தனி ஸ்டைல் நாயகன்... சகலகலா சிம்பு!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
சிம்பு
சிம்புதனி ஸ்டைல் நாயகன்

‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’ என்ற பழமொழிக்குப் பொருத்தமானவர்கள் பலர் உண்டு. அஷ்டாவதானி என்று கொண்டாடப்படுகிற டி.ராஜேந்தருக்கு மகனாகப் பிறந்து, பள்ளி செல்வதற்கு முன்பே படப்பிடிப்புக்கு வந்து, இன்றைக்கும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து நிற்கிறார் சிம்பு!

டி.ராஜேந்தரின் படங்களில், சிறுவனாக, குழந்தையாக நடிக்கும்போது, ‘’இந்தக் குழந்தை டி.ராஜேந்தரோட பையனாம்பா. அப்படியே உஷா ராஜேந்தர் மாதிரியே இருக்கான் பாரு பையன்’’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். வளர வளர, படித்துக்கொண்டே அப்பாவின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். நம் எல்லோருக்கும் ரோல்மாடல் நம் அப்பாக்களாகத்தான் இருக்கும். சிம்பு ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது, அப்பாவைப் போலவே தலைமுடி சிலுப்புவார். கைகளை வீசி, டி.ராஜேந்தர் போலவே வசனம் பேசுவார். ‘’ஆக்‌ஷன் தான் இங்கே... டைரக்‌ஷன்லாம் அங்கே!’’ என்று சிம்பு சொல்ல, ‘கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, டைரக்‌ஷன் - டி.ராஜேந்தர் எம்.ஏ’ என்று டைட்டில் போடுவார் டி.ஆர்.

ஆனால் வளர்ந்த பிறகு சிம்புவிடம் அப்பாவின் சாயல் இல்லை. வேறு எவரின் சாயலும் பின்பற்றவில்லை. அப்பாவின் இயக்கத்தில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்தாலும் ஒரு வேகமும் சுறுசுறுப்பும் என்று எனர்ஜியாகத்தான் தொடங்கியது சிம்புவின் ஹீரோப் பயணம்.

ஒருபக்கம் காதல், இன்னொரு பக்கம் ஆக்‌ஷன் என்று தன் படங்களைத் தேர்வு செய்தார் சிம்பு. காதலும் ஆக்‌ஷனுமாக களைகட்டிய அதேவேளையில், சிம்புவின் நடனத்திலும் புதுபாணி இருந்தது. சிம்புவின் டான்ஸ் ரொம்பவே ரசிக்கப்பட்டது.

பரபர சுறுசுறு இயக்குநரான ஹரி, சிம்புவைத் தேர்வு செய்து ‘கோவில்’ என்றொரு படத்தை இயக்கினார். நாகர்கோவிலைச் சுற்றி நடக்கும் இந்தக் கதைக்கு வெகு அழகாகப் பொருந்தினார் சிம்பு. அதேசமயம், கமர்ஷியல் படங்கள் மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருந்த வேளையில், ‘முகவரி’ இயக்குநர் துரை, சிம்புவை வைத்து எடுத்த ‘தொட்டி ஜெயா’ சிம்புவின் அபாரமான நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்த படங்களில், முக்கியமான படமாக அமைந்தது. படம் முழுக்க, ஒரு உஷ்ணத்தோடு, அதேசமயம் தீர்க்கமான பார்வையுடன் வேறு முகம் காட்டி பிரமிக்கவைத்தார்.

நடுவே வரிசையாக படங்கள் வந்தன. ஆனாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியான படங்களாக அமையவில்லை. ஆனாலும் தன் மார்க்கெட் நிலையில் இருந்து கீழிறங்கவே இல்லை சிம்பு. அதேபோல், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கவர்ந்திருந்த சிம்புவுக்கு, அது எந்த வகையிலும் சேதாரமாகவில்லை.

வித்தியாசமான படங்கள் பண்ணவேண்டும், வேறு விதமான கதாபாத்திரங்கள் செய்யவேண்டும் என்கிற சிம்புவுக்கு, சினிமாதான் வாசம், நேசம், சுவாசம் எல்லாமே! அப்படியொரு தருணத்தில், தொடர்ந்து சினிமாவிலும் வாழ்க்கையிலும் கிடைத்த தோல்விகளின் வலிகளுக்கு மருந்து போடுகிற விதமாக, ‘மன்மதன்’ பண்ணினார்.

படத்தின் கதையிலும் திரைக்கதையிலும் சிம்பு பங்கு வகிக்க, எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதினார். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் வேறொரு வடிவமாக, நவீன காலத்துக்கு உட்பட்ட இளைஞனின் ஆவேசமும் பெண்கள் மீதான வெறுப்புமாக வந்த ‘மன்மதன்’ கரும்பையே கம்பமாக்கி வெற்றிக் கொடி பறக்கவிட்டான்! அதுவரை திரையில் பார்த்த சிம்பு வேறு, அந்தப் படத்தில் பார்த்த சிம்பு வேறு என்றிருக்க ரசிகர்கள் இன்னும் மும்மடங்கானார்கள்.

