நடிகர் சோ : மனோரமாவின் ‘டேக் 222’, எதிரில் இருந்தவரின் ‘போண்டா’, வி.எஸ்.ராகவனுக்கு கிச்சுகிச்சு...

- சோ நினைவு நாளில் இதுவரை வெளிவராத அவரின் சேட்டைகளும் குணங்களும்!
சோ
சோ

தமிழில் நீண்ட பெயர் கொண்டவர்கள் பிரபலமாகியிருக்கிறார்கள். எம்.ஜி.ராமச்சந்திரன், பிறகு எம்ஜிஆர் என்றானார். அதேபோல், வி.சி.கணேசன், சிவாஜி கணேசன் என்றானார். சிவாஜி என்றே அழைக்கப்பட்டார். எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி, நாகேஷ், கமல், ரஜினி, டி.எம்.எஸ்., பி.பி.எஸ். எம்.எஸ்.வி., எஸ்பி.பி., அஜித், விஜய் என்று சினிமாவுக்கும் மூன்றெழுத்துக்கும் ஏதோவொரு பந்தம் உண்டு போல. இரண்டெழுத்துப் பெயர் கொண்டவர்கள் கூட நம் மனதில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஓரெழுத்து... ஒரேயொரு எழுத்துகொண்டவர்கள் எவரேனும் பிரபலமாகியிருக்கிறார்களா. அல்லது நம்மூரில் உள்ளவர்கள் யாராவது ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!

இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்.

பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார்.

பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது.

அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது.

சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதைக் கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள்.

’சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ. சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார்.

‘’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’ என்கிறார் அல்லயன்ஸ் பதிப்பகத்தின் ஸ்ரீநிவாசன்.

இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார்.

‘’என்னுடைய அப்பா முக்தா சீனிவாசனுக்கும் பெரியப்பா முக்தா ராமசாமிக்கும் மட்டுமின்றி, எங்கள் குடும்பத்துக்கும் முக்தா பிலிம்ஸ் குடும்பத்துக்குமே நெருங்கியவர் சோ. எங்கள் வீட்டு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர் வந்துவிடுவார். அதேபோல், அப்பாவும் பெரியப்பாவும் இல்லாமல் அவர் வீட்டு விழாக்கள் நடைபெறாது. அப்படியொரு பாசமும் பந்தமும் எங்களுக்குள்!

சோ அவர்களின் வாழ்க்கையே ஜாலியும் கேலியும் நிறைந்ததுதான். அவர் வாழ்வில் நடந்த சில விஷயங்கள், வியக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன. அதையெல்லாம் அடிக்கடி எங்கள் குடும்பத்தில் பேசிச் சிரித்துக் கொள்வோம்’’ என்கிற முக்தா ரவி (முக்தா சீனிவாசனின் மகன்), நம்மிடம் பிரத்யேகமாக பல சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்‌ஷனைக் கவனிப்பார் சோ.

படப்பிடிப்புத் தளத்தில், சோ இருந்து விட்டால், அங்கே மனோரமாவோ, சச்சுவோ, காத்தாடி ராமமூர்த்தியோ, நீலுவோ... யார் இருந்தாலும் அன்றைக்கு சோவின் சேட்டைகளுக்கு அவர்கள்தான் ‘அவல்’.

மனோரமாவின் ‘டேக் 222’

அப்போதெல்லாம் ‘கிளாப் போர்டு’ என்று உண்டு. அதில், டேக் 1, டேக் 2 என்று எழுதி, கேமரா முன்பு காட்டிவிட்டு, அதன் பிறகுதான் கேமரா இயங்கும். நடிகர்கள் நடிப்பார்கள். சில நடிகர்களுக்கு இரண்டு மூன்று டேக் ஆகும். சிவாஜி சார் எதையும் ஒரே டேக்கில் முடித்துவிடுவார். புது நடிகர் நடிகையருக்கு பத்துப் பன்னிரெண்டு டேக்குகள் கூட ஆகும்.

