ஒற்றைப் பார்வையில் மிரட்டிய ஓ.ஏ.கே.தேவர்!

ஓ.ஏ.கே.தேவர் நினைவு நாளில் சில பகிர்வுகள்
ஓ.ஏ.கே.தேவர்
ஓ.ஏ.கே.தேவர்

தமிழ் சினிமாவில் நம் பார்வை வில்லன்களின் பக்கமும் இருக்கும். அந்தக் காலத்தில் டி.எஸ்.பாலையாவின் வில்லத்தனம் வெகு பிரபலம். அடுத்து எம்.என்.நம்பியாரும் பி.எஸ்.வீரப்பாவும் அப்படியொரு மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தினார்கள். அதன் பிறகு எஸ்.ஏ.அசோகன், ராமதாஸ், ஆர்.எஸ்.மனோகர் என்று பல வில்லன்கள் ஒவ்வொரு வகையில் நம்மைக் கவர்ந்தார்கள். அந்த வகையில், பார்க்கிற பார்வையிலும் நடையிலும் முகபாவனைகளிலும் வெண்கலக்குரலிலும் ஒரு வில்லன் மிரட்டினாரென்றால் அவர்... ஓ.ஏ.கே.தேவராகத்தான் இருக்க முடியும்.

மதுரை உசிலம்பட்டியை அடுத்துள்ள சின்னஞ்சிறிய கிராமம்தான் ஒத்தப்பட்டி. இவரின் பெயர் என்னவோ கருப்பு தான். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது இரண்டு மூன்று கருப்புகள் இருந்தார்கள். அதனால், ஒத்தப்பட்டி ஐயத்தேவர் மகன் கருப்பு என்பதை ஓ.ஏ.கே என்று சுருக்கிக் கூப்பிட்டார்கள். பின்னாளில் இவரின் சாதியும் பெயருடன் இணைந்துகொள்ள, ஓ.ஏ.கே.தேவர் என எல்லோராலும் அறியப்பட்டார்.

இவருடைய ஊர்க்காரர்கள், ஒன்று விவசாயம் பார்ப்பார்கள். இல்லையெனில் ராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள். சிறுவயதில் இருந்தே பாட்டிலும் கூத்திலும் மனதைப் பறிகொடுத்த ஓ.ஏ.கே. தேவர், பள்ளியில் சக மாணவர்களுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு, நாடகத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கணீரென்று பாட, அதை வாத்தியார் கேட்டுவிட்டு மனம் திறந்து பாராட்டினார். ‘யோவ் ஐயத்தேவரே... உம்ம புள்ள பிரமாதமா பாட்டு படிக்கிறான்யா’ என்று பாராட்டாகச் சொல்ல, அதைக் கேட்டு கலங்கிப்போனார் ஓ.ஏ.கே-யின் அப்பா. ‘இவன் உருப்படமாட்டான்’ என்று சொல்லி, ராணுவத்தில் சேர்த்துவிட்டார். ஆனால் ராணுவப் பணியைச் செய்யவிடாமல் இவரின் கலைத்தாகம் தடுத்தது. ஏதேதோ பொய்க் காரணங்களைச் சொல்லி, ராணுவத்தில் இருந்து கிளம்பிவந்தார்.

அப்போது மதுரையில் இயங்கிக்கொண்டிருந்தது ‘சக்தி நாடக சபா’. மிகப் பிரசித்தி பெற்ற இந்த சபாதான் பல நடிகர்களுக்குத் தாய்வீடு. சிவாஜி, நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்டோர் இங்கிருந்துதான் வந்தார்கள்.

சக்தி நாடக சபாவின் ‘கவியின் கனவு’ எனும் நாடகம் மிகவும் பிரபலம். திருச்சியில் நாடகம் போய்க்கொண்டிருந்தது. ஓ.ஏ.கே.தேவர் அங்கே சென்று நாடகத்தைப் பார்த்தார். அதுவொன்றும் முதல் முறை அல்ல. ஏற்கெனவே 25 முறைக்கு மேல் பார்த்திருக்கிறார்.

சபாவின் முதலாளி சக்தி டி.கே.கிருஷ்ணசாமியைச் சந்தித்து, ‘கவியின் கனவு’ நாடக வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசிக்காட்டினார். இதைக் கேட்டு மிரண்டுபோனார். ‘தம்பீ... பெரியாளா வருவேடா’ என்று சபாவில் சேர்த்துக்கொண்டார். இப்படித்தான் நடிகரானார் ஓ.ஏ.கே.தேவர்.

பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. ஆனால் கட்டுபடியாகவில்லை. நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் அதுவொன்றும் பேர் சொல்லும்படியாகவெல்லாம் அமையவில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இவருடன் சேர்ந்து கஷ்டப்பட்டவர் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம். கவிஞரின் மூலமாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு விவரம் தெரியவர, ஓ.ஏ.கே.தேவரை உடனே அழைத்தார். ஏற்கெனவே கலைவாணர்தான், இவரை மாடர்ன் தியேட்டர்ஸில் சேர்த்துவிட்டிருந்தார்.

இப்போது அவரை அழைத்து, ‘மாமன் மகள்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். 1950-ல், ‘மாமன் மகள்’ படம் மூலமாகத் திரையில் அறிமுகமானார் ஓ.ஏ.கே.தேவர். ஆரம்பமே அடியாள் கதாபாத்திரம்.

தன் ஆஜானுபாகுவான உடலையும் உருட்டும் விழிகளையும் வைத்துக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கினார். பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச்சின்ன வாய்ப்புகள் வந்தன.

மீண்டும் என்.எஸ்.கே அழைத்தார். இந்த முறை எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ’நீங்க நடிக்கிற ‘மதுரை வீரன்’ படம் கதை தெரியும் எனக்கு. திருமலை நாயக்கர் வேஷத்தை இவனுக்குக் கொடுங்க. பிய்ச்சு உதறிருவான்’ என்றார். அந்தப் படத்தில் திருமலை நாயக்கராக நடித்ததுதான், ஓ.ஏ.கே.தேவரின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை.

கருப்பு வெள்ளைக் கால சினிமாவில், தன் கண்களாலும் விறைப்பான உடல்மொழியாலும் கடுகடுப்பு கொண்ட முகத்தாலும் முக்கியமாக சன்னமான, அதேசமயம் கொஞ்சம் கடுகடுத்தனமுமான குரலாலும் அசத்துக்கிறார் என்று அப்போது எல்லோராலும் ஓ.ஏ.கே. தேவர் கொண்டாடப்பட்டார். முறைத்தபடி ஒரு பார்வை பார்த்தாலே ரசிகர்களுக்குக் கதிகலங்கும். அப்படி ஒரு அசத்தல் நடிப்பை வழங்கினார்.

சினிமாவில் சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. சுப்பையாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. நம்பியார் முன்னதாகவே நடிக்க வந்துவிட்டார்... தனக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருந்திய ஓ.ஏ.கே.தேவருக்கு மளமளவென படங்கள் வரத்தொடங்கின. இவரின் வெண்கலக்குரலுடன் தெறித்து வந்த வசனங்களுக்கு மிகப்பெரிய கைத்தட்டல்கள் பறந்தன. மாடர்ன் தியேட்டர்ஸில் மாதம் பத்து ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவருக்கு, இப்போது படங்கள் வரிசைகட்டி நின்றன.

இதைத் தொடர்ந்து ஓ.ஏ.கே.தேவருக்கு ஏறுமுகம்தான். வித்தியாசமான படங்களாகவே அமைந்தன. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், சிவாஜிக்கும் ஜெமினிக்கும் ஜாவர் சீதாராமனுக்கும் ஜாக்ஸன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபனுக்கும் மட்டுமின்றி இவருக்கும் புகழைத் தேடித்தந்தது.

எம்ஜிஆர் படங்களில் நடித்து வந்தவருக்கு, சிவாஜி படத்திலும் நடிக்கிற வாய்ப்பு வந்தது. சிவாஜி நடத்திய சிவாஜி மன்றத்தில் சேர்ந்து, அவருடன் பல நாடகங்களில் நடித்து வந்தார். பிறகு அங்கிருந்தும் விலகினார். ‘புதிய பறவை’ படத்தில் போலீஸ் கேரக்டரில் தனித்துவமான நடிப்பை வழங்கினார். கே.பாலசந்தரின் ‘எதிர்நீச்சல்’ படத்தில், சின்ன கேரக்டர்தான். ஆனால் அற்புதமாக காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஜெய்சங்கருடன் ‘யார் நீ’ படத்தில் நடித்தார். இவர் வரும் காட்சிகளெல்லாம் பீதியைக் கிளப்பின. எம்ஜிஆருடன் ‘ராஜா தேசிங்கு’, ராமன் தேடிய சீதை’, சிவாஜியுடன் ‘அன்புக்கரங்கள்’, ‘உத்தமபுத்திரன்’, ‘குறவஞ்சி’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘தங்கச்சுரங்கம்’, ‘திருவிளையாடல்’, ‘அன்னை இல்லம்’, ‘கல்யாணியின் கணவன்’ முதலான ஏராளமான படங்களில் நடித்தார்.

