ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 53

ரஜினியின் வேகம்... தயாரிப்பாளர்களுக்கு லாபம்!
எங்கேயோ கேட்ட குரல்
எங்கேயோ கேட்ட குரல்

‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் இயக்குநர் எஸ்பி.முத்துராமனிடம் விடைபெறும்போது, “இதுக்கு முன்ன ‘மூன்று முகம்’ படத்துல நடிச்சு முடிச்சதும் எனக்கே ஒரு மனச்சாந்தி தேவைப்பட்டது. அதை ‘எங்கேயே கேட்ட குரல்’ எனக்குக் கொடுத்திருக்கு. ஒரு நடிகனுக்கு மன ரீதியா அமைதியைத் தர்ற கேரக்டர்ஸ் ரொம்ப முக்கியம்னு இந்த நிமிஷத்துல மறுபடியும் உணர்றேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.” என்று சொன்னார் ரஜினி.

இதுபற்றி எஸ்பி.எம். தனது நினைவுகளை மீண்டும் மீட்டினார். “என்னோட, பஞ்சுவோட, ரஜினியோட, ஏன்... அந்தப் படத்துல நடிச்ச சகோதரிகள் அம்பிகா, ராதா, டெல்லி கணேஷ், கமலாகாமேஷ்ன்னு ஒவ்வொருத்தரோட சினிமா வாழ்க்கையிலயும் ‘எங்கேயோ கேட்ட குரல்’ ஒரு சரித்திரம்னு நம்புறேன். ரஜினியை மறுபடியும் ஒரு சென்டிமென்ட் ஹீரோவா, குணச்சித்திர நடிகனாகக் காட்டினோம். ஆக்‌ஷன் ஹீரோவா மாறிப்போயிருந்த ரஜினி, ‘ஆக்டிங் பொட்டன்ஷியல் உள்ள நடிகர்னு தன்னை மீண்டும் நிருபித்துக் காட்டியிருந்தார். குறிப்பா, மனப் போராட்டம் நிறைந்த காட்சிகள்ல எந்த அளவுக்கு ரியலிஸ்டிக் முக பாவம் கொண்டு வருவார் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

ரஜினிக்கு மட்டும் இது உணர்வுபூர்வமான படமில்லே, அவரோட ரசிகர்கள் தியேட்டர்ல படம் பார்க்கும்போது ரொம்ப உணர்ச்சி மயமாக இருந்தார்கள். நிறையப் பேர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள். ரஜினிக்கு இதுபோல் மீண்டும் ஒரு படம் வராதா என்று இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியைக் கொண்டாடும் அவரின் மூத்த ரசிகர்கள். ஆனால், இந்தப் படம் அகில இந்திய அளவில் விருதுபெறும் என்று எதிர்பார்த்து நாங்கள் ஏமாந்தோம்” என்று வருத்ததுடன் முடித்தார் எஸ்பி.எம்.

தியேட்டர்களில் ‘மூன்று முகம்’ படத்தை எதிர்பார்த்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ‘எங்கேயே கேட்ட குரல்’ வெளியாகி மனதளவில் மருத்துவம் செய்தது. படத்தில் தனியாக நகைச்சுவை பகுதியோ, நகைச்சுவை நடிகர்களோகூட கிடையாது. 1982 ஆகஸ்டில் வெளியான இந்தப் படத்துக்கு முதல் ஒருவாரம் போதிய கூட்டம் வரவில்லை. “ரஜினிக்கும் எஸ்பி.எம்முக்கும் எதுக்குப்பா இந்த வேண்டாத வேலை..? பாவம் பஞ்சு அருணாசலம்..! சொந்தப் படம்னு இறங்கி கையில் இருந்ததையும் விட்டுடுவார்போல இருக்கு” என்று அப்போது அனுதாபம் காட்டினார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால், இரண்டாவது வாரத்திலிருந்து பெண்கள் கூட்டம் அலைமோதியது. 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பிடித்துக்கொண்டது எங்கேயோ கேட்ட குரல்.

