திலீப் வீட்டில் போலீஸ் சோதனை: போன், ஹார்ட் டிஸ்க் பறிமுதல்

திலீப்
திலீப்

நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் செல்போன், கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரபல நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப், பல்சர் சுனில் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், நடிகர் திலீப்பிடம் கொடுக்கப்பட்டதாகவும் அதை அவர் அதிக சத்தத்துடன் பார்த்தது தனக்குத் தெரியும் என்று, திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோசை கொல்ல நடிகர் திலீப், அவர் தம்பி அனூப் உட்பட 6 பேர் சதித்திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் புதிய வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நாளை (ஜன.14) வரவுள்ள நிலையில், திலீப் மற்றும் அவர் சகோதரர் அனூப் வீடுகள் மற்றும் அவர்களுடைய சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் போலீஸார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

திலீப்பின் ஆலுவா வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, அவர் வீடு பூட்டிக் கிடந்தது. யாரும் கதவைத் திறக்காததால், சில போலீஸார் வாயில் கதவின் மீது ஏறி உள்ளே சென்றனர். அதற்குள் அவருடைய உறவினர்கள் வந்து வாசல் கதவைத் திறந்துவிட்டனர். இதற்குப் பிறகு மற்ற போலீஸார் உள்ளே வந்தனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்குப் பின், திலீப்பின் செல்போன், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in