`என்னை மன்னித்து விடுங்கள்; நான் பிஜேபி கிடையாது'- நடிகர் பாக்யராஜ் விளக்கம்

`என்னை மன்னித்து விடுங்கள்; நான் பிஜேபி கிடையாது'- நடிகர் பாக்யராஜ் விளக்கம்

``நான் பேசியதை யார் தவறாக நினைத்திருந்தாலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ள நடிகர் பாக்யராஜ், நான் பிஜேபி கிடையாது. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்து, சினிமாவிற்குள் வந்து தமிழ்தான் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

'பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நூலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட, நடிகரும், திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய நடிகர் பாக்யராஜ்,"பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். இத்தகையவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள். பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், தான் பேசியது குறித்து நடிகர் பாக்யராஜ் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்று காலையில் நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசியபோது, குறைபிரசவத்தில் என்ற வார்த்தை வந்து, ரொம்ப தவறான ஒரு அர்த்தத்தை உண்டுபண்ணிவிட்டது என்று கேள்விபட்டபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கும், நான் பேசிய குறைபிரசவரத்திற்கும் சம்பந்தம் இல்லை. கிராமத்தில் ஒரு மாதம், இரண்டு மாதம் முன்னால் பிறந்தவங்களை குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வார்கள். அவர்களிடம் எந்த குறையும் இருக்காது என்று சொல்வார்கள். மற்றப்படி, மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்று அல்ல, என்றைக்கும் நான் அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இப்படி சொல்லியிருப்பேனோ என்று யார் நினைத்திருந்தாலும் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நான் பிஜேபி கிடையாது. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்து, சினிமாவிற்குள் வந்து தமிழ்தான் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று இருக்கிறேன். தமிழ் தலைவர்கள், திராவிட தலைவர்கள், அந்த காலத்தில் இருந்து பெரியாரில் இருந்து அண்ணா, கலைஞரில் இருந்து, எம்ஜிஆர், ஜீவாவில் இருந்து பார்த்து பார்த்து வந்ததால் அவர்களுடைய கருத்துக்கள்தான் என் மனதில் ஊறிப்போய் கிடக்கிறது. அந்த திராவிட கருத்துக்களின் அடிப்படையில்தான், நான் எடுத்த சினிமாக்களை நீங்கள் பார்த்தீர்களானால், திராவிட கருத்துக்கள்தான் வந்திருக்குமே தவிர, வேற மாதிரி என்னுடைய மனதில் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டிக்குள் தமிழக தலைவர்கள் என்ற மனதோடுதான் இருந்துக் கொண்டு இருக்கிறேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். நன்றி" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in