சந்திரபாபு : ஆடிப்பாடி சிரிக்கவைத்த சாகசக் கலைஞன்!

- நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
சந்திரபாபு : ஆடிப்பாடி சிரிக்கவைத்த சாகசக் கலைஞன்!

காமெடி நடிகர்களில், கலைவாணர் என்.எஸ்.கே. தொடங்கி, இன்றைக்கு வடிவேலு வரைக்கும் மிகச்சிறப்பாக பாடும் திறன் கொண்டவர்கள் உண்டு. நடுவே பல காமெடி நடிகர்களுக்கு ஏ.எல்.ராகவன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்பி.பி., மலேசியா வாசுதேவன் என பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால், பம்பரம் போல் ஆடுவதில் வல்லவர், பாடுவதில் சிறந்தவர், காமெடி நடிப்பிலும் குணச்சித்திர நடிப்பிலும் கலக்கியவர் எனும் பெருமை கொண்டவர்களில் நடிகர் சந்திரபாபு... தனிப்பிறவிதான்!

1927-ம் ஆண்டு பிறந்த சந்திரபாபு தன் 20-வது வயதில், திரைத்துறைக்கு வந்தார். ’அமராவதி’ தான் அவரது முதல் படம். அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. அதில் சந்திரபாபுவின் திறமையும் பளிச்செனத் தெரியும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. அடுத்தடுத்து வந்த படங்களில், தன் உடல்மொழியால் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். அதுவரை தமிழ் சினிமா கண்டிராத, மேற்கத்திய பாணியிலான உடல்மொழி அவருடையது!

ரஜினி தன் ஆரம்பக்கால படங்களில் வேகவேகமாகப் பேசுவாரே! அதேபோல், எஸ்.வி.ரங்காராவ் படபடவெனப் பேசுகிற ஸ்டைலைக் கொண்டவர். சந்திரபாபுவும் இப்படித்தான். தடதடவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் அமைந்த அவரது வசன உச்சரிப்பும் வேகமும் இன்னும் சிரிப்பை வரவழைத்தது.

அதேபோல், ஒல்லியான உடம்பும் உருட்டுகின்ற விழிகளும் அவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்தன. மரத்தில் உட்கார்ந்தபடி பேசுவார். பொசுக்கென கீழே விழுந்து முக எக்ஸ்பிரஷன்களைக் காட்டுவார். படம் பார்க்கும் நாம் ஆச்சரியத்தில் மூழ்கி வெளியே வருவதற்குள் நம்மை கலகலவெனச் சிரிக்கவைத்திருப்பார். தமிழ் சினிமாவில் இது புதுபாணி என்று சந்திரபாபுவின் நடிப்பையும் உடல்மொழியையும் கொண்டாடின பத்திரிகைகள்!

மெட்ராஸ் பாஷை என்றாலே லூஸ் மோகன் நினைவுக்கு வருவார். பல படங்களில் தேங்காய் சீனிவாசனும் மெட்ராஸ் பாஷையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். கமல் கூட ‘சட்டம் என் கையில்’, ‘சவால்’ மாதிரியான அந்தக் கால படங்களிலேயே சென்னை பாஷையில் புகுந்து புறப்பட்டிருக்கிறார். அதற்கும் முன்னதாக, சந்திரபாபு, மெட்ராஸ் பாஷையை அட்சரசுத்தமாகப் பேசி கரவொலியையும் நம் மனங்களையும் அள்ளிக்கொண்டார். இத்தனைக்கும், தூத்துக்குடியில் பிறந்து, மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தில் வளர்ந்து, அவ்வளவு சீக்கிரத்தில் எவருடனும் நெருங்கிப் பழகாத குணம் கொண்டவராகத்தான் சந்திரபாபு இருந்தார்.

காமெடி நடிகர்கள் என்றால் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஜோக் அடித்து, சுற்றியிருப்பவர்களை குஷிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். என்.எஸ்.கே., கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் தொடங்கி வடிவேலு வரைக்கும் அப்படித்தான். தாங்கள் இருக்குமிடத்தில் சிரிப்பு மத்தாப்பு கொளுத்திப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சந்திரபாபு, இதிலும் நேரெதிராகத்தான் இருந்தார்.

அவ்வளவு சீக்கிரத்தில் சிரிக்கவும் மாட்டார். எவருடனும் மனம் விட்டுப் பேசவும் மாட்டார். படப்பிடிப்புக்கு வந்தாலும் உடன் நடிப்பவர்களிடம் ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு, அவர் பாட்டுக்கு அவர் வேலையைக் கவனிப்பார். கையோடு கொண்டுவந்திருக்கும் ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கிவிடுவார். சந்திரபாபுவுக்கு எப்போது கோபம் வரும், ஏன் கோபம் வரும், எதைச் சொன்னால் அப்செட்டாகிவிடுவார் என்பது புரியாதபுதிராகத்தான் இருந்தது. ஆனால், ‘’சார், எல்லாம் ஓகே. டைரக்டர் சார் உங்களைக் கூப்பிட்டார்’’ என்று சொல்லிவிட்டால், சட்டென்று அவர் முகம், கேமராவுக்கு முன்னே சிரிக்கும். முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொள்வார்.