‘கிளாப் போர்டில்’ சாக்பீஸால் எழுதுவார்கள். சோவுக்கு சாக்பீஸ் எங்கிருந்து கிடைக்கும். ஷூட்டிங் கிளம்பும் போதே வீட்டிலிருந்தோ கடைக்குச் சென்றோ சாக்பீஸை பையில் போட்டுக்கொள்வாரா என்பதெல்லாம் தெரியாது. அந்த கிளாப் போர்டில், மனோரமாவின் காட்சி, சச்சுவின் காட்சி என யாருடைய காட்சியாவது எடுக்கப்பட்டிருக்கும். அதில் ‘டேக் 2’ என்று எழுதப்பட்டிருக்கும். யாருக்கும் தெரியாமல், ‘டேக் 222’ என்று எழுதிவிடுவார் சோ. கிளாப் போர்டு அடிக்கும் நபர், கிளாப் போர்டை எடுத்துவந்து, கேமராவுக்கும் மனோரமாவுக்கும் நடுவே வைத்து, மனோரமாவுக்கு நெருக்கமாக வைத்து, எத்தனையாவது டேக் என்பதை வாசிப்பார். அப்போது ‘டேக் 2’ என்பதற்கு பதிலாக, ‘டேக் 222’ என்றிருப்பதை அந்த நபர் தவறுதலாகப் படிக்க, மொத்த யூனிட்டும் சிரிக்கும். முக்தா சீனிவாசன் ‘சோ...’ என்று சிரித்தபடி கத்திக் கொண்டே இருப்பார். மனோரமா, முக்தா சீனிவாசனிடம், ‘’பாருங்கண்ணே... இவரோட சேட்டையை. ‘மனோரமா 222 டேக் வாங்குவாருப்பா’ன்னு இண்டஸ்ட்ரில சொன்னா, எனக்கு எவ்ளோ அவமானம். அவரை நாலு போடு போடுங்கண்ணே’’ என்பார் சிரித்தபடி அதேசமயம் செல்லமாகக் கோபித்தபடி!

‘லூப் டிராக்கிங்: வி.எஸ்.ராகவனை கிச்சுகிச்சு மூட்டிய சோ

அப்போதெல்லாம் ‘லூப் டிராக்கிங்’ என்பது இருந்தது. வி.எஸ்.ராகவன், அற்புதமான குணச்சித்திர நடிகர். சோகம் பொங்கும் காட்சிகளில் அப்படியே வசனம் பேசி நம்மைக் கலங்கடித்துவிடுவார். ‘லூப் டிராக்கிங்’கில், வி.எஸ்.ராகவன் உணர்ச்சிபூர்வ வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது, நடிகர் சோ, மெல்ல அவர் பின்னால் சென்று, வி.எஸ்.ராகவனின் இரண்டு பக்க விலா வயிற்றில், கிச்சுகிச்சு மூட்டிவிடுவாராம்! அழுதபடி வசனம் பேசுபவர், வெடித்துச் சிரிப்பார். எல்லோரும் சோவின் ரகளையால் இன்னும் குலுங்கிச் சிரிப்பார்கள். ‘’டேய் சோ... முதல்ல நான் பேசி முடிக்கறவரை, வெளியே போய் தம் அடிச்சிட்டு வாடா’’ என்று வி.எஸ்.ராகவன், சிகரெட்டைக் கொடுத்து சோவை அனுப்பிவைப்பாராம்!

‘ராக்கோழி’ சோ!

முக்தா பிலிம்ஸ் அலுவலகம் என்பது சோவிற்கு இரண்டாவது வீடு. பல இரவுகள் அங்கேயே தங்கி, கதை வசனம், நாடகமெல்லாம் எழுதுவார். அவருக்கு ‘ராக்கோழி’ என்று பெயரே வைத்தார்கள். முக்தா ரவியின் அத்தை மகன் கே.ஆர்.ஸ்ரீதர் என்பவர், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஒருபக்கம் இவர் படிக்க, இன்னொரு பக்கம் சோ எழுதிக்கொண்டே இருப்பார். இரண்டுபேருமே, சிகரெட் பிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல் கல்லூரி மாணவனுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பார் சோ. நள்ளிரவில், டீக்கடைக்கு அழைத்துச் செல்வார். அங்கேயும் இரண்டு மூன்று சிகரெட்டுகளைப் புகைப்பார். ஒருகட்டத்தில், முக்தா ரவியின் அத்தை மகன் ஸ்ரீதரை, ஏதேனும் விழாக்களுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு இருவரும் நெருக்கமாகிவிட்டார்கள்.

