ஆனந்த் பாபு: ஆடல் கலையின் நாயகன்!

ஆனந்த் பாபு பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
ஆனந்த் பாபு: ஆடல் கலையின் நாயகன்!

அப்பாவின் பெயரையும் புகழையும் வைத்துக்கொண்டு, சினிமாவுக்குள் மிகச் சுலபமாக நுழைந்துவிடுவார்கள். ஆனால், ரசிகர்களின் மனதுக்குள் நுழைவது என்பது மிகப்பெரிய கலை. கல்லூரி கல்ச்சுரல் விழாவில், அந்தப் பையனின் ஆட்டத்தை நேரில் கண்டு பிரமித்துப் போனார் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர். ஆட்டமும் விழாவும் முடிந்த பிறகுதான் பையனின் அப்பா இன்னார் என்று டி.ஆருக்குத் தெரிந்தது. ‘அதானே பாத்தேன்... ஆட்டத்தை வைச்சே கண்டுபிடிச்சிருக்கணும். மிஸ் பண்ணிட்டேனே’ என்று உடனிருந்தவர்களிடம் சொல்லிச் சொல்லி வியந்தார். அப்படியொரு ஆட்டம் போட்டு அதகளம் செய்த இளைஞரின் அப்பா, நகைச்சுவையாலும் குணச்சித்திர நடிப்பாலும் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நாகேஷ். அவரின் மகன்... ஆனந்த் பாபு!

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைத் தன் வசப்படுத்திக்கொண்டு, மிகச்சிறந்த நடிப்பையும் நகைச்சுவையையும் ஏன்... வில்லத்தனத்தையும் வழங்கக்கூடிய மகா கலைஞன் நாகேஷ். அவரின் மகன்களில் எவருக்குமே நடிப்பதிலெல்லாம் நாட்டமே இல்லை. ஆனந்த் பாபுவுக்கும் அப்படித்தான். நாகேஷுக்கும் தனது வாரிசுகளை சினிமாவில் நுழைக்க வேண்டும் என்கிற எந்தத் திட்டமிடலோ ஆசையோ ஏதுமில்லை.

அப்பாவின் நடிப்பு ஆனந்த் பாபுவுக்கு எப்போதுமே பிரமிப்பு. அதேசமயம் அப்பாவைப் போலவே நடனத்திலும் அவருக்கு ஈர்ப்பு. ’இவனுக்கு டான்ஸெல்லாம் வருமா’ என்று நாகேஷுக்குத் தெரியாது. முறைப்படி கற்றுக்கொள்ளவும் அனுப்பவில்லை. சிறுவயதில், விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருந்தால், ‘எங்கே டான்ஸ் ஆடு, எங்கே பாட்டுப் பாடு’ என்று கேட்பார்களே... அப்படித்தான் யாராவது உறவுக்காரர்கள் வந்தால், அவர்கள் கேட்டால் ஆனந்த் பாபு ஆடுவார். கல்லூரி விழாவில்தான் மகனின் ஆட்டத்தையும் திறமையையும் கண்டு, ஒருகணம் ஆச்சரியப்பட்டுப் போனார் நாகேஷ்.

அந்த ஆச்சரியம் நீடிப்பதற்குள் இன்னொரு ஆச்சரியம் மறுநாளே வாசற்கதவு தட்டியது. அப்படி கதவு தட்டியவர்... டி.ராஜேந்தர். ’‘உங்க பையன் டான்ஸ் பாத்தேன். உங்களைப் போலவே சூப்பரா ஆடுறாரு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, உங்க பையனை சினிமால நடிக்கவைக்க ஆசைப்படுறேன். நான் ரசிச்சு ரசிச்சுப் பாத்த நாகேஷ் சார் மகனை நான் தான் அறிமுகப்படுத்தினேன்னு பெருமையா சொல்லிக்குவேன். உங்க விருப்பம் சொல்லுங்க சார்’’ என்று டி.ராஜேந்தர் நாகேஷிடம் கேட்க அவரும் சம்மதித்தார். ஆனந்த் பாபு நடிகரானது இப்படித்தான்! அந்தப் படம் ‘தங்கைக்கோர் கீதம்’.

படம் பார்த்தார்கள். ‘தினம் தினம் உன் முகம்’ என்ற பாடலுக்கு ஆனந்த் பாபுவின் ஆட்டத்தைக் கண்டு, திரையுலகமே ஆடிப்போனது. ‘தங்கைக்கோர் கீதம்’ பல்வேறு வகைகளில் சிறப்பான படம் என்றாலும் கூட, ஆனந்த் பாபுவின் நடனத்துக்காகவே திரும்பத்திரும்பப் பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

தமிழ் சினிமா உலகில், கமல்ஹாசனுக்குப் பிறகு ஒரு நடிகர் மிகச்சிறப்பாக ஆடுகிறார் என்று பேரெடுத்தது ஆனந்த் பாபுவாகத்தான் இருக்கும். அதுவரை, நாகேஷின் கால்ஷீட் கேட்டு வீட்டுக்கு வந்தவர்கள், ஆனந்த் பாபுவின் கால்ஷீட் கேட்டும் வரத் தொடங்கினார்கள்.

இராம.நாராயணன் இயக்கத்தில் ‘கடமை’ படத்தில் வாய்ப்பு வந்தது. விசுவின் இயக்கத்தில் ‘புயல் கடந்த பூமி’ படத்தில் நடித்தார். அடுத்து ‘நியாயம் கேட்கிறேன்’ படத்தில் நடித்தார். ஆனந்த் பாபு நாயகன் என்று உறுதியானதும், அவரின் நடனத்திறமையை வெளிப்படுத்துவது போல், காட்சிகளை அமைத்தார்கள். கதாபாத்திரத்தை அதற்குத்தக்கபடி செதுக்கினார்கள்.