கண்கள் ஒருபக்கம் உருண்டுகொண்டிருக்க, உடல் இன்னொரு பக்கம் வளைந்துகொண்டிருக்கும். கால்கள் ஓரிடத்தில் நிற்காமல், அலைபாய்ந்துகொண்டிருக்கும். படம் பார்க்கிற நாம்தான், எங்கிருந்து எந்த இடத்துக்கு பாயப்போகிறாரோ, விழப்போகிறாரோ் என்றெல்லாம் மனம் தடதடக்கப் பார்த்துக்கொண்டிருப்போம். இல்லாத சேட்டைகளையெல்லாம் அந்தக் காட்சிக்குத் தேவையானதையெல்லாம் கேமராவுக்குக் கொடுத்துவிட்டு, முடிந்ததும் பழையபடி உம்மென்று வந்து உட்கார்ந்துகொள்வார்.

எம்ஜிஆரோ சிவாஜியோ ஜெமினியோ எஸ்.எஸ்.ஆரோ... இவருடன் யார் நடித்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடனே நடந்துகொள்வார்கள். நாம்பாட்டுக்கு ஏதாவது சொல்லி, அதில் கோபப்பட்டு, எல்லோருக்கு முன்பாகவும் சுருக்கென ஏதாவது பேசிவிட்டால் என்ன செய்வது? என்று எல்லா நடிகர்களுமே யோசித்தார்கள். அதேபோல், யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், சந்திரபாபு மாயமாய் மறைந்திருப்பார். அவரின் கார் இருந்த சுவடு கூட இருக்காது என்பார்கள். ஆனால், இறுக்கமான மனநிலையில் இருந்தாலும் பிறரின் வேதனையைக் கண்டு சும்மா இருந்துவிடமாட்டார் சந்திரபாபு. அப்படியொரு ஈரமனசு அவருக்கு!

எம்.ஆர்.ராதாவும் எம்.என்.ராஜமும் போட்டி போட்டுக்கொண்டு நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை மறக்கமுடியுமா என்ன? ஆனாலும் அந்தப் படத்திலும் சந்திரபாபு, தனித்துவத்துடன் நம் மனதில் இடம்பிடித்திருப்பார். ‘பாதகாணிக்கை’ படத்திலும் அப்படித்தான்! சந்திரபாபுவுக்கும் மாஸ்டர் கமலுக்குமான காட்சிகளெல்லாம் நம்மை உருக்கியெடுத்துவிடும். ‘மாமன் மகள்’ படத்திலும் ‘சகோதரி’ படத்திலும் இவரின் நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது. ‘சபாஷ் மீனா’வில் சிவாஜிக்கு நிகராக சந்திரபாபு கேரக்டர் அமைக்கப்பட்டிருந்தது. அதை இவரும் தன் நடிப்பால் அசத்திக்காட்டினார்.

’பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே...’ என்று பம்பரம் போல் சுழன்றுசுற்றியாடியபடி, சந்திரபாபு சொன்ன காமெடி சங்கதிகள் தனி ரகம்!

’குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ என்று பாடலின் மூலமாக கொஞ்சி விளையாடினார். ‘காதல் என்பது எதுவரை’ என்பதையும் ‘பொறந்தாலும் ஆம்பளயா பொறக்கக் கூடாது’ என்பதையும் ‘தனியா தவிக்கிற வயசு’வையும் ரசித்தது தமிழ் சினிமா. பாட்டுக் கச்சேரி வைத்திருக்கும் குழுவினர், அந்தக் காலத்தில், சி.எஸ்.ஜெயராமன் போல் பாடுவதற்கும் டி.எம்.எஸ். போல் பாடுவதற்கும் குரல் கொண்டவர்களை வைத்திருந்தார்கள். முக்கியமாக, சந்திரபாபுவின் குரலை அச்சுஅசலாகப் பாடியவர்களை போட்டாபோட்டி போட்டுக்கொண்டு, குழுவில் பத்திரப்படுத்திவைத்துக்கொண்டார்கள்.

கமல் நடித்த ‘குணா’ படத்தில் மார்க்கெட்டில் கமல் நடக்கும் வேளையில், ‘கல்யாணம்.. ஆஹா கல்யாணம்’ என்ற சந்திரபாபுவின் குரலிலான பாட்டு ஒலிக்கும். இதைக் கொண்டு பின்னாளில் தேடிப்பார்த்தால், வீணை எஸ்.பாலசந்தருக்காக இந்தப் பாடலை அசத்தலாகப் பாடி பிரமிப்பூட்டியிருந்தார் சந்திரபாபு. தவிர, இந்தப் பாடலுக்கு வீணை பாலசந்தர், சந்திரபாபுவின் ஸ்டைலில்தான் ஆட்டமும் கொண்டாட்டமும் குதியலுமாக வெளுத்துவாங்கினார்.

