`ஆடியோவில் உள்ள குரல்கள் யாருடையது?'- விசாரணையில் மஞ்சு வாரியர் புது தகவல்

`ஆடியோவில் உள்ள குரல்கள் யாருடையது?'- விசாரணையில் மஞ்சு வாரியர் புது தகவல்

விசாரணை அதிகாரியைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக, தொடரப்பட்ட வழக்கில் நடிகை மஞ்சு வாரியரிடம் போலீஸார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரபல மலையாள நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டது என்றும் அதை அவர் பார்த்தது தனக்குத் தெரியும் என்றும் கூறியிருந்தார்.

நடிகர் திலீப், மஞ்சு வாரியர்
நடிகர் திலீப், மஞ்சு வாரியர்

இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியைக் கொல்ல, நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து திலீப், அவர் சகோதரர் அனூப், திலீப்பின் மைத்துனர் டி.என்.சூரஜ், உறவினர் அப்பு, நண்பர் பைஜூ செம்மங்காடு, ஓட்டல் உரிமையாளர் சரத் ஆகிய 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து திலீப் உட்பட சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இரண்டாவது முறையாக நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தனியார் ஓட்டல் ஒன்றில் நடிகை மஞ்சு வாரியரை சந்தித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆடியோவில் உள்ள குரல்கள் யாருடையது என்று அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. திலீப் மற்றும் அவருடைய உறவினர்களின் குரல்களை அவர் அடையாளம் காட்டியதாகவும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை, பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in