நிறைவைத் தராத ‘நெற்றிக்கண்’

நிறைவைத் தராத ‘நெற்றிக்கண்’

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

பெண்களை வேட்டையாடும் சைக்கோ வில் லனை, நெற்றிக்கண் திறந்து பொசுக்கும் நாயகியின் ஆக்‌ஷன் அதகளமே ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘நெற்றிக்கண்’ திரைப்படம்.

டைட்டிலில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் அடைமொழியுடன் அறிமுகமாகிறார் நயன்தாரா. அதற்கேற்ப துர்கா என்ற சிபிஐ அதிகாரியாக அறிமுகமாகும் காட்சியிலேயே அசரடிக்கிறார். அடுத்து வரும் விபத்தொன்றில் தனது பார்வையையும், கண்ணுக்குக் கண்ணான தம்பியையும் இழக்கிறார். சிபிஐ அலுவலகம் சம்பளம் கொடுத்தாலும் பணியில் சேர்க்க மறுக்கிறது. கண் தானத்துக்கான பதிவில் காத்திருக்கும் துர்காவின் வழியில் கொடூரன் ஒருவன் இடறுகிறான். பெண்களைக் கடத்தி அடைத்து வைத்து துன்புறுத்தி இன்பம் துய்க்கும் அளவுக்கு, விபரீதமான தனது பட்டியலில் துர்காவையும் சேர்க்கிறான் அந்த சைக்கோ.

பார்வையிழந்த துர்காவை எளிதில் சாய்க்க முடியும் என்று நம்பியவனுக்கு, அது அத்தனை சுலபமில்லை என்று புரிகிறது. அதன் பிறகே அவனுடைய பிறழ் புத்தி வெகுவாய் துர்காவிடம் இழுக்கிறது. அவனுக்குச் சவால்விடும் துர்கா, பணியனுபவம் இல்லாத போலீஸ் எஸ்.ஐ மற்றும் தன் தம்பி வயதொத்த இளைஞன் என இருவரைச் சேர்த்துக்கொண்டு களமிறங்குகிறார். புறக்கண் பாதிக்கப்பட்ட துர்கா புத்தியைத் தீட்டுவதும், அநியாயத்துக்கு எதிராக நெற்றிக்கண் திறந்து வதம் புரிவதுமே திரைப்படத்தின் மிச்சக் கதை.

நயன்தாராவுக்கு என்றே எழுதியது போன்ற கதை. விக்னேஷ் சிவனின் சொந்தத் தயாரிப்பு வேறு. எனவே, படம் நெடுக நயன் மயம்! சிபிஐ அதிகாரியாக கெத்தாக அறிமுகமாகும்போதும், பார்வையற்றவராகி பரிதாபத்தை அள்ளும்போதும் கொள்ளைகொள்கிறார். ஆனால், வெறித்த பார்வைக்கு அப்பால் அந்த முகத்தில் பார்வையற்றவருக்கான பாவனை அவ்வளவாக எடுபடவில்லை.

சைக்கோ வில்லனான அஜ்மலை, பீடிகையின்றி நேரடியாகக் கதைக்குள் கொண்டுவந்தது ஆறுதல். அவரது வில்லத்தனத்தின் பின்னணி விளங்காதவரை அலுப்பூட்டும் அந்தக் கதாபாத்திரம், அதன் பின்னர் திரையை முழுக்க ஆக்கிரமித்துக்கொள்கிறது. அதிலும் அந்த காவல் நிலையக் காட்சிகளில் மனிதர் பின்னுகிறார். துறுதுறுப்பதும், துவள்வதுமாய் காவல் துறையில் புதிதாய் பணியில் சேர்ந்திருக்கும் மணிகண்டன் பாத்திரம் சுவாரசியமூட்டி அனுதாபத்தை அள்ளுகிறது. சித் ஸ்ரீராம் பாடும் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் மயிலிறகு வருடல். பின்னணி இசையிலும் ஒரு த்ரில்லருக்கான நேர்த்தியைத் தந்திருக்கிறார் க்ரிஷ்.  