சிவாஜி, மூன்று வேடங்களில் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறோம். கே.பாலாஜியின் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் உருவான ‘ராஜா’ படத்தில் சந்திரபாபு மூன்று வேடங்களில் சகோதரர்களாக நடித்து பிரமிக்கவைத்தார்.

கண்ணதாசனின் ‘கவலை இல்லாத மனிதன்’ என்ற படத்தில் சந்திரபாபுதான் நாயகன். கலைவாணர் போல, தங்கவேலு போல, சந்திரபாபுவும் ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கிறார். ‘நானொரு முட்டாளுங்க’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை’ என்ற பாடலில்... ‘புத்திசாலி... இல்லை’ என்பதை ரொம்ப ஸ்டைலாகப் பாடிக் கலக்கியிருப்பார்.

‘பிறக்கும்போதும் அழுகின்றாய் இறக்கும்போதும் அழுகின்றாய் ஒருநாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே’ என்ற பாடலை கவியரசர், சந்திரபாபுவுக்காகவே எழுதினார் என்றுதான் தோன்றுகிறது.

சார்லிசாப்ளின் போலவே உடல்மொழியாலும் சேஷ்டைகளாலும் பிம்பம் காட்டிய சந்திரபாபு, சாப்ளினைப் போலவே, ‘உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன்’ என்றுதான் வாழ்ந்தார். அவர் மனதுக்குள் எத்தனையெத்தனையோ வலிகளும் வேதனைகளும் அவமானங்களும் ரணங்களும்! இவற்றையெல்லாம் மறக்க நினைத்து அவர் சென்ற போதையின் பாதை உலகறிந்ததுதான். மறக்கமுடியாத நிலையிலும் நம்மை குதூகலப்படுத்தியதும் நாம் உணர்ந்ததுதான்!

’தனக்கு வந்த மனைவி, வேறொருவனைத்தான் இன்னமும் காதலித்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவந்தால், உடனே தன் மனைவியை அவளின் காதலனுடன் சேர்க்க நினைக்கிறான்’ என்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம் என்பார்கள். ஆனால், அப்படியொரு சினிமா வந்ததற்குக் காரணமே, சந்திரபாபுவின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுத்துயரம்தான் என்று பலரும் சொல்கிறார்கள்.

வாழ்க்கையில் நீச்சலடித்து திரைத்துறையில் நுழைந்து முன்னேறியவர் சந்திரபாபு. ஆனால், மதுக்கடலில் இருந்து நீச்சலடித்து மேலெழமுடியாமல் போனதுதான் துயரம். கணக்கு வழக்கு பார்க்காமல், நேரங்காலம் என்பதெல்லாம் யோசிக்காமல் படங்களில் ஆத்மார்த்தமாக நடித்துக் கொடுத்தவர்தான் சந்திரபாபு. ஆனால் ஒரு தருணத்தில், கணக்குவழக்கே தெரியாத அளவுக்கு கடனுக்குள் சிக்கிக் கொண்டார். சம்பாதித்த பணத்தில், இவர் பங்களாவுக்குள் காரே நுழையமுடியும் என்றெல்லாம் சொல்லுவார்கள். வீட்டுக்குள்ளேயே கார் சென்று நிற்குமாம். அவர் ஸ்டைலாக ஏறுவார் அல்லது இறங்குவார். ஆனால், பள்ளமும் மேடும் கொண்ட வாழ்க்கையில், இவர் சென்று விழுந்ததோ... அதலபாதாளம் என்பதுதான் வலி மிகுந்த துக்கம்!

சந்திரபாபுவின் ஆட்டம்... தனி ரகம். புது தினுசு. அவரின் குரல்... எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாத வசீகரக்குரல். இப்படி தனித்துவத்துடன் ஆடினார். புது தினுசுடன் பாடினார். நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் வெரைட்டி காட்டினார். சந்திரபாபுவின் பல பாடல்கள், எல்லோருக்கும் பொருந்துபவை. எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை. அவ்வளவு ஏன்... சந்திரபாபு எனும் சாகசக் கலைஞனுக்கே பொருந்துபவை!

1927-ம் ஆண்டு பிறந்த சந்திரபாபு, 1974-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி 47-வது வயதில் காலமானார். அவர் மறைந்து, 49 ஆண்டுகளைக் கடந்தும் இன்றைக்கும் அவரை நினைவுகொள்கிறோம். இன்னும் தலைமுறைகள் பல கடந்தாலும் சந்திரபாபு எனும் உன்னதக் கலைஞன், கொண்டாடப்பட்டுக்கொண்டேதான் இருப்பான்!

நினைவு நாளில், சந்திரபாபு எனும் சாகசநாயகனைப் போற்றுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in