ரோலக்ஸ் வாட்ச்’ - கல்யாண கலாட்டா!

நடிகர் சோவுக்கு ஒரு பழக்கம் உண்டு. நண்பர்கள், உறவினர்கள், திரையுலகப் பிரபலங்கள் என எவர் வீட்டு விழா விசேஷங்கள் என்றாலும் ‘பி.ஆர்.அண்ட் சன்ஸ்’ கடைக்குச் சென்று ரோலக்ஸ் வாட்ச் வாங்குவார். அப்போதே அதன் விலை இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேலே!

ஒரு திருமணம். சோ செல்லவேண்டும். தனியே செல்வதற்கு பதிலாக யாரையாவது அழைத்துச் செல்வார் எப்போதும். அன்றைக்கு முக்தா ரவியின் அத்தை மகன் ஸ்ரீதரை அழைத்துக்கொண்டு கல்யாண மண்டபத்துக்குச் சென்றார். உள்ளே நுழைந்ததும் திருதிருவென முழித்தார் சோ.

சோ, முக்தா ரவி
சோ, முக்தா ரவி

மண்டபத்தில் உள்ளவர்களும் மலங்க மலங்க விழித்தார்கள். அதேசமயம், கல்யாணத்துக்கு சோ மாதிரி பிரபலம் வந்தால் எப்படியிருக்கும்? அப்படியே பெருங்கூட்டமாக அவரைச் சூழ்ந்தார்கள். அவரைத் தூக்கிக்கொண்டு செல்லாத குறையாக, மேடையேற்றினார்கள். ஒன்றுமே புரியவில்லை சோவுக்கு. ‘விஸ்வநாதன்........’ என்று இழுத்தபடி கேட்டார். ’விஸ்வநாதன் விஸ்வநாதன்’ என்று எல்லோரும் கத்தினார்கள். யாரோ ஒருவர் ஓடிவந்து, சோவுக்கு நமஸ்காரம் சொன்னார். இந்த விஸ்வநாதன் வேறு யாரோ. என்ன செய்வது... என்ன சொல்வது என்றே தெரியவில்லை சோவுக்கு. கையில் கிஃப்ட் பாக்ஸ். வேறுவழியில்லாமல் மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, அங்கே சாப்பிடாமல் கிளம்பி வந்து, உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் சாப்பிட்டார்கள்.

வீட்டுக்கு வந்து கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தால்... சோவுக்கு சிரிப்பைத் தாங்கமுடியவில்லை. அன்றைக்கு ஜனவரி 26-ம் தேதி. ஆனால், சோவிடம் உள்ள கல்யாணப் பத்திரிகை, பிப்ரவரி 26-ம் தேதிக்கான கல்யாணப் பத்திரிகை. ‘’டேய் ஸ்ரீதரா... சோ கூட சேர்ந்துட்டே. எந்த எக்ஸாம், என்ன, என்னிக்கின்னு சரியாப் பாத்துட்டுப் போய் எழுதுடா’’ என்று முக்தா குடும்பமே கிண்டலடித்ததெல்லாம் நடந்திருக்கிறது.

‘PICK' ஆகாத ‘PICKWIK' பத்திரிகை

’துக்ளக்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தினார் சோ என்பது, மிகப்பெரிய விற்பனை செய்து மக்கள் மனங்களில் பெரிய தாக்கத்தையெல்லாம் ஏற்படுத்தியது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருகட்டத்தில், சோவுக்கு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கவேண்டும் என்கிற ஆசை வந்தது. ‘PICKWIK' என்கிற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையைக் கொண்டு வந்தார். ‘துக்ளக்’ போலவே இதையும் மாதமிரு முறை பத்திரிகையாக வெளியிட்டார். ஆனால், ‘துக்ளக்’ அளவுக்கு இந்த ஆங்கிலப் பத்திரிகை ஹிட்டடிக்கவில்லை. மிகப்பெரிய நஷ்டத்தையும் தந்தது. ஒருகட்டத்தில் பத்திரிகை வரவர, நஷ்ட எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

