காலத்தால் அழியாத கலைவாணர்!

சினிமா நகைச்சுவையின் பிரம்மா என்எஸ்கே நினைவு தின சிறப்புப் பகிர்வு
கலைவாணர் என்.எஸ்.கே.
கலைவாணர் என்.எஸ்.கே.

’கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே அடங்கிவிடாது’ என்று ஒரு பாடலில் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பார். இப்படித்தான் சிலரின் குணங்களையும் ஒரு எல்லைக்குள் சுருக்கிவிட முடியாது. நடிகர்களில் சிலரின் திறமைகளை, வெறும் திறமைகளாக மட்டுமே பார்க்காமல், அவர்கள் சொன்ன நல்விஷயங்களைக் கொண்டும் சொந்த வாழ்க்கையில் அவர்கள் நடந்துகொள்வதைக் கொண்டும்கூட பார்க்கத்தான் வேண்டும். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எனும் கலைஞனையும் அவரின் நடிப்பையும் நடிப்பின் மூலம் நமக்குச் சொன்ன கருத்துகளையும் வாழ்வில் அவர் எல்லோரிடமும் நடந்துகொண்ட விதத்தையும், ‘கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே அடங்கிவிடாது’ எனும் கவியரசரின் வார்த்தைகளில்தான் வர்ணிக்க வேண்டும். பரந்துவிரிந்த எல்லைகளற்ற ஈர மனசுக்குச் சொந்தக்காரர் என்எஸ்கே!

குமரியில்... நாகர்கோவிலில் பிறந்தவர் என்எஸ்கே. வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பம். இந்த வேலை அந்த வேலை என்றெல்லாம் இல்லாமல், எந்த வேலையாக இருந்தாலும் பார்த்துத்தான் தன் குடும்பத்தையும் பால்யத்தையும் கழித்தார். நாமெல்லாம் பொழுதைப் போக்க, குமரிக்குச் செல்வோம். ஆனால் அங்கேயே பிறந்த வளர்ந்த என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பேச்சும் பாட்டும்தான் பொழுதுபோக்கு. நிறையவே பேசுவார். இன்னும் இன்னும் நிறையவே பாடுவார். ஐந்து நிமிடம் இவர் பேச்சைக் கேட்டுவிட்டு ‘அட...’ என்று வியந்தார்கள். அதேபோல், பாடுவதைக் கேட்டுவிட்டு, ‘ஆஹா...’ என்று சொக்கிப்போனார்கள் ஊர்க்காரர்கள்.

அதுமட்டுமா? வில்லுப்பாட்டில் கைதேர்ந்தவரான என்எஸ்கே, பேச்சாலும் பாட்டாலும் ஊர்மக்களைக் கட்டிப்போட்டார். அந்த இசையின் வழியாகவும் குரலின் வழியாகவும் பாடல்களின் வழியாகவும் மக்களிடம் தேசப்பற்றைப் புகட்டினார். நல்லன என்று சொல்லும் விஷயங்களையெல்லாம் புத்திக்குள் ஏற்றினார். உபதேசத்தை உபதேசமாக இல்லாமல் பொழுதுபோக்காகச் சொல்லும் செப்படி வித்தை, இயல்பாகவே அவருக்குள் இருந்தது.

வில்லுப்பாட்டு இசைத்தார். இசை பொழிந்தது. இசையினூடே பேசினார். அந்தப் பேச்சில் சர்க்கரையெனத் தித்தித்தது. பாடினார். பாடலினுள்ளே கருத்தாழத்தை கவளம் கவளமாக புகுத்திப் புகட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக, பாட்டிலும் இசையிலும் பேச்சிலும் இன்னொன்றையும் சேர்த்துக் கரைத்துக் குழைத்துக் கொடுத்தார். அது... நகைச்சுவை.

கலைவாணரின் கச்சேரி ஊரில் எங்கு நடந்தாலும் வண்டி கட்டிக்கொண்டு போய் பார்த்தார்கள். வருவோரின் முகத்திலறைந்தெல்லாம் நல்ல விஷயத்தைச் சொல்லமாட்டார் அவர். முதுகைத் தடவி, தோளில் கைப்போட்டுக்கொண்ட தோழமை உணர்வுடன் சொன்னார். சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். எல்லோரும் வயிறு குலுங்கச் சிரிக்கும் வகையில், புரியும் வகையில், புரிந்து உணரும் வகையில் சொன்னார்.

