வலது பக்கம் எம்.ஜி.ஆர், இடது பக்கம் கருணாநிதி: கார்த்தியை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்

வலது பக்கம் எம்.ஜி.ஆர், இடது பக்கம் கருணாநிதி: கார்த்தியை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்

பிரபல நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மதுரையில் அரசியல் குறியீட்டுடன் ஒட்டி உள்ள போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

"2026 முதல்வர் வேட்பாளர் விஜய்", "ஏழை குழந்தைகளுக்கு கல்வி தந்த அகரத்தின் முதல்வரே", "மேடை ஏறி அரசியல் பேசுபவர்கள் பல மேடையே ஏறாமல் அந்த அரசியலே பேசும், அதான் எங்க தல". இவையெல்லாம் நடிகர் விஜய், சூர்யா, அஜித் ஆகியோருக்கு அவர்களது ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டர் வாசகங்கள். இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் நடிகர் சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி. இவர் வரும் 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தனது நடிப்பு வருவாயின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் இவருக்கு, மதுரையைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் மாநகர் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், "நல்ல எண்ணங்களை மக்களிடம் சேர்ப்போம் தம்பி கார்த்தி" என்ற வாசகமும், நடிகர் கார்த்தி தலைமை செயலகம் முன்பு நிற்பது போலவும், அதன் வலது பக்கம் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் கருணாநிதி என முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், நடிகர் கார்த்தியும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சுவரொட்டி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து அகில இந்திய கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டிய, 'மதுரை வடக்கு மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்ற' நிர்வாகிகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தங்களது தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக சுவரொட்டியை ஒட்டியதாகவும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.