நடிப்புக்கு தற்காலிக ஓய்வு: ஆமிர்கான் அறிவிப்பின் பின்னணி

நடிப்புக்கு தற்காலிக ஓய்வு: ஆமிர்கான் அறிவிப்பின் பின்னணி

திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிக ஓய்வைஅறிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஆமிர் கான். தனிப்பட்ட காரணங்களை அவர் தெரிவித்துள்ளபோதும், தொடர் தோல்விகளும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

’திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து தற்போதைக்கு ஓய்வு பெறுகிறேன். எனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் சில காலம் செலவழிக்க இருக்கிறேன்’ இப்படி ஒரு தடாலடி அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார் ஆமிர் கான். டெல்லியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசும்போது ஆமிர் கான் இதனை அறிவித்தார். ‘எப்போதும் என்னுடைய நோக்கங்களுக்காக சினிமாவுடனே ஓடிக்கொண்டிருந்தேன். எனக்காக இருக்கும் குடும்பத்தினர் இதனால் இழந்தது அதிகம். எனவே அவர்களுக்கான தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி ஓய்வெடுக்கப் போகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததன் கசப்பிலேயே தற்காலிக ஓய்வை ஆமிர் கான் அறிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆமிர்கான் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ’லால் சிங் சத்தா’. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை குவித்த ’ஃபாரஸ்ட் கம்ப்’ என்ற கிளாசிக் திரைப்படத்தின் தழுவலாக லால் சிங் சத்தா உருவானது. சொந்த பேனரின் கீழ் ஆமிர் கானே தயாரிக்கவும் செய்திருந்தார். கரீனா கபூர், மோனா சிங், நாக சைதன்யா என நட்சத்திர பட்டாளத்துடன் பெரும் பொருட்செலவில் உருவான திரைப்படம் படுதோல்வியடைந்தது. பொதுவெளியில் ஆமிர் கான் தெரிவிக்கும் சில கருத்துக்களை அடுத்து அவரது புதிய திரைப்படத்தை புறக்கணிக்குமாறு பிரச்சாரமும் நடந்தது. ஆனால் படத்தின் கதைக்களமும், தனது நடிப்பும் வெற்றியை பெற்றுத் தரும் என ஆமிர் கான் நம்பியிருந்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் வெளியான ஆமிர் கானின் ஒரே படம் இதுதான். அதற்கு முன்னராக 2018ல் வெளியான ’தங்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ திரைப்படத்தின் தோல்வியை அடுத்து லால் சிங் சத்தாவை அதிகம் எதிர்பார்த்திருந்தார். திரையரங்குகளில் தோல்வியுற்ற லால் சிங் சத்தா ஓடிடியில் வெளியானதும் திருப்திகரமான வரவேற்பை பெற்றது. ஆனபோதும் விரக்தியிலிருந்து அவர் மீளவில்லை.

உண்மையில் லால் சிங் சத்தாவுக்கு முன்பே ஓய்வு பெறுவதாக இருந்தார் ஆமிர் கான். கரோன முடக்க காலத்தில் இதற்கான முடிவை எடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தபோது, லால் சிங் சத்தா புரமோஷனுக்காக ஆமிர் புரளி கிளப்புகிறார் என்றார்கள். ஒரு வழியாக இப்போது தனது முடிவை அறுதியிட்டிருக்கிறார். ஓய்வு நடிப்புக்குத்தான் என்ற போதும் திரைப்படங்களின் இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளில் தொடர்வேன் என்றும் அறிவித்திருக்கிறார். அதன்படி அவர் தயாரிக்கும் சாம்பியன்ஸ் திரைப்பட பணிகள் முழுமூச்சில் நடந்து வருகின்றன. நடிப்புக்கு ஓய்வு என்றதுமே ஏமாற்றமடைந்த ஆமிர் ரசிகர்கள் அவரது திரைக்கு பின் தொடரும் பணிகளின் வாயிலாக, தங்களது ஆஸ்தான நட்சத்திரத்தின் அடுத்த பரிமாணத்தை காண ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in