மூன்று சாதனை முகம்

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் போலீஸ் கதைகளுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. ஒரு முன்னணி நட்சத்திரம் ஆனபிறகு அந்தத் தகுதியைத் தக்க வைத்துக்கொள்ள போலீஸ் யூனிஃபார்ம் அணிந்து கண்டிப்பான, கறை படியாத காவல் அதிகாரியாக திரையில் தோன்ற வேண்டும் என்ற ஆசை இன்றைய ஹீரோக்களும் இருக்கிறது. அப்படி ரஜினிக்கு அமைந்த படம்தான் ‘மூன்று முகம்’. அந்தப் படத்துக்கு முன் எத்தனையோ காவல் அதிகாரிகள் தமிழ் சினிமாவில் வந்துபோயிருந்தாலும் காலம் கடந்து நிற்கும் ‘டிஎஸ்பி அலெக்ஸ் பாண்டியன்’ ரஜினியை அவருடைய ரசிகர்கள் மறக்கத் தயாராக இல்லை. கதாசிரியரின் கற்பனையில் பிறந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு திரையில் ரத்தமும், சதையும் உயிரும் உணர்வும் கொண்டுவந்து மிரள வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இரண்டு வெவ்வேறு இடங்களில் வளரும் இரட்டை சகோதரர்கள். ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள். கண்டிப்பும் நேர்மையும் மிக்க காவல் அதிகாரியான தங்களுடைய தந்தை அலெக்ஸ் பாண்டியனைக் கொன்ற சாராய சாம்ராஜ்ஜியத்தின் தலைவன் செந்தாமரையையும் அவருடைய கும்பலையும் பழிவாங்கக் கிளம்புகிறார்கள். இதில் முந்திக் கொள்ளும் ஜான், கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் செந்தாமரையின் ஆட்களை வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்திச் சாய்க்கிறார். அந்தக் கத்தியைப் பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் பாய்ச்சுகிறான் ஜான். செந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை தனது மடியில் கிடத்திக்கொண்டு கதறுகிறான் அருண். தனது தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியுடன் தம்பி அருணின் மடியில் உயிரை விடுகிறான் ஜான்.

அப்பா மற்றும் இரட்டைச் சகோதரர்கள் என மூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா. ஜானுக்கு ஜோடி இல்லை. திரைக்கதையில் வேகமும், விறுவிறுப்பும் நிறைந்திருந்த இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. மூன்று முகங்களும் தனித்தனி முகங்கள் என நடிப்பில் ஏறுமுகம் காட்டி ஊதித்தள்ளி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் கொடுத்தார் ரஜினி.

மூன்று முகம்
மூன்று முகம்

இயக்குநர் ஜெகந்நாதனின் பதிவு...

‘மூன்று முகம்’ படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்களை அதன் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் மனம் திறந்து பதிவு செய்திருக்கிறார். ஜெகந்நாதன் பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக உயர்ந்தவர். “எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனபிறகு சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பனின் தேர்வாக ரஜினி இருந்தார். பீட்டர் செல்வகுமார் எழுதிய ‘மூன்று முகம்’ கதையை படமாக்குவது என்று முடிவானதும் ‘படத்தின் இயக்குநர் யார்?’ என்று ஆர்.எம்.வீ.யிடம் ரஜினி கேட்டிருக்கிறார். அவர் எனது பெயரைச் சொல்ல ‘அவர் இயக்கிய படம் எதையும் இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக வருந்துகிறேன்!’ என்று ரஜினி பதில் சொல்லியிருக்கிறார்.

உடனே ஆர்.எம்.வி., ‘எங்களுடைய சத்யா மூவீசுக்கு ‘இதயக்கனி’ படத்தை இயக்கியவர்தான் ஜெகந்நாதன்’ என்று கூறியிருக்கிறார். உடனே ரஜினி, ‘நான் ‘இதயக்கனி’ படத்தைப் பார்க்க வேண்டுமே’ என்று சொல்ல மறுநாளே ‘இதயக்கனி’ படம் ரஜினிக்கு பிரத்யேகக் காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது. ரஜினி, நான், சத்யா மூவிசின் மானேஜர் பழனியப்பன் மூவரும் படம் பார்த்தோம். படம் முடிந்ததும், ‘இந்தப் படத்தை எந்த வருஷம் இயக்கினீர்கள்?’ என்று ரஜினி என்னிடம் கேட்டார். நான் ‘1974-ல் படமாக்கப்பட்டு அடுத்த ஆண்டான 1975-ல் ரிலீசானது’ என்றேன். உடனே ரஜினி, ‘1974-ல் நான் சினிமாவுகே வரவில்லை. அப்போதே எம்.ஜி.ஆர். சாரை வைத்து படம் இயக்கியிருக்கிறீர்கள். உங்கள் இயக்கத்தில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றார்.

