அரசு உத்தரவை மீறி அதிகாலையில் ரிலீஸான `துணிவு': திரையரங்கு மேலாளர் மீது வழக்குப்பதிவு

அரசு உத்தரவை மீறி அதிகாலையில் ரிலீஸான `துணிவு': திரையரங்கு மேலாளர் மீது வழக்குப்பதிவு

அரசு உத்தரவை மீறி அதிகாலை 3 மணிக்கு `துணிவு' திரைப்படத்தை திரையிட்ட மயிலாடுதுறை திரையரங்க மேலாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தின்  பிரபல திரைப்பட நடிகர்களான விஜய் நடித்த 'வாரிசு’, அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரு படங்களும் கடந்த 11-ம் தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. அவர்களின்  ரசிகர்களுக்காக அன்றைய தினம் அதிகாலையிலேயே காட்சிகள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் இதற்கு போலீஸார்  தரப்பில்  அனுமதி தரப்படவில்லை.  ஆனாலும் பல ஊர்களிலும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் மயிலாடுதுறை நகரிலும் அதிகாலை காட்சிகளை திரையிடக்கூடாது என போலீஸார் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.  இதற்காக தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தனர். ஆனாலும். அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் அங்குள்ள ஒரு திரையரங்கில் அதிகாலை 3 மணிக்கு ஒரு காட்சி திரையிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அதே திரையரங்கில் காலை 7 மணி, 11 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி என அன்றைய தினம் 6 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த நிலையில் அரசு உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிகாலை 3 மணிக்கு 'துணிவு' படத்தை திரையிட்டதாக  திரையரங்க மேலாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தத் திரையரங்கின் மேலாளர் தேவதாஸ் மீது மயிலாடுதுறை காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in