லாரி மீது நடனம், குதித்தபோது முதுகுத்தண்டு உடைந்து ரசிகர் பலி: `துணிவு' படம் பார்க்க வந்தபோது பரிதாபம்

லாரி மீது நடனம், குதித்தபோது முதுகுத்தண்டு உடைந்து ரசிகர் பலி: `துணிவு' படம் பார்க்க வந்தபோது பரிதாபம்

`துணிவு' படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்ததில் முதுகுத்தண்டு உடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள `துணிவு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இன்று நள்ளிரவு 1 மணிக்கு ரோகினி திரையரங்கில் வெளியான `துணிவு' பட சிறப்பு காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்ததில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார்(19) என்பதும், ரோகினி திரையரங்கில் `துணிவு' படம் பார்க்க வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

`துணிவு' படம் பார்க்க வந்த இடத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in