’நல்ல நகைச்சுவை என்பது எவரையும் எள்முனையளவு கூட காயப்படுத்திவிடக் கூடாது. அதுவே உண்மையான நகைச்சுவை’ என வெளிநாட்டு அறிஞர்கள் சொல்லிவைத்த கதையெல்லாம் என்எஸ்கே படித்தாரா, அவருக்குத் தெரியுமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால். தன் நகைச்சுவையில் எவரையும் துளிகூட காயப்படுத்தாமலேயே கருத்துகளை, பூவெடுத்து வீசுவது போல் நம் மீது வீசினார்.

வில்லுப்பாட்டில் இருந்து நாடகங்களின் பக்கம் சென்றார். இன்னும் வரவேற்பும் கரவொலியும் அதிகமாகின. நாடகத்தில் இருந்து சினிமாவின் பக்கம் வந்தார். அவர் இன்னும் இன்னுமாக மக்களிடம் ஊடுருவினார். மக்களின் சிந்தனைகளில் பெரும்மாற்றங்களைக் கொண்டுவந்தார். இந்த வித்தைகளெல்லாம் சிரிக்கச் சிரிக்கச் செய்துகொண்டே இருந்தார். அதனால்தான் அவரை நகைச்சுவைக் கோமாளி என்று அப்போது எழுதினார்கள் விமர்சகர்கள்.

நகைச்சுவை என்றால் எப்படி இருக்க வேண்டும், சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை எளிமையாக எப்படிப் புரியவைக்க வேண்டும், போதனையையும் நகைச்சுவையையும் எப்படிக் கலந்தால், அது கேட்போரையும் பார்ப்போரையும் தொட்டு உசுப்பிவிடும் என்பதையெல்லாம் தமிழ் சினிமாவில் தெரிந்துகொண்ட முதல் வித்தகர் கலைவாணர்தான்! குடும்பத்துக்குப் பாடம் நடத்துவார். கணவனும் மனைவியும் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஜாலியாகச் சொல்லியே உணர்த்துவார். ‘பணம்’ படுத்துகிற பாடுகளை, சிவாஜியை வைத்து இயக்கிய ‘பணம்’ படத்தில், பொளேர் பொளேரெனச் சொல்லியிருப்பார்.

முதலாளிக்கும் தொழிலாளுக்குமான உறவைச் சொல்லி, கம்யூனிஸ சித்தாந்தங்களைச் சொல்லி, இப்படி இருக்க வேண்டும் என வலியுறுத்துவார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் சூட்சுமங்களைச் சொல்லிக் கொடுப்பார். ‘நல்லதம்பி’ படத்தில் வாழ்வியல் கோட்பாடுகள் என நாம் குறுக்குநெடுக்காகவும் புரிந்தும்புரியாமலும் வைத்திருக்கிற விஷயங்களின் சரிதவறுகளை கேலியாகச் சொல்லியே உணர்த்துவார்.

இவரின் படங்கள் எல்லாமே வெறும் மூன்று மணி நேரப் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்கள் அல்ல. அவை அனைத்துமே நம் வாழ்க்கைக்கான பாடங்களாகவும் வேதங்களாகவும் இன்றைக்கும் திகழ்கின்றன என்பதை இப்போது அவர் படத்தைப் பார்த்தால்கூட நம்மைத் தாக்கி, நம் சிந்தையை உசுப்பிவிடும்.

வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவையும் சிலேடையும் புகுந்து புறப்பட்டு வந்துகொண்டே இருக்கும். கலைவாணரும் அவர் மனைவி டி.ஏ.மதுரமும் ஒருவரின் வீட்டுக்குச் செல்ல, ‘காபி சாப்பிடுறீங்களா? டீ சாப்பிடுறீங்களா?’ என்று கேட்க, கலைவாணர் தன் மனைவியைப் பார்த்து சிரித்துவிட்டு, எதிரே இருந்தவரிடம் ‘டீயே மதுரம்’ என்று சொல்ல, அந்த வீடே குலுங்கிச் சிரித்தது.

