‘மகளுக்காகத்தான் நடிக்கிறேன்’ - மனம் திறந்த மிஷ்கின்

‘மகளுக்காகத்தான் நடிக்கிறேன்’ - மனம் திறந்த மிஷ்கின்

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் தன் நடிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தைத் தன் மகளுக்காகச் சேர்த்துவைப்பதாகக் கூறியிருக்கிறார்.

'சித்திரம் பேசுதடி' படம் மூலமாகத் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். பின்பு ‘பிசாசு', ‘நந்தலாலா', ‘சைக்கோ' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இவரது இயக்கத்தில் ‘பிசாசு2' திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.

ஒரு நடிகராகத் தன்னுடைய பயணம் தொடங்கியது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மிஷ்கின் மனம் திறந்துள்ளார். "என்னை நடிப்பதற்கு அழைத்த பலர் என் நடிப்பிற்காக அதிகப் பணம் தருவதாகக் கூறியபோது என்னால் மறுக்க முடியவில்லை. இதுதான் உண்மை. அதே நேரத்தில் இயக்கம், நடிப்பு இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ள மாட்டேன். ஒரு படத்தை நான் இயக்கிக்கொண்டிருக்கும்போது எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு வந்தால் அதை நிச்சயம் ஏற்கமாட்டேன். ஒரு படம் இயக்கி முடித்ததும் அந்தச் சமயத்தில் எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு வரும்போது மறுக்காமல் ஏற்றுக்கொள்வேன். இப்படி நடிப்பின் மூலம் கிடைக்கும் எனக்குக் கிடைக்கும் பணம் அனைத்தும் என்னுடைய மகளுக்குத்தான். அவருடைய திருமணத்திற்காக இந்தப் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளேன்" என்று நெகழ்ச்சியாகக் கூறியுள்ளார் மிஷ்கின்.

மேலும் தன்னுடைய திருமணம் மற்றும் மனைவி குறித்தும் அந்தப் பேட்டியில் பேசியுள்ளார் மிஷ்கின். “என்னுடையது காதல் திருமணம். ஆனால் திருமணத்திற்குப் பின்பு மகள் பிறந்ததும் சில நாட்களிலேயே நானும் என் மனைவியும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டோம். எங்கள் பிரிவிற்குக் காரணம் முழுக்க முழுக்க நான் மட்டுமே. நாங்கள் இப்போது பிரிந்திருந்தாலும், எங்கள் கருத்து வேறுபாடு எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் என் மீது என் மனைவி மாறாத அன்பு வைத்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன். என்னுடைய மகளை அவர் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார் அப்படி இருக்கும்போது தந்தையாக என் மகளுக்கு என்னுடைய கடமையைச் செய்ய வேண்டியது அவசியம்" என்று அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in