ஆசைகாட்டி மோசம் செய்தாரா ஆர்யா?- வேகமெடுக்கும் மருத்துவர் விட்ஜா விவகாரம்

ஆசைகாட்டி மோசம் செய்தாரா ஆர்யா?- வேகமெடுக்கும் மருத்துவர் விட்ஜா விவகாரம்

கவி
readers@kamadenu.in

‘சார்பட்டா பரம்பரை’ வெற்றியின் மகிழ்ச்சி, நடிகர் ஆர்யாவுக்குக் கொஞ்ச நாட்கள்கூட நீடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் ஜெர்மனி பெண் மருத்துவர் கொடுத்த மோசடிப் புகார், தற்போது பூதாகரமாக வெடித்திருப்பது ஆர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

பிரதமருக்குச் சென்ற புகார்

கடந்த பிப்ரவரியில், ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் மருத்துவர், “நடிகர் ஆர்யா என்னைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றி70 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டார்” என்று இந்தியப் பிரதமர் அலுவலகத்துக்கும், குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாகப் புகார் அளித்தார். அதுதான் தற்போது ஆர்யாவை சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்க வைத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, சைபர் கிரைம் போலீஸார் அளித்த சம்மனை ஏற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் ஆர்யா. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 17-ல் நடக்கவிருக்கிறது. ஆர்யாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக, விட்ஜா தரப்பில் சொல்லப்படுகிறது. காவல் துறையும் இந்த வழக்கில் மும்முரம் காட்டுகிறது. பிரச்சினையின் பின்னணி குறித்து விட்ஜாவின் வழக்கறிஞர் ஆனந்திடம் பேசினோம்.

