
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டும் என்று இந்தி நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இந்தித் திரைப்படம், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
காஷ்மீரில், 1990-களில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்டுகள் அங்கிருந்து தப்பிய உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11-ம் தேதி வெளியான இந்தப் படத்தை பிரதமர் மோடி உட்பட பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இதன் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான், இந்தப் படத்தை ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராஜமவுலி இயக்கியுள்ள ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஆமிர் கானிடம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’படம் பற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறும்போது, ’இந்தப் படத்தை நிச்சயமாக நான் பார்ப்பேன். இந்தக் கதை நம் வரலாற்றின் ஒரு பகுதியை பேசியிருக்கிறது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நடந்தது மிகவும் வருத்தமானது. இதுபோன்ற தலைப்பிலான படங்களை அனைத்து இந்தியர்களும் பார்க்க வேண்டும். இந்தப் படம், மனித நேயத்தை நம்புகிற அனைவரின் உணர்ச்சிகளையும் தொட்டுள்ளது. படம் வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.