ஆரூர்தாஸ்: யதார்த்த எழுத்தால் உணர்வுகளை மீட்டிய வசனகர்த்தா!

ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதிய ஆரூர்தாஸ்... சில நினைவுகள்
ஆரூர்தாஸ்: யதார்த்த எழுத்தால் உணர்வுகளை மீட்டிய வசனகர்த்தா!

கண்களை இழந்து, சொத்துகளையெல்லாம் இழந்து நிற்கும் அண்ணன் சிவாஜியைப் பார்க்க தங்கை சாவித்திரி ஓடோடி வருவார். அப்போது தங்கையைப் பாசத்துடன் வளர்த்த கதையை அண்ணன் சொல்வார். பேசிக்கொண்டே வரும் சிவாஜி, “கை வீசம்மா கைவீசு, கடலைக்குப் போகலாம் கைவீசு, மிட்டாய் வாங்கலாம் கைவீசு” என்று சொல்லியபடி கதறுவார்; அழுவார். அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சாவித்திரி, உடைந்து நொறுங்கிய நிலையில் கதறித் தீர்ப்பார். அன்பே உருவான அந்த அண்ணன் தங்கைக்காக நாமெல்லோரும் அழுதோம். ‘பாசமலர்’ படத்தை எப்போது பார்த்தாலும் அழுவோம். கண்ணீரில் நனைய வைக்கும் வார்த்தைகள் நிறைந்த வசனங்கள் அந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம். படத்தின் உணர்ச்சிபூர்வமான காட்சிகளை நம்மால் எளிதில் கடந்துவிட முடியாது. அழுதால்தான் நம் மனம் ஆறுதலடையும். நம்மை அழவும் வைத்து, ஆறுதல் ஒத்தடமும் கொடுத்த அந்த வசனங்களை எழுதியவர்... ஆரூர்தாஸ்.

திருவாரூர்க்காரர். உண்மையான பெயர் ஏசுதாஸ். ஆனால் இளம் வயதில் நாடக மேடைகளில் இயங்கிக்கொண்டிருந்த தருணத்திலேயே ஏசுதாஸ்... ஆரூர்தாஸ் என அறியப்பட்டார். அந்தக் காலத்திலெல்லாம் ஊரின் பெயரை, தன் பெயருக்கு முன்னே சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்ததும் ஒரு காரணம்.

அப்போதெல்லாம் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யெல்லாம் சேர்ந்து தஞ்சாவூர் ஜில்லா என்று அழைக்கப்பட்டது. திரையுலகில் தஞ்சை ராமையாதாஸ் மிகப் பிரபலமாக இருந்தார். அவரிடம் ஆரூர்தாஸ், சினிமாவில் சேர வேண்டும் என்கிற தன் விருப்பத்தைச் சொன்னார். ராமையாதாஸ் அவரைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

அது, 1955-ம் வருடம். அவருடன் சேர்ந்த ஆரூர்தாஸ், சினிமாவின் நுணுக்கங்களை, ஒரு கதை, எப்படித் திரைக்கதையாக வடிவெடுக்கிறது, வடிவத்துக்கு வந்த திரைக்கதைகளுக்குக் காட்சிகளை எப்படியெல்லாம் பிரிக்கிறார்கள், பிரிக்கப்பட்ட காட்சிகளுக்கு எதுமாதிரியான வசனங்கள் எழுதப்படுகின்றன என்பவற்றையெல்லாம் உள்ளுக்குள் வாங்கிக்கொண்டார்.

இளங்கோவனின் வசனங்கள் அப்போது மிகப்பிரபலம். கலைஞர் கருணாநிதியின் வசனங்கள், கரவொலியை அதிகம் பெறுபவையாக இருந்தன. அந்தச் சமயத்தில், தஞ்சை ராமையாதாஸ், ‘நாட்டியதாரா’ என்கிற படத்துக்கு வசனமும் எழுதினார். உதவி வசனகர்த்தாவாகப் பணியாற்றினார் ஆரூர்தாஸ்.

திரைவாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே பேபி என்பவரைத் திருமணம் புரிந்தார். ‘நாட்டியதாரா’ நடனங்களுக்காகவும் வசனங்களுக்காகவும் பேசப்பட்டன. கொண்டாடப்பட்டன. ஆரூர்தாஸுக்கு சினிமாவுக்கான வசன நடை யதார்த்தமாக வெளிப்பட்டது. அந்தச் சமயத்தில் அவருக்கு மகள் பிறக்க, ஆரோக்கியமேரி என்று பெயரிட்டவர், ‘நாட்டியதாரா’ கொடுத்த அடுத்தக் கட்டத்தின் விளைவாக, தன் மகளுக்கு ‘தாரா’ என்று பெயரிட்டு செல்லமாக அழைத்தார்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் ஆரூர்தாஸுக்கு நல்லதொரு நட்பு கிடைத்தது. தன் வாழ்வில் சாண்டோ சின்னப்பா தேவரை மறக்கவே முடியாது என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் ஆரூர்தாஸ். 1959-ல் தான் தயாரித்த படத்துக்கு ஆரூர்தாஸை எழுதவைத்தார் தேவர். அந்தப் படம்...’ வாழவைத்த தெய்வம்’. தேவரை தெய்வமாகவே பாவித்தார் ஆரூர்தாஸ்.

ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் ஆரூர்தாஸை ரொம்பவே பிடித்துப்போனது. ‘’நீ வேணா பாரு தாஸ். சினிமால பெரியாளா வரப்போறே நீ’’ என்று ஜெமினி கணேசன் ஆரூராரிடம் ஆரூடம் சொல்லிக்கொண்டே இருந்தார். 1961-ம் ஆண்டு, அண்ணன் - தங்கை பாசத்தைப் பேசும் கதையைப் படமாக எடுக்க நினைத்தார் இயக்குநர் ஏ.பீம்சிங். அப்போது ஜெமினியும் சாவித்திரியும் சிவாஜியிடம் ஆரூர்தாஸ் குறித்துச் சொல்லி ‘அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பாரேன்’ என்றார்கள். ‘சரி வரச்சொல்லுங்கள்’ என்றார் சிவாஜி. படத்தில் உள்ள ஒரு காட்சியைக் கொடுத்து வசனம் எழுதச் சொன்னார்கள். ஆரூர்தாஸ் எழுதிக் கொடுத்துவிட்டு, வரவேற்பறையில் அமர்ந்து காத்திருந்தார்.

வசன பேப்பர், சிவாஜியிடம் சேர்க்கப்பட்டது. படித்து முடித்ததும், ‘’பீம்பாயை வரச்சொல்லுங்க (பீம்சிங்கை, பீம்பாய் என்றுதான் சிவாஜி அழைப்பார்)’’ என்று சிவாஜி பரபரத்தார். பீம்சிங் வந்தார். ‘’நல்லா எழுதுறாரு. இவரை இதுல பயன்படுத்திக்குவோம்’’ என்றார் சிவாஜி. இதைச் சொல்லிவிட்டுத் திரும்பியவர், மீண்டும் பீம்சிங்கிடம் , ‘’தொடர்ந்து பயன்படுத்திக்குவோம்’’ என்றார். ‘பாசமலர்’ படத்தில் சிவாஜியின் நடிப்புக்காகவும் சாவித்திரியின் நடிப்புக்காகவும் பாடல்களுக்காகவும் மட்டுமின்றி, ஆருர்தாஸின் வசனங்களுக்காகவும் கரவொலி பறந்தன.

அதன் பின்னர் சிவாஜியின் மனதில் ஆரூர்தாஸ் தனியிடம் பிடித்தார். தொடர்ந்து தன் படங்களுக்கு ஆரூர்தாஸை வசனங்கள் எழுதவைத்தார் சிவாஜி. தன் மனதுக்குப் பிடித்துவிட்டால், ஒவ்வொருவரையும் ஒரு தனி ஸ்டைலுடன் அழைப்பது சிவாஜியின் இயல்பு. ஆரூர்தாஸ்... சிவாஜிக்கு ‘ஆரூரான்’ ஆனார். ‘’என்ன ஆரூரான். படத்துல உன் வசனம்தான் பேசப்படணும். அதைப் பேசுனதுனால எனக்குக் கைத்தட்டல் கிடைக்கணும். அப்படி எழுது’’ என்று உற்சாகமூட்டுவார். ‘பாவமன்னிப்பு’, ‘பார் மகளே பார்’ என பல சிவாஜி படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார்.