தொடர்ந்து வந்த படங்கள், வெற்றிப் படங்களாக ஓடியதோ இல்லையோ... ஆனந்த் பாபுவின் பேர்சொல்லும் விதமாக அமைந்தன. அந்த சமயத்தில்தான் இந்தி உலகில் சக்கைப்போடு போட்ட படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள். ‘பாடும் வானம்பாடி’ முழுக்க முழுக்க ஆனந்த் பாபுவின் அசாத்தியமான நடனத்திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வந்தது. படமும் நூறுநாள் படமாக, ஹவுஸ்புல் காட்சிகளுடன், பல ஊர்களில் வெள்ளிவிழாப் படமாக ஓடி, மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது.

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் எடுத்தால் அது இளையராஜாவின் இசைக்காகவே ஓடும். இளையராஜாவின் 300-வது படமாக வந்த ‘உதயகீதம்’ படத்தை கே.ரங்கராஜ் இயக்கினார். மோகன், லட்சுமி, ரேவதி நடித்த படத்தில் ஆனந்த் பாபுவுக்கு அட்டகாசமான கேரக்டர் அமைந்தது. மறக்கமுடியாத கேரக்டராகவும் படமாகவும் அமைந்தது. பிறகு தன் மகனை வைத்து நாகேஷ் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற படத்தை இயக்கினார். படம் வந்ததே பலருக்கும் ஞாபகத்தில் இருக்காது.

ஆனாலும் சோர்ந்துபோகவில்லை ஆனந்த் பாபு. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் திரையுலகில் வித்தியாசமான அதேசமயம் நன்றியுணர்வு மிக்க இயக்குநர் என்று கொண்டாடப்படுபவர். நாகேஷ், கே.எஸ்.ரவிகுமார்,ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பக்கத்துப்பக்கத்து வீடுகளில் வசித்தார்கள்.

ஆகவே, நாகேஷ் மீது கே.எஸ்.ரவிக்குமாருக்கு இயல்பாக மரியாதை. ‘நம்ம நாகேஷ் சார் பையன் பெரியாளா வரலியே’ என்கிற ஆதங்கம். இவையெல்லாம் சேர்ந்து மனதுக்குள் கனன்றுகொண்டே இருந்தது. ‘புரியாத புதிர்’ இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது. தன் முதல் படத்திலேயே ஆனந்த் பாபுவுக்கு வாய்ப்பு வழங்கினார். கதையில் நல்ல கதாபாத்திரம். அந்தப் பதற்றத்தையும் மிரட்சியையும் காட்டி சிறப்பான நடிப்பை வழங்கினார் ஆனந்த் பாபு.

தொடர்ந்து ‘சேரன் பாண்டியன்’ வெற்றியுடன் ஆனந்த் பாபுவுக்கும் வெற்றி கிடைத்தது. அதன் பின்னரும் தன் படங்களில் ஆனந்த் பாபுவைப் பயன்படுத்திக்கொண்டே வந்தார். ’டேய் நாகேஷ். உன் பையனை அனுப்பி வை. அவனுக்கு நான் ஒரு கேரக்டர் வைச்சிருக்கேண்டா’ என்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நாகேஷுடம் சொல்னார். சொன்னபடியே, ‘வானமே எல்லை’யில் அற்புதமான கேரக்டரை வழங்கினார். அப்பா நாகேஷை வைத்து எத்தனையோ படங்களில் செதுக்கிய பாலசந்தர், இந்த ஒரேயொரு படத்திலேயே ஆனந்த் பாபு எனும் பண்பட்ட நடிகரையும் வெளிக்கொண்டு வந்தார்.

இயக்குநர் விக்ரமனின் ‘புதுவசந்தம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற பல படங்களில் நடனத்தையும் கடந்து, நடிகர் எனும் முத்திரையைப் பெற்றார் ஆனந்த் பாபு. தெலுங்கிலும் வாய்ப்புகள் வந்தன. அவற்றையும் பயன்படுத்தி முன்னேறினார்.

கவிதாலயாவின் தயாரிப்பில், அனந்துவின் இயக்கத்தில் ‘சிகரம்’ படத்திலும் நடித்தார். நடனத்தில் மிகப்பெரிய அளவில் பேரெடுத்தாலும் நடிப்பதிலும் நல்ல பேர் கிடைத்தாலும் மிகப்பெரிய அளவுக்கு ஏனோ வாய்ப்புகள் வராமலே போனது என்று சொல்லலாம். வந்த வாய்ப்புகளையும் சரிவர அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை எனும் ஆதங்கமும் நாகேஷின் ரசிகர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்குமே இன்று வரை தீராவலியாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனாலும் ஆனந்த் பாபு எனும் நடனக் கலைஞரை, சிறந்த நடிகரை மக்கள் எப்போதுமே மறக்கவில்லை. ‘நாகேஷ் மகன்’ என்பதையெல்லாம் கடந்து, இன்றைக்கும் சீரியல்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆனந்த் பாபுவுக்கு இன்று பிறந்தநாள்.

’டிஸ்கோ’ டான்ஸ் என்பதை தமிழகத்தில் பிரபலப்படுத்திய நடன நடிகரும் திறமைகள் கொண்ட நடிகருமான ஆனந்த் பாபுவை வாழ்த்துவோம்; இன்னும் வலம் வந்து ஆனந்தமயமான வாழ்வு அமைய மனதார வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in