நம் நினைவிலிருந்து அகலாத ‘நெஞ்சம் மறப்பதில்லை!’

நம் நினைவிலிருந்து அகலாத ‘நெஞ்சம் மறப்பதில்லை!’

’அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அப்பவும் நாமதான் காதலனும் காதலியுமா இருக்கணும்; கணவனும் மனைவியுமா இருக்கணும்; நண்பர்களா இருக்கணும்’ என்றெல்லாம் சொல்லாதவர்களே இல்லை. அடுத்த ஜென்மம் உண்டா முன் ஜென்மம் என்பது இருந்ததா என்பதெல்லாம் இன்று வரை நமக்குத் தெரியாது. ஆனாலும், ‘இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னையும் என்னையும் யாராலும் பிரிக்கமுடியாது’ என்று நிஜ வாழ்க்கையில் எத்தனையோ பேர் சொல்லியிருப்போம்தானே. இப்படியான முன் ஜென்ம விஷயத்தை ஒரு திரைக்கதை நூலில் கோர்த்துக் கொடுத்ததுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

தமிழ் சினிமாவில் இப்படி முன் ஜென்மத்தை மையப்படுத்தி வந்த முதல் படம் என்று ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத்தான் சொல்கிறார்கள்.

இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் தொடங்கியதும் டைட்டிலுக்கு முன்னதாக ஒருவரின் குரல் ஒலிக்கும். அதில்... ‘1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி ‘இந்து’ பத்திரிகையில், ஒரு அபூர்வமான செய்தி வெளியானது. டெல்லியில் வசித்த சாந்தாதேவி எனும் பெண்ணொருத்தி, தன் பூர்வ ஜென்மத்தில் டெல்லியிலிருந்து 100 மைல் தூரத்திலிருக்கும் மசூரா எனும் ஊரில் தான் வாழ்ந்ததாகவும் தன் கணவனுடைய பெயர் கேசி என்றும் அவருடன் குடும்பம் நடத்திய வீடு, அதன் அமைப்புகள் பற்றிய விவரங்களைக் கூறி, தான் ஒரு மகனை ஈன்றெடுத்த பிறகு இறந்துவிட்டதாகவும் கூறினாள். முதலில் இதை நம்ப மறுத்த ஒரு வக்கீல், ஏன் ஒருவருக்கு பூர்வ ஜென்ம நினைப்புகள் இருக்கக்கூடாது என்று எண்ணி, அவள் கூறிய அடையாளங்களை வைத்து, அவள் கணவன் கேசியையும் அவள் ஈன்றெடுத்த மகனையும் டெல்லிக்கு வரவழைத்தார். அவர்கள் வந்ததும் சாந்தாதேவி, தன் கணவனையும் மகனையும் அடையாளம் கண்டுகொண்டாள். அவள் தன் பூர்வஜென்மத்தில், தன் கணவனுடன் நடத்திய வாழ்க்கையைக் கூறினாள். கேசி என்ற நபர், அவள் கூறுவது அத்தனையும் நடந்தது என ஒப்புக்கொண்டார்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகள், 1939-ல், கேரளத்தில் உள்ள பாலக்காட்டிலும் 1949-ல் ராஜஸ்தானிலும் நடந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. இம்மாதிரி கற்பனைக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள், நிஜவாழ்க்கையில் நடக்கத்தான் நடக்கின்றன என்பதை இச்செய்திகளின் வாயிலாக நாம் உணர முடிகிறது’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ‘அப்படியொரு முன் ஜென்மத்தை மையமாகக் கொண்ட கற்பனைச் சித்திரம் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ‘ என்று சொல்லி முடித்ததும், டைட்டில் போடப்படும்.

நண்பரின் கிராமத்துக்கு முதன்முதலாக வருவான் நாயகன். இறங்கியதுமே,“ஏற்கெனவே இந்த இடத்தைப் பாத்த மாதிரி இருக்கு” என்பான். மாட்டுவண்டியில் போய்க்கொண்டிருப்பார்கள். வண்டியை நிறுத்தச் சொல்லுவான் நாயகன். “அதோ... அங்கே ஒரு கல்மண்டபம், அரசமரம், ஒரு குளம் இருக்கும். வா போய்ப் பாக்கலாம்” என்பான். போய்ப் பார்த்தால், அப்படியே எல்லாமே இருக்கும்.