இது விஞ்ஞான யுகம். ஒருநாளில் 24 மணி நேரம் விஞ்ஞானத்துடன் உறவாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சினிமாவுக்குக் கதை பண்ணுவதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார் கலைவாணர். ஒரு தவம் போலத்தான் ஒவ்வொரு படத்தையும் கதாபாத்திரத்தையும் வசனத்தையும் உருவாக்கினார். சமூக அவலங்களைச் சவுக்கால் விளாசுவார். விதவை மறுமணத்துக்கு ஆதரவுக் கொடிபிடிப்பார். பெண்ணடிமைத் தனத்தை ஊசியெனக் குத்திக்குத்திக் காட்டுவார். தேசத்தின் மீதும் மனிதநேயத்தின் மீதும் மரியாதையும் தோழமையும் கொண்டு சொல்லுவார். தேசப்பற்றும் மனிதநேயமுமே நம் மனித இயல்பு என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார். நம் குணங்களையும் மன அழுக்குகளையும் துடைத்தெடுப்பார்.

‘விஞ்ஞானத்தை வளக்கப் போறேண்டி’ பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டால் சிரிப்பீர்கள்; ரசிப்பீர்கள்; திகைப்பீர்கள். ’என்னய்யா இந்த மனுஷன், விஞ்ஞானம் வளராத அந்தக் காலத்துலயே இதையெல்லாம் சொல்லிவைச்சிருக்காரேப்பா’ என்று மலைப்பீர்கள்.

குதிரை வண்டியில் பயணம் செய்தபடி விழா ஒன்றுக்குச் சென்றார். அங்கே பேசும்போது, ‘குதிரைவண்டிக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா... அவங்கதான் ‘முன்னுக்கு வா, முன்னுக்கு வா’ன்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க’ என்றார். விழா நடத்தியவர்கள் உணர்ந்து சிரித்த சிரிப்பு, அந்த ஊருக்கு கலைவாணர் வந்திருப்பதற்கு கட்டியம் கூறியது போல் இருந்தது.

இன்றைய திரையுலகில், நகைச்சுவைக்குப் பஞ்சம். நல்ல, நாகரிகமான, இயல்பான, முகம் சுளிக்காத நகைச்சுவைக்குப் பஞ்சம். மனதில் நிற்கும்படியாகவோ நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியாகவோ காமெடி இல்லை. ‘என்னப்பா காமெடிங்கற பேர்ல அறுக்கறாய்ங்க; ஆபாசம் பண்றாய்ங்க’ என்று அலுத்துச் சலித்துப் புலம்புகிறோம். ஆனால், எத்தனையோ வருடங்களுக்கு முன்பு காமெடிக்கு இலக்கண, இலக்கியங்களை வகுத்துக் கொடுத்தார் என்எஸ்கே.

காந்திஜியின் தனிமனித ஒழுக்கம் என்எஸ்கே-யை ஈர்த்த, பாதித்த ஒன்று. அதனால் பக்தியைப் பரப்பி வந்த வில்லுப்பாட்டுக் காலத்தில், காந்தியின் தேசியத்தையும் ஒழுக்கத்தையும் பரப்பினார். 1949-ம் வருடம், நாகர்கோவிலில், காந்தி நினைவு ஸ்தூபியை, அந்தக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் செலவில் எழுப்பினார். ஆசியாவிலேயே காந்திஜிக்கு, நினைவு ஸ்தூபி அமைத்த முதல் மனிதர் கலைவாணர் என்பது சரித்திரம். விழாவுக்கு அப்போதைய முதல்வர் குமாரசாமி ராஜாவையும் பேரறிஞர் அண்ணாவையும் இன்னும் பலரையும் அழைத்தார். அண்ணாவின் மீது பற்று கொண்டிருந்ததால், அவரின் பேச்சு எல்லா ஊர்மக்களுக்கும் சென்றுசேர வேண்டும் என ஆசைப்பட்டார். இதற்காக, எந்த எதிர்பார்ப்புமில்லாமல், நிறைய ஊர்களுக்கு அண்ணாவை அழைத்துச் சென்று கூட்டங்கள் போட்டார். இதனால் ஏற்பட்ட சலசலப்பைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை.

ஆன்மிகத்துக்காக ’நந்தனார்’ என்று நாடகம் போட்டார்கள் அப்போது. உடனே கலைவாணர், ’கிந்தனார்’ என்று நாடகம் போட்டார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபன், படிப்பதற்காக சென்னைக்குச் செல்வான். ‘நீயெல்லாம் ஆடுமாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று ஆசிரியர் அவனைத் திட்டி அனுப்புவார். ஆனால் அவனோ, நன்றாகப் படித்து, பள்ளிக்கல்வித் துறையில் இன்ஸ்பெக்டராக வேலை கிடைத்து, அதே ஊருக்கு, அவன் படித்த பள்ளிக்கே வருவார். ரயில்வே ஸ்டேஷனில் அந்த ஆசிரியர், அப்படியே தன் மாணவனை நெஞ்சாரத் தழுவிக்கொள்வார். கல்வியின் முக்கியத்துவத்தையும் சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடந்துவர கல்விதான் அடிப்படை என்பதையும் அப்போதே வலியுறுத்தினார்.