இன்றைய தலைமுறையினரையும் ஈர்த்த படங்களில் ‘புதிய பறவை’ எனும் பழைய படம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. சிவாஜிதான் செளகார் ஜானகியைக் கொலை செய்திருக்கிறார் என்று தெரியும். ஆனால் சாட்சி இல்லை. எனவே, சிங்கப்பூர் காவல் துறை ஒரு நாடகம் போடும். அதற்கு தமிழகக் காவல் துறையும் ஒத்துழைப்பு கொடுக்கும். சிவாஜியின் நண்பராகவும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மிடுக்கு குறையாமல் நடித்த ஓ.ஏ.கே.தேவர், தன் தனித்துவமான நடிப்பால் நம்மைக் கவர்ந்திருப்பார்.

பின்னர், தாமே ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். அப்போதெல்லாம் ‘ஓ.ஏ.கே. தேவர் நாடகம் போடுகிறாராம்பா’ என்று மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர், தேனி என்றெல்லாம் ஊர்களில் கூட்டம் அலைமோதியது. அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு, நாடகம் பார்த்தார்கள். ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் நாடகம். நடுவே கலைஞருடன் நெருக்கம் என்று தொடர்ந்து பரபரவென இயங்கி வந்தார்.

‘அண்ணே, இந்தப் பசங்க நல்லா இசையமைக்கிறாங்க. திருச்சில போடுற நம்ம டிராமாவுக்கு இவங்களை மியூஸிக் பண்ணப் போடுங்கண்ணே’ என்று ஓ.ஏ.கே. தேவரிடம், இப்போதைய நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் சொன்னார். அவரும் திருச்சியில் அரங்கேறும் நாடகத்தில் இசையமைக்க அந்தச் சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டார். அதுவரை நாடகம் நடிப்புக்காக, வசனங்களுக்காக, கதைக்காக கைதட்டல்களையும் பாராட்டுகளையும் வாங்கியிருந்தன. ஓ.ஏ.கே. தேவரின் அன்றைய நாடகத்துக்கு, இசைக்காகவும் பாடல்களுக்காகவும் கரவொலி கிடைத்தன. ‘இந்தப் பசங்க பின்னாடி பெரியாளா வருவாங்கப்பு’ என்று ஓ.ஏ.கே.தேவர் சொல்லி மகிழ்ந்தார். வாழ்த்தி அனுப்பினார். அன்றைக்கு இவரிடம் சங்கிலி முருகன் சிபாரிசு செய்தது... இளையராஜா மற்றும் சகோதரர்களைத்தான். ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற பெயரில் இசைக்கச்சேரிகள் செய்துகொண்டிருந்தார்கள் அப்போது!

வில்லத்தனமாகவோ குணச்சித்திரமாகவோ எப்படி நடித்தாலும் எவரைப் போலவும் நடிக்கமாட்டார் ஓ.ஏ.கே.தேவர். பார்க்க கரடுமுரடான தோற்றம் கொண்டிருந்தாலும் குரலில் அதட்டலும் உருட்டலுமான பாவனைகள் கொண்டிருந்தாலும் எல்லோரிடமும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் கனிவும் இனிமையாகப் பழகக்கூடியவர் என்று திரையுலகில் இவருடன் பழகிய பலரும் சொல்கிறார்கள்.

1973 ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி காலமானார் ஓ.ஏ.கே. தேவர். இன்றைக்கு அவர் மகன் ஓ.ஏ.கே. சுந்தரும் நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் ஓ.ஏ.கே. தேவர், எனும் பண்பட்ட நடிகர், பன்முகக் கலைஞர் நம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டே இருப்பார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in