ஆஹா.. அஜித்!: சிலாகிக்கும் ‘வேம்புலி’

ஆஹா.. அஜித்!: சிலாகிக்கும் 
‘வேம்புலி’

திரைப்படங்களில் உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களிடம் கனிவாக பழகும் அஜித் குமார், அவ்வப்போது அவர்களுக்கு பிரத்யேக பரிசுகள் வழங்குவதும் உண்டு. பிரியாணியில் தொடங்கி பிடித்தமான பொருட்கள் வரை அவை நீளும். அந்த வகையில் சக நடிகர் ஒருவருக்கு அஜித் வழங்கிய பரிசு, துணிவு படத்துகான அப்டேட்டாக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு போயிருக்கிறது.

சார்ப்பட்டா திரைப்படத்தில் ’வேம்புலி’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கன். அடுத்து இவர் அஜித்தின் துணிவு படத்திலும் நடித்துள்ளார். எதிர்மறை கதாபாத்திரத்தில் தோன்றிய ஜான் கொக்கன், உயிரைப் பணயம் வைத்து உச்ச ஸ்டண்ட் காட்சிகளிலும் நடிக்க வேண்டியிருந்தது. இந்த சூழலில்தான் ஜான் கொக்கனுக்கு அந்த சர்ப்ரைஸ் பரிசினை அஜித் வழங்கினார்.

ஜான் கொக்கன்
ஜான் கொக்கன்

பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்காக தற்போது, அந்த அஜித் பரிசு குறித்து பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார். அது, ஸ்டண்ட் காட்சிகளில் வீரர்கள் அடிபடாதிருக்க அணியும் கவச ஆடை. உடலின் பிரதான அவயங்களை சேதமடையாது காப்பதோடு, உயிர் காக்கும் அளவுக்கு திடமானது. உள்ளுக்குள் கவச ஆடை அணிந்திருப்பது வெளித்தெரியாது ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதும் எளிது. அஜித் பரிசளித்த அந்த உபகரணத்தை அணிந்த புகைப்படங்களையும் ஜான் கொக்கன் பகிர்ந்துள்ளார்.

’என்னுடைய சூப்பர் ஹீரோ அஜித் குமார் சார், எனக்கான சூப்பர் பவர் கவச உபகரணத்தை பரிசளித்துள்ளார்’ என்று பதிவிட்டு அதில் அஜித்துக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார் ஜான் கொக்கன். பொங்கல் வெளியீடான துணிவு திரைப்படத்தின் கவுண்டவுன் உற்சாகத்தில் திளைத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, ஜான் கொக்கன் அளித்த அப்டேட் மேலும் மகிழ்ச்சி தந்திருக்கிறது. தங்கள் பங்குக்கு அஜித்தின் உபகார குணத்தையும், ஜான் கொக்கன் சிலாகிப்பையும் பெருமையோடு இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in