இதையடுத்து, ‘வல்லவன்’ என்றொரு படம். இதிலும் பாலகுமாரனை வசனத்துக்கு அழைத்துக் கொண்டார் சிம்பு. இந்தப் படமும் பெண்ணின் வேறொரு மனநிலையை படம்பிடித்துச் சொன்னது. இதுவும் சிம்புவுக்கு வெற்றியை ருசிக்கக் கொடுத்தது. தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் முதலான முதன்மை இயக்குநர்களின் படங்களிலும் புதிய இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.

இந்த சமயத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், காதலை அதன் மென்மை மீறாமல் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனக் கொடுத்தார். தமிழ் சினிமாவில் நீண்டகாலம் கழித்து வந்து, மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த காதல் படமாக இந்தப் படம் பார்க்கப்பட்டது. குறிப்பாக, சிம்புவின் யதார்த்தத்துடனான நடிப்பு, காட்சிக்குக் காட்சி கரவொலி எழுப்பச் செய்தது. ஸ்டைலிஷ் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தன் நாயகனான சிம்புவையும் மிக ஸ்டைலிஷாகக் காட்டினார். சிம்புவும் நடிப்பிலும் ஸ்டைலிஷ் காட்டி அசத்தினார்.

‘சிம்பு, படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார்’, ‘சிம்பு கால்ஷீட் சொதப்புவார்’, ‘சிம்பு வந்தால் நடித்துக் கொடுத்துவிடுவார். ஆனால் அவர் ஸ்பாட்டுக்கு வரவேண்டுமே...’ என்றெல்லாம் ஒவ்வொரு பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒவ்வொரு விதமாக குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் சிம்புவை வைத்து படம் பண்ண, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தொடர்ந்து அவரை அணுகியபடியே இருந்தார்கள். படங்களைத் தந்துகொண்டே இருந்தார்கள்.

மீண்டும் கவுதம் - சிம்பு கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ வந்தது. படம் வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற விதமாக சிம்பு, மென்மையான நடிப்பிலும் காதல் சொல்லும் தவிப்பிலும் தடாலென ஆக்‌ஷனிலும் என வெரைட்டி காட்டி மிரட்டினார்.

நட்புக்காக சில படங்களில் நடித்துத் தருவார். அந்தப் படம் பெரிதாகப் போகாமலிருக்கும். திடீரென்று ஒரேயொரு காட்சியில் சந்தானத்துக்காகவோ, ‘காக்காமுட்டை’ மாதிரியான படத்துக்காகவோ, ‘காற்றின் மொழி’ மாதிரியான படத்துக்காகவோ வந்து கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போவார்.

இயக்குநர் மணி ரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ சிம்புவுக்கு மிகப்பெரிய பேரைக் கொடுத்தது. அதேபோல், இயக்குநர் வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிரிபுதிரி வெற்றியைத் தந்தது. போதாக்குறைக்கு, மூன்றாவது முறையாக கவுதம் மேனனுடன் இணைந்த ‘வெந்து தணிந்தது காடு’ ஏற்படுத்திய தாக்கம், தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தது. நடுவே சதை போட்ட சிம்பு, உடற்பயிற்சி எடுக்கும் வீடியோ வைரலானது. சிவ வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் ஈடுபடும் சிம்புவின் வீடியோ, அவரின் வேறொரு தேடலை உணர்த்தியது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இப்படியொரு ஸ்லிம் சிம்பு, ஆச்சரிய அதிசயமாகத் திகழ்ந்தார்.

வெற்றி என்பதெல்லாம் சிம்புவின் வாழ்வில் சாதாரணம். ஆரம்பமே வெற்றியில் இருந்துதான் தொடங்கியது. தோல்வி என்பதும் சிம்புவுக்குப் புதிதில்லை. திரை வாழ்விலும் நிஜ வாழ்விலுமாக வலிகளையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் கடந்து, பல் கடித்து மேலேறி வந்தவர்தான் சிம்பு. இன்றைக்கு, வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இன்னும் கொடுப்பதற்கான படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. சகலகலா நாயகன் சிம்பு என்றுதான் சொல்லுகிறார்கள் சினிமா வட்டாரத்தில்!

1983-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி பிறந்த சிம்புவுக்கு இந்தப் பிறந்தநாளில், மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லுவோம்; வாழ்த்துவோம். அத்துடன், ‘’சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணுங்க பாஸூ’’ என்றும் செல்லமாகச் சொல்லி அதற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகளைச் சொல்லுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in