#HBDAjithkumar: நிஜத்திலும் அல்டிமேட் ஸ்டார்... அஜித்தின் வாழ்வை மாற்றிய ‘தல’யாய முடிவு!

அஜித்
அஜித்

’ஆசை’ நாயகனாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த நடிகர் அஜித் இன்று தனது 53-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ‘காதல் மன்னன்’, ‘அல்டிமேட் ஸ்டார்’, ‘தல’ என இந்தப் பட்டங்களுக்கு பின்னால் இருக்கும் ஒரே பெயர் அஜித்!

பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை, ஊடகங்களில் பேட்டி கொடுப்பதில்லை, ரசிகர்களை பெரிதாக சந்திப்பதில்லை, தான் உண்டு தன் வேலையுண்டு என்று அஜித் வலம் வந்தாலும் அவரது படத்தைக் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால், இந்தப் பயணத்திற்குப் பின்னால் அவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது. சினிமா வாழ்வின் தொடக்கத்தில் நடிகராக ‘ஸ்டாராக’ ஒரு இடம் பிடிக்க போராடி ஜெயித்தார். தனக்கான இடம் கிடைத்த பின்பு அடுத்தகட்டத்திற்கு வளர வளர ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த ‘ஸ்டார்’ அந்தஸ்தை விட்டு விலகியது ஆச்சரியம். அப்படி அஜித் வாழ்வை மாற்றிய முக்கிய முடிவுகள் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்.

சினிமாவிற்குள் வர வேண்டும் என்று அஜித் விரும்பியதே அதிரடியான முடிவுதான். ஏனெனில் அப்பா, அண்ணன்கள் எல்லோருமே தொழில்துறை ஜாம்பவான்கள். ஆனால், அஜித்தோ பள்ளிக் காலத்திலேயே படிப்பில் நாட்டமில்லை என உதறித் தள்ளியவர். பத்தாம் வகுப்பில், தான் எடுத்த இந்த முடிவை அப்பா சுப்ரமணியத்திடம் சொன்னபோது அவர் கோபப்படவில்லை. மாறாக, “நீ படிக்கவில்லை என்றால், வேலைக்கு போ! சும்மா ஊர் சுற்ற உன்னை அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

அம்மா, அப்பாவுடன் அஜித்
அம்மா, அப்பாவுடன் அஜித்

தந்தையின் கட்டளையை மதித்து வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார் அஜித். அவர் போன முதல் வேலை எது தெரியுமா? டூ வீலர் மெக்கானிக் வேலைதான்! ஆரம்பத்தில் அந்த வேலையில் பெற்ற பயிற்சிதான் இப்போது ‘ஏகே மோட்டார்ஸ்’ என பைக் டூர் டிராவல் கம்பெனி ஆரம்பிக்கும் அளவுக்கு அவரைக் கொண்டு வந்திருக்கிறது. பின்பு வெவ்வேறு வேலைகளுக்கு மாறியவர் கூடவே, மாடலிங்கும் செய்து வந்தார். அங்கிருந்து சினிமாவிலும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆரம்ப காலங்களில் சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார் அஜித். அப்படிப்பட்டவர் பின்னாளில் விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்ற முடிவெடுத்தார். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, தனது நட்சத்திர அந்தஸ்தை வைத்து வணிக நோக்கத்திற்காக ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதுதான். அதேபோல, தனது நட்சத்திர அந்தஸ்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார் அஜித்.

தான் மட்டுமல்லாது தனது பெயரை ரசிகர்களும் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவதை தான் விரும்பவில்லை எனச் சொல்லி கடந்த 2011ல் தனது பிறந்தநாளன்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அஜித். அதோடு, தன் பெயரில் இயங்கும் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அதிரடியாக அறிக்கை வெளியிட்டார்.

’பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’
’பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’

தன் தீர்க்கமாக நம்பும் விஷயங்களை வெளிப்படையாகச் செய்வதில் தயக்கம் காட்டாதவர் அஜித். கடந்த 2010-ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது ’பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற நிகழ்ச்சி நடந்தது. “இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க நடிகர்களை மிரட்டுகிறார்கள்” என அத்தனை பேர் முன்னிலையில் வெளிப்படையாக மேடையில் சொன்னார் அஜித். அது பல சர்ச்சைகளுக்கு பின்னாளில் வழிவகுத்தது.

'மங்காத்தா’ சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்
'மங்காத்தா’ சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்

அதுபோலவே தனது ஐம்பதாவது படமான ‘மங்காத்தா’வில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றி புது டிரெண்டை உருவாக்கினார். அடைமொழியோடு அழைக்கப்பட வேண்டும் என்பது நடிகர்கள்/ ரசிகர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தைத் துறந்த அஜித், ரசிகர்கள் செல்லமாக தன்னை அழைத்து வந்த ‘தல’ என்பதையும் மறுத்தார். சமீபத்தில் இதற்காக அறிக்கை வெளியிட்டு தன்னை அஜித்குமார் அல்லது ஏகே என்று அழைக்குமாறு தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

இப்படி சினிமாவில் வளர்ந்து வந்த ஒவ்வொரு கட்டத்திலும் அதிரடி முடிவுகளை எடுத்து தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்ட ரியல் அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு ‘காமதேனு’ டிஜிட்டல் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in