அந்தப் பக்கம் தேவர் பிலிம்ஸ் படங்களுக்குத் தொடர்ந்து எழுதுகிற வாய்ப்பைப் பெற்றார். எம்ஜிஆருக்கும் ஆரூர்தாஸைப் பிடித்துப் போனது. பத்திரிகை விமர்சனங்களில், ஆரூர்தாஸின் வசனங்களை நாலு வரி குறிப்பிட்டு எழுதினார்கள்.

‘பாசமலர்’ படத்தில் நண்பர்களான சிவாஜியும் ஜெமினியும் முதலாளி, தொழிலாளியாக இருந்து பேசும் காட்சி, இதுவரை எந்தப் படத்திலும் இத்தனை அழுத்தமாக வந்ததில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஆரூர்தாஸின் வசனம்.

அந்தக் காட்சியை இன்றைக்கும் பார்த்தால் சிவாஜி செய்த மேஜிக் தெரியும். ஆரூர்தாஸின் வசனத்தைப் பேசும்போது, கண்ணைக் கூட இமைக்காமல் ஜெமினியை வெறித்து ஆவேசமாகப் பார்த்துக் கொண்டே இருப்பார். பீம்சிங் உட்பட எல்லோரும் சிவாஜியைப் பாராட்டினார்கள். ‘’ஆரூரான் எழுதினதுல தூக்கிச் சாப்பிட்டுப் போயிட்டான். அப்புறம் நாம எதுனா பண்ணியாக வேணாமா’’ என்று சொல்லிச் சிரித்தாராம் சிவாஜி.

தேவர் பிலிம்ஸ் சார்பில், தண்டாயுதபாணி பிலிம்ஸ் ‘அக்கா தங்கை’ என்ற படத்தை, செளகாரையும் கே.ஆர்.விஜயாவையும் வைத்து எடுத்தது. ஜெய்சங்கரும் மேஜரும் நடித்திருந்தார்கள். காட்சிக்குக் காட்சி கதையின் கனத்தை ஆரூர்தாஸின் பேனா அதிகப்படுத்திக்கொண்டே போனது. எம்ஜிஆர் - தேவர் பிலிம்ஸ் கூட்டணி என்றாலே ஆரூர்தாஸ், வசனத்தில் புகுந்து விளையாடுவார். அதை ரசித்து ரசித்துப் பேசுவார் எம்ஜிஆர்.

‘பார் மகளே பார்’ படத்தில் இரண்டு பெண்களில் ஒரு பெண் தனக்குப் பிறந்தவர் அல்ல அது எந்தப் பெண் என்று தெரியாமல் இருக்கும். உணர்ச்சிபூர்வமான இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸின் வசனங்கள் மேலும் மேலும் நம்மைக் கலவரப்படுத்திக்கொண்டே வரும். செல்வச்செருக்கு கொண்ட பணக்கார மனநிலையில் சிவாஜிக்கு எழுதப்பட்ட வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

சிவாஜி நடித்த 32 படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருக்கிறார். ‘புதிய பறவை’ படத்தின் வசனங்கள் கவிதை மாதிரியும் பளீரென்றும் ஜிலீரென்றும் சுவைபட எழுதப்பட்டிருக்கும். எம்ஜிஆருக்கு 24 படங்களுக்கு மேல் எழுதினார். நடிகையர் திலகம் சாவித்திரிக்கு, 24 படங்களுக்கு மேல் வசனங்கள் எழுதினார். சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் ஆரூரார் மீது தனிப்பிரியமும் மரியாதையும் எப்போதுமே உண்டு.

ஏ.பீம்சிங், தாதா மிராஸி, ஏ.சி.திருலோகசந்தர், எம்.ஏ.திருமுகம் என பல இயக்குநர்கள் ஆரூர்தாஸை வசனம் எழுத அழைத்துக் கொண்டார்கள். பல படங்களுக்கு டைட்டிலில் பெயரெல்லாம் போடாமல், உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். பாடல்களும் எழுதியிருக்கிறார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இவர் எழுதாத நடிகர்களே இல்லை. வடிவேலுவின் படத்துக்குக்கூட வசனம் எழுதியிருக்கிறார்.

டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவதற்கு நிறைய வரையறைகள் உண்டு. அந்த உதட்டசைவுக்குத் தக்கபடி வசனம் எழுத வேண்டும். சினிமாவில் மிகப்பெரிய உச்சிக்குச் சென்றுவிட்ட போதும் டப்பிங் படங்கள் பலவற்றுக்கும் வசனங்கள் எழுதினார் ஆரூர்தாஸ்.