காந்தி மகான், வள்ளுவம், புத்தன் சரித்திரம் என கலைவாணரின் நாடகங்கள் திரையுலகில் பரபரப்பாக இருக்கும்போதும் அரங்கேற்றப்பட்டன. அவை அனைத்துமே வீரியமானவை; விதைகளானவை.

’கலைவாணரின் கருத்துகளைக் கேட்டு, உள்வாங்கி, பல்லாயிரக்கணக்கானோர் இன்றைக்கு முன்னுக்கு வந்திருக்கிறார்கள்’ என்று அண்ணா, புகழ்ந்தும் நெகிழ்ந்தும் சொல்லியிருக்கிறார்.

சென்னை மயிலாப்பூரில் இருந்த நடராஜன் கல்விக்கழகம் எனும் அமைப்பு, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கலைவாணர்’ எனும் பட்டம் சூட்டி, இன்றைக்கும் சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது. பம்மல் சம்பந்த முதலியார்தான் இந்தப் பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு மண்டபத்தை, விரிவுபடுத்தி, புதுப்பித்து, பிரம்மாண்ட மண்டபமாக்கி, அதற்கு ’கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டினார் கலைஞர் கருணாநிதி. அதேபோல், நாகர்கோவிலில் கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்தார் எம்ஜிஆர்.

கூத்தாடிகள், பபூன்கள், கோமாளிகள் என்றெல்லாம் நகைச்சுவை நடிகர்களைச் சொல்லிவந்ததையெல்லாம் கடந்து, இன்றைக்கு மிகப்பெரிய அங்கீகாரமும் கெளரவமும் மரியாதையும் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த மகா கலைஞன் கலைவாணர். தன் இயல்பாலும் இயல்பான நகைச்சுவையாலும் மக்களிடத்தில் அப்படியொரு பெயரைச் சம்பாதித்தார். இந்த இடம்... இன்றுவரை திரையுலகில் நிரப்பப்படவே இல்லை.

கலையை, சினிமா எனும் கலையை ரொம்பவே நேசித்தார். அதற்கு தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். படம் தயாரிப்பார். நடிப்பார். பாட்டெழுதுவார். பாடுவார். இப்படியாக வந்த பணத்தையெல்லாம் யோசிக்கவே யோசிக்காமல் மற்றவருக்கு வாரிவாரி வழங்கினார். ‘இல்லை’ என்று அவரைத் தேடி வந்தவர்களிடம் ‘இல்லை’ என்று சொன்னதே இல்லை கலைவாணர்.

அவரது வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும். பந்தி பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கும். ஒருநாளைக்கு, குறைந்தபட்சம் 80 பேராவது சாப்பிடுவார்களாம்.

வெளியூர் என்று போகும்போது, உதவி என்று வந்து கேட்பவர்களுக்கு ’செக்’ கொடுத்துவிடுவாராம். பிறகு வங்கியில் இருந்து தகவல் வரும். ‘செக், பெளன்ஸ் ஆயிருச்சுங்க ஐயா. உங்கள் வங்கிக் கணக்கில் பணமில்லை’ என்பார்கள். ‘ஒரு ரெண்டுமணி நேரம்’ என்று நேரம் கேட்டுக்கொண்டு, அதற்குள் பணத்தைப் புரட்டிக் கட்டிவிடுவார். இப்படி, சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை வாரி வாரி வழங்கினார் கலைவாணர்.

1908-ல் பிறந்த கலைவாணர், 1957 ஆகஸ்ட் 30-ல் மறைந்தார். மறைந்து இரண்டு தலைமுறைக் காலமாகிவிட்டாலும் கூட, தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த மூன்றெழுத்து நாயகனை, வாரிவாரிக் கொடுத்த வள்ளல் மனிதரை, கலைவாணரை ஒருபோதும் மக்கள் மறக்கமாட்டார்கள்; காலமும் மறந்துவிடாது!

ஆகஸ்ட் 30: கலைவாணர் என்.எஸ்.கே. நினைவுதினம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in