நண்பனின் வீட்டில் ஒரு அறையில் நண்பனின் தங்கையைப் பூட்டி வைத்திருப்பார்கள். விசாரித்தால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பாழடைந்த பங்களாவுக்குச் சென்றதிலிருந்து அவள் ஒருமாதிரியாகிவிட்டாள் என்று விவரம் சொல்லுவார்கள். இடிபாடுகள் கொண்ட அந்த பங்களாவுக்குப் போய்ப் பார்த்தாலென்ன... என்று நாயகனுக்குத் தோன்றும். அங்கே சென்றதும் ஏற்கெனவே பார்த்த, நன்கு பழக்கப்பட்ட இடங்களாகத் தோன்றும். குழப்பமும் பயமுமாக ஒவ்வொரு இடமாக உள் நுழைவான் நாயகன். அங்கே, சுவரில் ஒரு ஓவியம். ஆணின் ஓவியம். அந்த நாயகனின் ஓவியம். அப்போது, அந்த நிமிடத்தில், முன் ஜென்ம நினைப்பு வரும் நாயகனுக்கு.

அந்த ஊரின் ஜமீன் நம்பியார். அவரின் மகன் கல்யாண்குமார். கல்யாண வயது கல்யாண்குமார் மகனாக இருக்க, நம்பியார் இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வார். அப்பாவின் நடவடிக்கைகளெல்லாம் மகனுக்குப் பிடிக்கவே இல்லை. இந்த நிலையில், அந்த ஊரில் உள்ள பெண்ணை சாதாரண கிராமத்துப் பணியாள் போல் வேடமிட்டு வந்து விரும்புகிறார் கல்யாண்குமார். அந்தப் பெண் தான் நாயகி தேவிகா.

தேவிகாவின் அப்பா சகஸ்ரநாமம், ஜமீனில் வேலை செய்பவர். ஆக, ஜமீனில் வேலை செய்பவரின் மகளை ஜமீன்தார் மகன் காதலிக்கிறார். ஜமீன் மகனைத்தான் காதலிக்கிறோம் என்பது தேவிகாவுக்குத் தெரியவருகிறது. ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்மை யாராலும் பிரிக்கமுடியாது. கவலைப்படாதே’ என்று உறுதி சொல்கிறார் கல்யாண்குமார்.

ஊரில் திருவிழா. காளையை அடக்கும் விழா. ஜமீன் காளையை அடக்குவோருக்கு, அவர்கள் கேட்டது பரிசாகக் கிடைக்கும் என அறிவிப்பு. மாறுவேடத்தில் கல்யாண்குமார் சென்று, காளையை அடக்குகிறார். மறுநாள் ஜமீன் நம்பியாரிடம் சென்று கேட்கும்போது, வந்திருப்பது மகன் என்பதும் காதலுக்காக மகன் இப்படிச் செய்திருக்கிறான் என்பதும் தெரியவர, தேவிகாவை அவரின் அப்பாவை விட்டே சவுக்கால் அடிக்கிறார்.

கல்யாண்குமார்
கல்யாண்குமார்

இங்கே, மகனை சவுக்கால் விளாசித்தள்ளி, அறையில் பூட்டுகிறார். அந்த அறையில், ‘கண்ணம்மா’ என்று பெரிய எழுத்தில், கல்வெட்டு போல் பெயர்த்து எழுதுகிறார் கல்யாண்குமார். ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களைச் சேர விடமாட்டேன்’ என்கிறார் நம்பியார்.

நாகேஷும் பணியாள். அவர் மனோரமாவை விரும்ப, ஆனால் நாகேஷுக்கும் தேவிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க நம்பியார் ஏற்பாடு செய்கிறார். இதையறிந்த கல்யாண்குமார், கல்யாணம் நடக்கும் வேளையில், தேவிகாவை சாரட் வண்டியில் ஏற்றிக்கொண்டு தப்பிச் செல்ல, வழியில் நம்பியார் நிறுத்த, அங்கே, அந்த இடத்தில் தேவிகாவைச் சுட்டுக்கொல்கிறார்.

இவையெல்லாம் அந்த பாழடைந்த பங்களாவுக்குச் சென்று ஒவ்வொரு விஷயமாகப் பார்க்கும்போது கல்யாண்குமாருக்கு நினைவுக்கு வருகிறது. அங்கே இடிபாடுகளுடன் இருக்கும் பங்களாவில் தாடியும் மீசையுமாகப் பெரியவர் ஒருவரைப் பார்த்து மிரண்டு போகிறார் கல்யாண்குமார். அவரைத் தேடி அருகில் உள்ள குடிசைக்குச் செல்ல, தனக்கு ஞாபகம் வந்த முன் ஜென்ம விஷயங்களைச் சொல்ல, அந்தக் கிழவரும் விஷயங்களைச் சேர்ந்தே சொல்கிறார். ‘இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும் பெரியவரே? அந்த ஜமீன்தார் என்னானார்?’ என்று கல்யாண்குமார் கேட்க, பலத்த சிரிப்புடன், ‘அது நான் தான். எனக்கு இப்ப 109 வயசு’ என்கிறார் நம்பியார். விதிர்த்துப் போய்விடுவார் கல்யாண்குமார். படம் பார்க்கும் நாமும் படபடப்பாகி, இதயத்தைக் கையில் பிடித்துக்கொள்வோம்.