ஆங்கிலப் பத்திரிகையை நிறுத்தும் முடிவுக்கு வந்தார் சோ. இதுகுறித்து முக்தா சீனிவாசன், ‘’என்னப்பா உன் இங்கிலீஷ் பத்திரிகை இப்படி கவுத்துவிட்ருச்சே...’’ என்று சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு சோ, ‘'மக்கள் யாருமே இந்தப் பத்திரிகையை ‘PICK' பண்ணலை. அதனால நம்ம 'WIK' கழண்டிருச்சு. விடுங்க... பாத்துக்கலாம்’’ என்று டைமிங் காமெடியாகச் சொன்னார். வலியைக் கூட காமெடியாக்குகிற நெஞ்சுரமும் ‘டேக் இட் ஈஸி’ குணமும்தான் சோ எனும் மனிதரின் ஸ்பெஷாலிட்டி.

’இதை நீ எழுதலை, கண்ணதாசன் தானே எழுதினாரு!’

‘நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி. “இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார்.

‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க, ‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையாக் கேட்டா என்ன அர்த்தம்? அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ஆனந்தி பிலிம்ஸ் செட்டியாருக்கு உதவி

திரையுலகில், ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியாரை எவரும் மறக்கமுடியாது. அவர் பட விநியோகம் செய்தும் படங்களை எடுத்தும் மிகப்பெரிய நஷ்டத்தில் இருந்தார். கலைஞருக்கு வேண்டப்பட்டவர் இவர். அதேசமயம் சோவுக்கும் நல்ல நண்பர். சோவிடம் படம், நஷ்ட விவரங்களையெல்லாம் சொல்ல, வேணு செட்டியாரை முக்தா சீனிவாசனிடம் அழைத்துச் சென்று, ‘’நீ படம் எடுக்கும்போது இவரையும் சேர்த்துவைச்சு படம் பண்ணு. அவருக்கு அது ஹெல்ப்பா இருக்கும்’’ என்று சோ சொன்னார்.

இதை நடிகர் ஜெய்சங்கரிடமும் சொன்னார் சோ. நல்லநாளிலேயே உதவிகளைச் செய்ய சளைக்காதவர், மலைக்காதவர் ஜெய்சங்கர். இதற்கு உடனே சம்மதித்தார். முக்தா பிலிம்ஸ், ‘வித்யா பிலிம்ஸ்’ எனும் பேனரைத் தொடங்கி, அதில் வொர்க்கிங் பார்ட்னராக வேணு செட்டியாரை இணைத்துக் கொண்டது.

அப்போது ‘நிறைகுடம்’ எடுத்துக்கொண்டிருந்தார். படத்துக்கு நியூட்டன் ஸ்டூடியோவில் செட்டுகள் போடப்பட்டிருந்தன. அதே செட்டில், ‘ஆயிரம் பொய்’ பட வேலைகளும் நடந்தன. இதில் சிவாஜி, ‘ஆயிரம் பொய்’ படத்தில் ஜெய்சங்கர். மற்றபடி வாணிஸ்ரீ, மனோரமா, வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சோ என பலரையும் இரண்டு படங்களுக்கும் ஒப்பந்தம் செய்து. குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வழங்கினார் முக்தா ராமசாமி. இரண்டு படங்களுக்கும் வி.குமார்தான் இசை. கண்ணதாசன் பாடல்கள். அவர்களுக்கும் குறைவான சம்பளம் பேசப்பட்டது.

