ஓ.டி.டி. உலா: மெல்ல அவிழும் மர்ம முடிச்சுகள்

ஓ.டி.டி. உலா: மெல்ல அவிழும் மர்ம முடிச்சுகள்

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

மூளையை அதிகம் இம்சிக்காத மத்திம த்ரில்லர்கள், வார இறுதி விடுமுறையைப் போக்குவதற்கு உகந்தவை. அந்த வகையிலான ஹாலிவுட், பாலிவுட் என இரண்டு த்ரில்லர்களை இங்கே பார்ப்போம்.

பெக்கெட்: விரட்டலில் விடுபடும் புதிர்கள்

கதை நெடுக விரட்டலும் தப்பித்தலுமாய் விரையும் ஹாலிவுட் த்ரில்லராக, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது ‘பெக்கெட்’ திரைப்படம். பெக்கெட் என்ற அமெரிக்க இளைஞன் தனது காதலியுடன் விடுமுறைப் பயணமாக கிரேக்க நாட்டுக்கு வருகிறான். தொன்மையான கிரேக்க சுற்றுலா தலங்களைச் சுற்றிப்பார்த்தும், காதல் பித்தேறி சதா முத்தமிட்டுமாய் இளஞ்சோடிகள் வலம் வருகிறார்கள். துரதிருஷ்டவசமாய் இரவுப் பயணம் ஒன்றில் அவர்களின் கார் கோர விபத்துக்குள்ளாக, அதில் ஆசைக் காதலியைப் பறிகொடுக்கிறான் பெக்கெட். விரக்தியின் உச்சத்தில் வாழ்க்கை மீதே நம்பிக்கை இழக்கிறான். அந்த நேரம் எங்கிருந்தோ கிளம்பிவரும் சில கொலைவெறித் தாக்குதல்கள் அவனை எழுந்து ஓடச் செய்கின்றன.

போலீஸார், மாஃபியாக்கள், அடையாளம் தெரியாத கும்பல் என ஆளாளுக்குத் துப்பாக்கியும் கையுமாக அவனைத் துரத்துகிறார்கள். ஏன், எதற்கு என்ற காரணம் விளங்காது அவனும் காடு, மலை ஊடாக ஓடித் தப்பிக்கிறான். நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் அடைக்கலமாவதற்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறான். பேருந்து, ரயில் எனப் பல்வேறு மார்க்கங்களிலும் அப்படி அவன் ஓட, அவனது வேட்டையாளர்களும் சலிக்காது விரட்டுகிறார்கள். எதிரிகள் மட்டுமல்ல... அவன் நம்பிய சிலரும் துரோகிகளாக மாறி தொல்லை தருகிறார்கள்.

சொந்த சோகத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பவனைப் பல தரப்பினர் வேட்டையாடத் துடிப்பதன் மர்மம் என்ன என்பதில் கதையின் திருப்பங்கள் வெளிப்படுகின்றன. இதன் பின்னணியிலான அரசியல் சதுரங்க மோதல்கள், ஆட்கடத்தல் பின்னணியை இறுதியில் விளக்குகிறது ‘பெக்கெட்’ கதை.

சாமானியனாக அறிமுகமாகும் கதாநாயகன், கோர விபத்தில் அடிபட்டு, தோளில் குண்டுகள் பாய்ந்து, கை முறிந்த பிறகும் சரமாரித் தாக்குதல்களைச் சமாளித்து அனாயசமாய் ஓடிக்கொண்டே இருக்கிறான். சில இடங்களில் சூப்பர் ஹீரோவின் சாகசங்களையும் புரிகிறான். அவற்றுக்கான அழுத்தமான பின்னணி சொல்லப்படாததால், அந்தக் காட்சிகள் கதையில் முழுதாய் ஒட்ட மறுக்கின்றன.
இளைஞன் பெக்கெட்டாக நடித்திருக்கும் ஜான் டேவிட் வாஷிங்டன், காதல், ஆக் ஷன் இரண்டிலுமே எடுபடுகிறார். காதலியைக் கொன்றுவிட்டேன் என்று புலம்புவதும், அவளது நினைவுகளில் அவ்வப்போது விழுந்து எழுவதும், தனக்கு எதிரான சிறுமை கொண்டு பொங்குவதும், உயிரைத் துச்சமாக்கி சவால்களை எதிர்கொள்வதுமாய் நம்பும்படியான உடற்கட்டிலும், உடல்மொழியிலும் ஜான் டேவிட் ஈர்க்கிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ திரைப்படத்தைவிட, ‘பெக்கெட்’டில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறார் ஜான் டேவிட் வாஷிங்டன். புகழ்பெற்ற நடிகர் டென்ஸல் வாஷிங்டனின் மகனான இவர், தனது தந்தையின் பாணியிலான நடிப்பில் கவர்கிறார்.

