
ஆமிர்கான் தயாரித்து, நடித்துள்ள ’லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கிய இந்தப் படம் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவானது. ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் உரிமையைப் பெற்று, இந்தியில் ரீமேக் செய்துள்ளார் ஆமிர்கான்.
அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு 'லால் சிங் சத்தா’எனத் தலைப்பு வைத்துள்ளனர். நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். பின்னர், அவர் அதில் இருந்து விலகினார். அந்த கேரக்டரில் நாக சைதன்யா நடித்துள்ளார். மோனா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்தப் படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.