மூன்று மாத இடைவெளிகளில் படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டார்கள். விநியோகஸ்தர்களை அழைத்து, இரண்டு படங்களையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களும் ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ என்று சந்தோஷமானார்கள். ‘நிறைகுடம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘ஆயிரம் பொய்’ சுமாரான வெற்றியைப் பெற்றுத்தந்தது. செட்டுகள் செலவு, நடிக நடிகையரின் சம்பளச் செலவு, இசையமைப்பாளரின் சம்பளச் செலவு, நேர விரயம் என்பவற்றையெல்லாம் செய்யாமல், மிகச்சிக்கனமாக படத்தை எடுத்த முக்தா சீனிவாசனும் முக்தா ராமசாமியும் வேணு செட்டியாரை அழைத்து, அந்தக் காலத்திலேயே வொர்க்கிங் பார்டனருக்குக் கொடுத்த ஷேர் தொகை... அறுபதாயிரம் ரூபாய்!

அதையடுத்து மீண்டார் வேணு செட்டியார். ‘முள்ளும் மலரும்’, ‘சிறை’ என தரமான படங்களை எடுத்து தேசியவிருதுகளை வாங்கிய தயாரிப்பாளர் என்று இன்றைக்கும் போற்றப்படுகிறார். இதற்கு அடித்தளமாக இருந்தவர் சோ.

விகடனில் ‘யாரோ இவர் யாரோ’ என்று சோ எழுதிய கதைதான், ‘ஆயிரம் பொய்’ என்று படமாக எடுக்கப்பட்டது. இதையடுத்து ‘சூரியகாந்தி’ முதலான பல படங்களில் முக்தா சீனிவாசனும் முக்தா ராமசாமியும் வேணு செட்டியாரை சேர்த்துக்கொண்டு தயாரித்தார்கள்.

அந்த ஆள் தட்டிலிருந்து ‘போண்டா’ எடுக்கட்டுமா?

எப்போதும் குறும்பு, யாரைப் பார்த்தாலும் நக்கல் பேச்சு, எவரிடம் பேசினாலும் டைமிங் காமெடி என்றே வாழ்ந்தவர் சோ. நடிகர் காத்தாடி ராமமூர்த்தியும் சோவும் பள்ளிக் காலத்து நண்பர்கள். இருவரும் ‘வாடா போடா’ என்று பேசிக்கொள்வார்கள். அடித்து விளையாடிக் கொள்வார்கள்.

இப்படித்தான் ஒருமுறை, சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘சாந்தி விஹார் ஹோட்டலுக்கு சோவும் காத்தாடி ராமமூர்த்தியும் போண்டா, காபி சாப்பிடச் சென்றார்கள். அங்கே இவர்களுக்கு எதிரே ஒருவர் போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது காத்தாடியின் காதில் ரகசியமாக, “டேய் காத்தாடி, அந்த ஆள் தட்டுலேருக்கிற போண்டாவை எடுத்து நான் சாப்பிடட்டுமா? எவ்ளோ பந்தயம் வைச்சுக்கலாம்’’ என்று கிசுகிசுக்க, வெலவெலத்துப் போனார் காத்தாடி ராமமூர்த்தி. ’வேணாம்’ என்பது போல் ஜாடை காட்டினார்.

ஆனால் சோ கேட்கவில்லை. லபக்கென எதிர் டேபிள்காரரின் போண்டாவை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, அவரைப் பார்த்துச் சிரித்தார் சோ. அந்த நபர் சோவின் நாடகங்களைப் பார்த்தவர் என்பதால், மிகவும் கூலாகச் சிரித்துக் கொண்டே... ‘’இன்னும் ரெண்டு போண்டா உங்களுக்கு ஆர்டர் பண்ணட்டுமா சோ’’ என்று கேட்க, மூவரும் சிரித்த சிரிப்பை மொத்த ‘சாந்தி விஹார்’ ஹோட்டலில் இருந்தவர்களும் திரும்பிப் பார்த்தார்களாம்!

1934-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி பிறந்த சோ, 2016-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி காலமானார். மனதில் எந்த பாரத்தையும் ஏற்றிக் கொள்ளாமல், கூடுமானவரை மனசை லேசாக்கி வைத்திருந்தால், அந்த மனமே மயிலிறகாகி சுற்றியிருப்பவர் களுக்கு இதம் தரும்; சந்தோஷம் தரும்; குதூகலப்படுத்தும்; குஷிப்படுத்தும் என்பதற்கு சோ எனும் பண்பட்ட மனிதர், ஆகச்சிறந்த உதாரணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in