நடிகர், எழுத்தாளர் சோ பிறந்தநாள்: வற்புறுத்திக் கிடைத்த சினிமா வாய்ப்பும்... விரும்பி ஏற்ற நாடக நடிப்பும்!

சோ...
சோ...

சினிமாவில் பல்துறையில் திறமை கொண்டவர்கள் அதிகம். ஆனால், திறன் கொண்ட அத்தனைத் துறைகளிலும் ஜொலிப்பவர்கள் குறைவு. அத்தகைய வெகு சிலரில் சோ மிக முக்கியமானவர்.

பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர், வழக்கறிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். அவருடைய 89வது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை இங்குப் பார்க்கலாம்.

சிவாஜியுடன் சோ...
சிவாஜியுடன் சோ...

* ஸ்ரீனிவாச ஐயர் ராமசாமி, ‘சோ’ ராமசாமியாக மாறிய கதை சுவாரஸ்யமானது. இவருடைய குடும்பத்தாருக்கு சினிமா, நாடகம் மீது பெரிதான ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், சோ அதற்கு நேரெதிர். சிறு வயதில் இருந்தே வீட்டுக்குத் தெரியாமல் நாடகங்களைப் பார்த்து வந்தார். இதனால், அவருக்கு நடிப்புத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் நடித்த முதல் நாடகம் ’கல்யாணி’. அதன் பிறகு ‘தேன்மொழியாள்’ என்ற நாடகத்தில் ’சோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பே, இவருக்கு இந்தப் பெயர் நிலைத்தது.

* நாடகங்களில் நடித்து வந்த சோவை சினிமா ஆசையோடு வரவேற்றது. ஆனால், முதலில் அந்த வாய்ப்பை மறுத்தார். 'பெற்றால் தான் பிள்ளையா' என்ற நாடகத்தை நடிகர் சிவாஜியும், இயக்குநர் பீம்சிங்கும் ஒருநாள் பார்த்தனர். நாடகம் பிடித்துப் போகவே, அதை 'பார் மகளே பார்’ என படமாக்க முடிவெடுத்தனர். அதில் சென்னை பாஷை பேசி நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அந்த நாடகத்தில் நடித்த சோவே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். சினிமா வாய்ப்பு வேண்டாம் என மறுத்த சோவை வற்புறுத்திதான் அந்தப் படத்தில் நடிக்க வைத்தனர்.

சோ...
சோ...

* துணிச்சலுக்கும் துடுக்குத்தனமான பேச்சிற்கும் பெயர் போனவர் சோ. அவரது ‘துக்ளக்’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் அப்படியான ஒரு தருணத்தில்தான். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உரையாற்ற சென்ற சோவிடம் மாணவர்கள் பல கேள்விகள் கேட்டனர்.  எல்லாத் துறைகளில் இருந்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதில்களை சொல்லி அசத்தினார் சோ.

உடன்வந்த நண்பர்கள் 'எதைக் கேட்டாலும் பதில் சொல்கிறாயே... இனிமேல் இப்படி பேசக்கூடாது’ என்றனர். 'அப்படியென்றால் எழுதுகிறேன்' என்றார் சோ. 'நீ எழுதுவே... யார் அதை பத்திரிகையில் போடுவார்கள்' என்றனர் நண்பர்கள் கிண்டலாக. 'ஏன் நானே ஒரு பத்திரிகை ஆரம்பிச்சி எழுதுறேன்' என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் ‘துக்ளக்’.

'துக்ளக்’ இதழின் முதல் அட்டைப்படம்...
'துக்ளக்’ இதழின் முதல் அட்டைப்படம்...

*ஒரு முறை துக்ளக் இதழின் கடைசிப்பக்கம் அச்சிடாமல் வெறுமனே வந்தது. அதன்மேல், 'செய்தி எதுவும் இல்லை. தாய்மார்கள் தங்கள் வரவு செலவு கணக்குக்கு இந்த பக்கத்தை உபயோகப்படுத்திக்கொள்ளவும்' எனத் தெரிவித்து ரகளை செய்திருந்தார். அதேபோல, ‘துக்ளக்’ பத்திரிக்கையின் முதல் அட்டைப்படமும் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போலதான் இருந்தது.

சோவுடன் ஜெயலலிதா...
சோவுடன் ஜெயலலிதா...

* திரைத்துறையில் இவரது நெருங்கிய நண்பர்கள் நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர். அதேபோல அரசியலில் இந்திரா, மொரார்ஜி, ஆச்சார்ய கிருபாளினி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். அரசியல் தீர்க்கதரிசி என தமிழகத்தின் மிக மூத்த தலைவர்களும் அரசியலில் அவரது ஆலோசனைக்கு மதிப்பளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in