கரோனா கால உதவி

“2018-ல் ஃபேஸ்புக் மூலமாக நடிகர் ஆர்யாவுக்கும் விட்ஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது. ஆர்யாதான் முதலில் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தச் சமயத்தில் கரோனா பெருந்தொற்றால் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் படங்கள் எதுவும் இல்லாமல், தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாக விட்ஜாவிடம் ஆர்யா புலம்பியிருக்கிறார். ஜெர்மனியில் மருத்துவராகப் பணிபுரியும் விட்ஜா மாதம் 10 ஆயிரம் யூரோக்கள் (இந்திய மதிப்பில் 8 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்) சம்பளம் பெறுபவர். அவரிடமிருந்து பல தவணைகளாக 70 லட்ச ரூபாய் வரை பெற்றிருக்கிறார் ஆர்யா. சரி, நாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்தானே என்று விட்ஜாவும் தொடர்ந்து பணம் அனுப்பிவந்துள்ளார். பணத்தை ஆரம்பத்தில் மொபைல் பேங்கிங் மூலம் அனுப்பச் சொல்லியிருக்கிறார் ஆர்யா. வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதால் தன்னால் ‘வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர்’ மூலம் மட்டுமே அனுப்ப முடியும் என்று விட்ஜா கூறியதால், தன் பெயருக்கு அனுப்ப வேண்டாம், தன்னுடைய உதவியாளர் அர்மான் என்பவரின் பெயருக்கு அனுப்பும்படி ஆர்யா வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆர்யா கூறியிருந்த நிலையில் அவருக்கு சாயிஷாவுடன் திருமணம் நடக்கவிருப்பதாக வந்த தகவலைக் கேட்டு விட்ஜா அதிர்ச்சியடைந்தார். ஆர்யாவிடம் இது பற்றி விசாரித்தபோது, தனக்கு ஏகப்பட்ட கடன் சுமையிருப்பதாகவும் அதை அடைக்க சாயிஷாவின் அப்பா உதவுவதால், தற்காலிகமாக சாயிஷாவைத் திருமணம் செய்துகொள்வதாகவும் சமாதானம் செய்துள்ளார் ஆர்யா. ஆர்யாவின் அம்மாவும், ‘நீதான்மா எனக்கு மருமகளா வரணும். எல்லா பிரச்சினையும் முடிந்ததும் நானே உன்னை என் மருமகளா என் வீட்டுக்குக் கூட்டி வர்றேன்’ என்று கூறியிருக்கிறார்.
தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த விட்ஜா, கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்க ஆரம்பித்தார். ஆனால், பணத்தைத் தராமல் இழுத்தடித்திருக்கிறார் ஆர்யா. இதனால் மனம் நொந்துபோன விட்ஜா, பிரதமர் அலுவலகத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி தனக்கு நடந்த அநீதியைப் பற்றி புகார் அளித்தார். வெளியுறவுத் துறை மூலம் இந்தப் புகார் தமிழகத் தலைமைச் செயலர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு தொடர் நீதிமன்ற விசாரணையில் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விட்ஜா தரப்பில் புகார் அளிக்கப்பட்டவுடன் ஆர்யாவின் உதவியாளர் அர்மான் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஆடைகள்
வாங்குவதற்காக விட்ஜா தனக்குப் பணம் அனுப்பிய தாகவும், தற்போது பொய் புகார் அளிக்கிறார் என்றும் முறையிட்டார். 70 லட்சம் ரூபாய்க்கும் ஆடை வாங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது.
இதற்கிடையில் விட்ஜா புகார் அளிப்பதற்கு முன்பே, ‘இப்படியே பணம் கேட்டுத் தொல்லை செய்தால் உன்னைத் தேடி பணம் வராது. என் ஆட்கள்தான் வருவார்கள்’ என்று மிரட்டியிருக்கிறார் ஆர்யா. புகார் அளித்த பின்பு விட்ஜாவிடம், ‘இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் கடன் வாங்கினால் திரும்பச் செலுத்த வேண்டும், அப்படி அவரால் முடியவில்லை என்றால் கடன் கொடுத்தவர் அவரை மன்னித்துவிட வேண்டும் என்று குரானில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நீ என்னை மன்னித்து விட்டுவிடு’ என்று தத்துவமும் பேசியிருக்கிறார்” என்று சொன்ன ஆனந்த், ஆர்யாவுக்கு விட்ஜா பணம் அனுப்பியது, பணத்தைப் பெற்றுக்கொண்டதாக ஆர்யா அனுப்பிய செய்தி, ஆர்யா மற்றும் அவர் அம்மா பேசியது என்று அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. சட்டப் போராட்டம் நடத்தி நீதியைப் பெறுவோம்” என்று அழுத்தமாக முடித்தார்.

இனி என்ன ஆகும்?

இந்த வழக்கு சம்பந்தமாக சைபர் கிரைம் போலீஸாரிடம் பேசியபோது, “தற்போது ஆர்யாவிடம் முதல்கட்ட விசாரணை நடந்துள்ளது. வருகின்ற நாட்களில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படும். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையை அடிப்படையாகக் கொண்டே வழக்கின் நிலையைக் குறித்த தெளிவான பதிலைச் சொல்ல முடியும்” என்றார்கள். ஆர்யா தரப்பில் இந்த புகாரைப் பற்றிப் பேச முயன்றபோது நம் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. விட்ஜா தன்மீது அபாண்டமாக பழிபோடுவதாக ஆர்யா கருதினால், அதுகுறித்த விளக்கத்தை தர அவர் தயங்காது முன்வர வேண்டும். அப்படி அவர் தனது விளக்கத்தை அளித்தால் அதை வெளியிட நாமும் தயாராக இருக்கிறோம்.

பொதுவாக நடிகர் நடிகைகள் மீது புகார்கள் எழும்போது அவர்களைச் சுற்றியுள்ள புகழ் வெளிச்சத்தில் அந்தப் புகார்கள் பூதாகரமாகப் பேசப்படுவதும், புகார்களில் உண்மை இருந்தாலுமே நாளடைவில் விசாரணை நடவடிக்கைகள் மழுங்கடிக்கப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆர்யா வெளிப்படையாகப் பேசமுன்வராத நிலையில், நீதிமன்றமும் விசாரணை அதிகாரிகளும் தான் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in