கதை கோரும் மென்சோகம் பூசிய அழகுடன் சற்று நேரமே தலைகாட்டினாலும் அலிசியா விகந்தெர் ஆழப் பதிகிறார். பாய்ட் ஹால் ப்ரூக், விக்கி க்ரைப்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை ஃபெர்டினன்டோ சிடோ இயக்கி உள்ளார். த்ரில்லர் கதை என்றபோதும் மூளை மடிப்புகளை அதிகம் சோதிக்காத கதையோட்டம், கிரேக்க தேசத்து பண்டைக்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளின் குளுமையான ஒளிப்பதிவு, காதுகளை இம்சிக்காத வித்தியாசமான பின்னணி இசை என இப்படத்தின் சுவாரசியங்கள் அதிகம்.

***

‘டயல் 100’: அவசர அழைப்பு அபாயங்கள்

சென்டிமென்ட் கலந்த த்ரில்லர் டிராமாவாக ‘ஜீ 5’ தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘டயல் 100’ என்ற இந்தித் திரைப்படம்.
மும்பை அவசரகாலக் காவல் கட்டுப்பாட்டு அறையின் அன்றைய இரவில், பொதுமக்களின் அவசர அழைப்புகளை போலீஸார் மும்முரமாக செவிமெடுக்கின்றனர். அப்படியொரு ஒரு அவசர அழைப்பு போலீஸ் அதிகாரி மனோஜ் பாஜ்பாய்க்கு வருகிறது. வழக்கமான பொதுஜன அழைப்பாக அதைக் கையாளத் தொடங்கும் பாஜ்பாய்க்கு எங்கோ பொறி தட்டுகிறது. அது முகமறியா பொதுஜனத்தின் அனாமதேய அழைப்பல்ல, தனது குடும்ப உறுப்பினர்களின் உயிர் குடிக்க புறப்பட்ட விபரீதம் என்பதை அவர் உணர்ந்ததும் ‘டயல் 100’ சூடு பிடிக்கிறது.

எதிர்முனையில் அழைத்தது யார்? காவல் அதிகாரியின் குடும்பத்தில் என்ன பிரச்சினை? குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான அபாயங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தாரா? இந்த அபாயங்களின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்கு ‘டயல் 100’ திரைப்படம் படிப்படியாய் பதில் சொல்கிறது.

விறுவிறு த்ரில்லருக்கு தோதான ஒற்றை இரவில் தொடங்கி முடியும் கதை. மழையிரவு, மர்மங்களைச் செரித்த மனிதர்கள், துடிக்கும் துப்பாக்கிகள், காட்சிக்குக் காட்சி அதிரடித் திருப்பங்கள் என சுவாரசியங்களையும் கொண்டிருக்கிறது ‘டயல் 100’ திரைப்படம். மனோஜ் பாஜ்பாய், நீனா குப்தா, சாக் ஷி தன்வர் உள்ளிட்டோர் நடிக்க ரென்சில் டி சில்வா இயக்கியுள்ளார். பிரதான காட்சிகளை ஆக்கிரமிக்கும் மனோஜ் பாஜ்பாய், அலுவல் சூழலும் குடும்பச் சிக்கலும் ஊடாடும் காட்சிகளை உள்வாங்கி பிரதிபலிக்கிறார். தீராத் துயரமும், பழிவாங்கல் மினுங்கும் கண்களுடனும் நிதானமாகத் தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார் நீனா குப்தா. இந்த இருவரையும்விட குறைவான காட்சிகளில் வந்து போனாலும் கிடைத்த அவகாசத்தில் அவர்களை நடிப்பில் நேர் செய்கிறார் சாக் ஷி தன்வர்.

இதே பாணியில் பல திரைப்படங்களும் வலைத்தொடர்களும் ஏற்கெனவே வெளியாகியிருப்பதால், திருப்பங்களில் அதிக சுவாரசியம் இல்லை. ஒரு க்ரைம் நாவலுக்கான அழுத்தமான எழுத்தைக் கோரும் திரைக்கதையில், மேம்போக்கான கதாபாத்திர சித்தரிப்புகளால் அடிப்படையான எழுத்திலும் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஆக் ஷன் த்ரில்லருக்கான பல காட்சிகள் எண்பதுகளின் சோபையான இந்திப் படங்களை நினைவூட்டுகின்றன. வேகத்தடையாக வாய்ப்புள்ள ஃப்ளாஷ் பேக் காட்சிகளைத் தவிர்த்திருந்தபோதும், முன்கதையைத் தெளிவாக முன்வைப்பதில் தடுமாறியிருக்கிறார்கள். இருப்பினும், வெகுஜன விருப்பத்துக்கான க்ளைமாக்ஸைத் தவிர்த்திருப்பது ரசிக திருப்திக்குத் திடம் சேர்த்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in