
சென்னை தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் திரையரங்க மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தரமணியில் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அங்குள்ள திரையரங்கில் மாணவர்களுக்காக திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆர்.ஆர். திரையங்கில் அமர்ந்து படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஷ்பெஷல் ஸ்க்ரீன் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், திரையரங்கு மேடை மீது அது விழுந்ததால் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு இத்திரையரங்கு புதுப்பித்தல் பணி நடந்ததாகவும், அதன்பின்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் இந்த விபத்து ஏற்பட்டதாக கல்லூரி மாணவர்கள் குற்றச்சாட்டினர். திரையிடல் நிகழ்ச்சியின் போது மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.