சென்னையில் லீசுக்கு வீடு தேடி உள்ளார்.
நோ புரோக்கர் என்ற பிரபல இணையதளத்தில் அவர் வீடு தேடிய போது, எஸ்.டி.எஸ்.கே என்ற தனியார் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டுள்ளது. அப்போது அவரிடம் பேசிய அந்த நிறுவனம், 17 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அதன் மூலம் வீட்டின் உரிமையாளருக்கு மாதம் தோறும் வாடகை செலுத்தப்படும் என்று பேசியுள்ளது. இதுமட்டுமல்லாது, இரண்டு ஆண்டுகளில் கொடுத்த 17 லட்ச ரூபாயும் திரும்பித் தரப்படும் எனவும் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் பேச்சை நம்பிய நடிகர் டேனியல் சென்னை போரூரில் வீடு ஒன்றை ஒப்பந்தம் செய்து குடியேறி உள்ளார்.
இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அந்த நிறுவனம் மூன்று மாதங்கள் வாடகை செலுத்தாததால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் டேனியலிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் டேனி, தன்னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட எஸ்.டி.எஸ்.கே தனியார் நிறுவனம் ஏமாற்றியதாக சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ள டேனியல், ’நாங்களே வாடகை கட்டுகிறோம் என்று சொல்லி, வாடகை சில மாதம் கட்டினார்கள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகே மோசடி செய்து ஓடிவிட்டார்கள்’ என விரிவாகப் பேசியுள்ளார்.
முன்னதாக பிரபுதேவா தம்பி நடிகர் நாகேந்திர பிரசாத் கேர் டேக்கர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தனது வீட்டை லீசுக்கு விட்டு அந்த நிறுவனத்தால் மோசடிக்குள்ளாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இதையும் வாசிக்கலாமே...
மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!
'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!
என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!