தன் நண்பனின் தங்கை தேவிகா தான், முன் ஜென்மத்தில் தனக்கு காதலி என்பதை உணர்ந்த கல்யாண்குமார், சித்த பிரமையுடன் இருக்கும் அவளை, அந்த பங்களாவுக்கு அழைத்துச் செல்வார். பூரண நலமடைவார். அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதை அறிந்த ஜமீன்தார் நம்பியார், அவளை பொய் சொல்லி அழைத்துச் சென்று, ஓரிடத்தில் மண்ணில் புதைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு வருவார்.

’நெஞ்சம் மறப்பதில்லை’ நம்பியார்
’நெஞ்சம் மறப்பதில்லை’ நம்பியார்

தேவிகாவைக் காணவில்லையே என்று கல்யாண்குமார் தேடி வர, அங்கே நம்பியாரைத் தடுத்து நிறுத்த, அவர் அங்கே உள்ள புதைகுழியில் விழுந்துவிடுவார். அவரைக் காப்பாற்ற முயற்சிப்பார் கல்யாண்குமார். ஆனாலும் பலனில்லை. முன் ஜென்மத்து நம்பியார் இறந்து போவார். போன ஜென்மத்தில் சேராத கல்யாண்குமாரும் தேவிகாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்பதுடன் படம் நிறைவடையும்.

‘நம்புவதா கூடாதா’ என்கிற யோசனைக்குள் நம்மை ஒரு நிமிடம்கூட விடாத கதையாலும் கதை சொல்லும் நேர்த்தியாலும் அப்படியே உறையவைத்திருப்பார் ஸ்ரீதர். வழக்கம்போல், சித்ராலயா கோபு பக்கபலமாக இருக்க, வழக்கம் போல ஒளிப்பதிவாளர் வின்சென்ட், தன் கேமராவால் இன்னும் ஜீவனைக் கொடுக்க, விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசை மொத்தமும் நம் நெஞ்சை அப்படியே அள்ளிக்கொள்ளும்.

தேவிகா, நம்பியார்
தேவிகா, நம்பியார்

ஆர்ட் டைரக்டரின் பணியும் பாழடைந்த பங்களா செட்டும் பிரமிக்கவைக்கும். ஐந்தாறு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு பின்னப்பட்ட கதையும் திரைக்கதையும் நம்மை மிரட்டியெடுக்கும். கல்யாண்குமார் நம்மை கண்கலங்க வைப்பார். சகஸ்ரநாமம் இயலாமையை வெளிப்படுத்துவார். நம்பியாரின் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் சொல்லவா வேண்டும். அந்த கிழவன் மேக் அப் இன்னும் திகில் கூட்டும். குரலிலும் நடிப்பிலும் நம் அடிக்குலையை நடுநடுங்கச் செய்துவிடுவார் நம்பியார்.

‘அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை’ என்ற பாடல் குதூகலப்படுத்தும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, ‘நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை. நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை’ என்ற பாடல் நம்மை உருக்கியெடுத்துவிடும். அதிலும் குறிப்பாக, அந்த ‘ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...’ ஹம்மிங்கும் குயிலின் குரலும் நமக்குள்ளே ஒரு சோகப்பந்தைச் சுழற்றியடிக்கும். இந்தப் பாடலுக்காக, இந்த மெட்டுக்காக, எத்தனையோ மெட்டுகள் போட்டுக்கொடுத்தார்களாம் மெல்லிசை மன்னர்கள். ஆனால் எதிலும் திருப்தி அடையவே இல்லை ஸ்ரீதர். ‘எவ்வளவு காலமானாலும் காத்திருக்கேன்’ என்று ஆறுமாதங்கள் கழித்து, ஒரு டியூனுக்கு சம்மதம் சொன்னார் ஸ்ரீதர். அதுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாட்டு.

1963 ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. படம் வெளியாகி, 59 வருடங்களாகிவிட்டன. இன்னும் நம் நெஞ்சம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை மறக்கவே இல்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in