
சமந்தா நடிக்கும் ’யசோதா’ படத்துக்காக ரூ.3 கோடி செலவில் அழகிய நட்சத்திர ஓட்டல் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் உருவாகும் படம் ’யசோதா’. இந்தப் படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இரட்டை இயக்குநர்களான ஹரி - ஹரிஷ் இயக்குகின்றனர். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, மதுரிமா உட்பட பலர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மணி சர்மா இசை அமைக்கிறார்.
இந்தப் படத்துக்காக ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறும்போது, "இந்தப் படத்தின் கதை, நட்சத்திர ஓட்டல் பின்னணியில்தான் நடக்கிறது. இதுபோன்ற ஓட்டல்களில், 35, 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது சிரமம். அதனால், கலை இயக்குநர் அசோக் மேற்பார்வையில், ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பில் செட் அமைத்துள்ளோம். 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உள்ள அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது’ என்றார் .