அதேபோலத்தான், கோர்ட் காட்சிகளுக்கு வசனம் எழுதுவதும்! கொஞ்சம் பிசகினாலும் கேலியாகிவிடும். கிண்டலடித்தது போலாகிவிடும். கோர்ட் காட்சியில் ஆடியன்ஸ் மனம் லயிக்காமல் போய்விடுகிற ஆபத்தும் இருக்கிறது. ஆனால் மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த கே.பாலாஜியின் ‘விதி’ படத்தில் பெரும்பாலான காட்சிகள் கோர்ட் காட்சிகள்தான். ஆரூர்தாஸ், தன் எழுத்துகளால் அசத்தியிருப்பார். ஆரூர்தாஸின் வசனங்களுக்காக, ‘விதி’ திரைப்படத்தின் கதை, வசனம் கொண்ட ரிக்கார்டுகள் சக்கைப்போட்டு போட்டன. ரிக்கார்டு கோடுகள் தேயத்தேய சுழலவிட்டுக் கேட்டுக்களித்தவர்கள் லட்சக்கணக்கான பேர் உண்டு. எங்கள் ஊர்த் திருவிழாக்களில், பொங்கல் விழாவில், விளையாட்டுப் போட்டிகளில், ‘ஏம்பா... ‘விதி’ படம் கதை வசனம் இருந்தா போடுங்களேம்பா. பொழுது ஓடிரும்’ என்று சவுண்ட் சர்வீஸ் அண்ணனிடம் விரும்பிக் கேட்ட நேயர்கள், இன்னமும் ஆரூராரின் வசனத்தை மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

‘தெய்வ மகன்’ படத்தில், சிவாஜி - சிவாஜி, சிவாஜி - மேஜர், அப்பா சிவாஜி - மூத்த மகன் சிவாஜி பேசுகிற இடங்களெல்லாம் கரவொலி எழும்பி அடங்க நேரங்கள் பிடித்தன. அந்த அளவுக்குத் தன் யதார்த்த வசனங்களால், இயல்பான உணர்வுகளைக் கொட்டியிருப்பார் ஆரூர்தாஸ்!

ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று சொல்லுவோமே... அதேபோல், ஆயிரம் படங்களுக்கு வசனம் எழுதிய சாதனையாளர் ஆரூர்தாஸாகத்தான் இருக்க வேண்டும். தமிழக அரசு பல விருதுகளைத் தந்து கெளரவித்திருக்கிறது. திருவாரூர் மண்ணில் பிறந்து தமிழகத்தையே ஆட்சி செய்த கலைஞரும், ஆரூர்தாஸ் மீது அப்படியொரு பிரியமும் அன்பும் கொண்டிருந்தார். ‘ஆரூரான்’ என்றுதான் கலைஞரும் ஆரூர்தாஸை அழைத்து வந்தார்.

1931 செப்டம்பர் 10-ம் தேதி பிறந்த ஆரூர்தாஸ், இரண்டு மாதங்களுக்கு முன்னர், 91-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நேற்று (நவ.20) மண்ணுலகை விட்டுப் பிரிந்தார். திருவாரூரில் தேரோட்டம் நடக்கும்போது ‘ஆரூரா தியாகேசா’ என்று மக்கள் அழைப்பார்கள். ‘ஆரூர்’ என்றும் ‘ஆரூரான்’ என்றும் திருவாரூர்க்காரர்களைச் சொல்வார்கள். திருவாரூர்த் தேரழகு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆரூர்தாஸின் எழுத்தும் அழகுதான்!

அப்பா சந்தியாகுவுக்கும் அம்மா ஆரோக்கியமேரிக்கும், சொந்த ஊரான திருவாரூருக்கும் மிகப்பெரிய பெருமைகளைப் பெற்றுத் தந்த ஆரூர்தாஸ், வாங்காத விருதுகளில்லை. பெறாத பட்டங்களில்லை. சினிமாவுக்கு, தொலைக்காட்சிக்கெல்லாம் எழுதிக் குவித்தார். மனைவி பேபி மீது உயிரையே வைத்திருந்தார். மூன்று மகள்களும் மகனும் உண்டு.

தமிழ் சினிமா சரித்திரத்தில், ஆரூர்தாஸ் எனும் வசன எழுத்தாளர் தனித்துவ ஆளுமையானவர் என்பதை காலம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in