மிடுக்கான ஸ்டைலும் வேகமும்!

படப்பிடிப்பில் ரஜினியிடம் நான் கண்ட வேகம் பிரமிப்பானது. காக்கிச் சீருடையில் அலெக்ஸ் பாண்டியனாக அவர் காட்டிய கம்பீரம், செட்டில் நடக்கும்போது வெளிப்பட்ட அந்த மிடுக்கு, போலீஸ் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் பேசிக்கொண்டே இன்னொரு ரவுடியை உதைக்கும் ஸ்டைல் என படம் முழுக்க அதிரடி ஸ்டைல்களை வெளிப்படுத்தினார். திறமையில்லாமல் யாரும் வெற்றிக்கனியைப் பறித்துவிட முடியாது என்பதற்கு ரஜினி ஒரு உதாரணம்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்த பிரம்மாண்டமான சரக்கு கப்பலில் மூன்று நாட்கள் விசேஷ அனுமதிபெற்று படமாக்கினோம். படம் பார்த்த ஏவி.எம்.சரவணன் ‘க்ளைமாக்ஸ் காட்சியை எடுக்க எத்தனை நாள் தேவைப்பட்டது?’ என்றார். நான், ‘மூன்று நாள்’ என்றேன். அவரோ ‘பத்து நாள் தேவைப்பட்டிருக்கும் என்று நினைத்தேன்’ என்றார். ‘அத்தனை வேகமாக எடுத்து முடிக்க, ரஜினியின் வேகமும் ஒரு முக்கிய காரணம்’ என்று நான் சொன்னேன். அப்போது சரவணன், ‘ரஜினிக்கு வரமாக அமைந்துவிட்ட வேகமாக நடித்துகொடுக்கும் திறன், தயாரிப்பாளருக்கு லாபம்’ என்றார்.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் புதுமை ஒன்றைச் செய்தேன். ரஜினி தாவி வந்து ரவுடிகளை அடித்து உதைப்பதாக வரும் ஆக்‌ஷன் காட்சியில், ஒரு தடவை அவர் ஜம்ப் செய்து நான்கு பேரை எட்டி உதைப்பது போல் காட்சி அமைத்தேன். அந்த ஐடியாவை பார்த்ததும் ரஜினி உற்சாகம் கொண்டார். ‘நீங்கள் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, நல்ல தொழில் நுட்பக் கலைஞரும் தான்’ என்று பாராட்டினார்.

காவல் அதிகாரியின் பாராட்டு

படம் வெளியாகி 150 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்துக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தபோது காவல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அதிகாரி அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிப் பேசினார்: ‘காவல்துறையில் சேரும் இளைஞர்கள் பெறும் துறைசார்ந்த பயிற்சி ஒவ்வொருவரையும் ஒரு ஆளுமையாக மாற்றிவிடும். அது சற்று கடினமான பயிற்சியும்கூட. இனி, அந்தப் பயிற்சி அவசியமில்லை. ‘மூன்று முகம்’ படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டினாலே போதும். ஒரு நேர்மையான காவல் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது. அதை தன்னுடைய அற்புதமான நடிப்பால் இவ்வளவு சிறப்பாக்கிக் கொடுத்திருக்கிறார் ரஜினி’ என்று பாராட்டினார். முதல்வர் எம்ஜிஆரின் கட்டுப்பாட்டில் இருந்த காவல் துறையிலிருந்து ஒரு அதிகாரி வந்து இப்படி பேசியது மறுநாள் செய்தித்தாள்களில் கொட்டை எழுத்துகளில் வெளியானது” என்று கூறியிருக்கும் இயக்குநர் ஜெகந்நாதனின் நினைவலைகளில் அடுத்த வாரமும் நீந்துவோம்

(சரிதம் தொடரும்)

படங்கள் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in