திருச்சியில் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

திருச்சியில் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருக்கும் நடிகர் அஜித்தை காண அவரது ரசிகர்கள் கூட்டம் மாவட்டம் முழுவதும் அலை மோதுகிறது.

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த 25-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 1,300 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டிகள் 28-ம் தேதி வரையும், 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளும் நடக்கின்றன.

திரைப்பட நடிகர் அஜித்தும் ஒரு சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரர் என்பதால் இதில் கலந்து கொண்டுள்ளார். அவர் இருசக்கர வாகனம் மற்றும் கார் ரேஸ் வீரராக இருந்தாலும் துப்பாக்கிச் சுடுதலிலும் பயிற்சியும் பெற்றவர். பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றிருக்கிறார். அதனால் திருச்சியில் நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பிய நடிகர் அஜித் அதற்காக இன்று காலை திருச்சிக்கு வந்தார்.

இன்று நடைபெறும் 4 பிரிவுகளிலும் அவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக இன்று காலை முதல் போட்டியாக நடைபெற்ற சீனியர் மாஸ்டர் பிரிவில் அவர் கலந்து கொண்டார். இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் கலந்து கொள்ள அஜித் வந்திருப்பதால் போட்டி நடைபெறும் இடம் உட்பட அஜித் செல்லும் இடங்களில் அவரது ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து அவரை காண்பதற்காக காத்திருக்கின்றனர். அவர் சமயபுரம் செல்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் சமயபுரத்திலும் ஏராளமானவர்கள் திரண்டு அஜித்துக்காக காத்திருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in