க்ளைமாக்ஸ் பரபரப்புக்காக ஏகப்பட்ட சீன்களை யோசித்தவர்கள், கடைசியில் அவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கோர்த்து படமெடுத்துவிட்டது போல அத்தனை நீளம் இழுக்கிறார்கள். வில்லன் கைதாகும்போதே முற்றும் போட வேண்டிய கதை அதன் பிறகும் ஜவ்வாக இழுக்கிறது. ஓடிடி வெளியீடு என்று முடிவு செய்த பிறகு குறைந்தது 30 நிமிடங்களுக்காவது கத்தரி போட்டிருக்கலாம்.  இரண்டரை மணி நேர நீளம் தேவையில்லாதது!

பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளியான  ‘பிளைண்ட்’ என்ற தென் கொரியத் திரைப்படத்தின் தழுவல் இப்படம். நம்மூருக்கேற்ற சிலபல மாற்றங்களுடன் உருவாகி இருக்கிறது. அந்த மாற்றங்களால் பெரிய முன்னேற்றம் இல்லை என்பதுதான் கொஞ்சம் சோகம்.  ‘அவள்’ என்ற அமானுஷ்ய திரைப்படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த மிலிந்த் ராவ் இயக்கியிருக்கிறார் என்பதால், ‘நெற்றிக்கண்’ நிறையவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பு முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. மற்றபடி, கொரிய  ‘பிளைண்ட்’ பார்க்காதவர்களுக்கு ‘நெற்றிக்கண்’ தரிசனம் நல்ல திரை அனுபவத்தைத் தரும்.

***

வெறுப்பில் தெறிக்கும் குருதி

மதங்கள், நம்பிக்கைகள், பெரும்பான்மை - சிறுபான்மை வேறுபாடுகள் என அனைத்தின் பின்னணியிலும் புதைந்திருக்கும் வெறுப்பு எனும் விஷத்தை நம் வாயில் வார்த்து தொண்டையையும் இறுக்குவதான கதையுடன் வந்திருக்கிறது  ‘குருதி.’அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படம் இது.

நிலச்சரிவு அபாயத்துக்குட்பட்ட மலையோரக் குடியிருப்பில், இருவேறு மதங்களைச் சேர்ந்த இரு குடும்பங்கள் வசிக்கின்றன. அண்மையில் நடந்த இயற்கைச் சீற்றத்துக்கு இஸ்லாமியக் குடும்பத்தின் இப்ராஹிம், தன் மனைவி மற்றும் மகளைப் பறிகொடுத்தவ னாய் தந்தை, தம்பியுடன் வசிக்கிறான். இந்து குடும்பத்திலும் அதே போன்று சோகம் நிகழ்ந்திருக்கிறது. இப்ராஹிம் குடும்பத்தின் அன்றாட உணவுக்கு, இந்து குடும்பத்தின் சுமதி உதவும் அளவுக்கும் பரிவுடன் பழகுகிறார்கள்.

அப்படி ஒருநாள் இரவு உணவுக்காகக் காத்திருக்கும் இப்ராஹிமின் வீட்டுக்குள், கைதி ஒருவனுடன் அழையா விருந்தாளியாக நுழைகிறார் ஒரு சப்-இன்ஸ்பெக்டர்.  அந்தக் கைதி, இஸ்லாமியர் ஒருவரைக் கொன்ற வழக்கில் கைதான அடிப்படைவாத இந்து இளைஞன். அவனைக் கொல்ல எதிர்த்தரப்பு அடிப்படைவாதிகள் கொலைவெறியோடு வீட்டை முற்றுகையிடுகின்றனர். வழக்கமாக உணவு கொண்டுவரும் சுமதியும் இப்ராஹிம் வீட்டுக்குள் சிக்குகிறாள்.

அந்த ஒற்றை இரவில் திகுதிகுவென பற்றிக்கொள்ளும் திகிலும் திருப்பங்களும் நிறைந்த சம்பவங்களை அடுத்து, இந்து கொலையாளியைப் போலீஸ் வசம் சேர்ப்பிக்கும் பொறுப்பு, இஸ்லாமியக் குடும்பத்தின் தலைமகனான இப்ராஹிமிடம் ஒப்படைக்கப் படுகிறது. இருதரப்பிலும் வெறி கொண்டதாய் முன்வைக்கப்படும் நியாயங்களுக்கு மத்தியில் சத்தியத்தின் பாதையில் தீர்க்கமாய் முன்னேறுகிறான் இப்ராஹிம். அவன் வசமான கைதி என்னவானான் என்ற கேள்வியின் முன்னே, அந்த ஒற்றை இரவின் இருளில் வீட்டுக்குள் வெளிப்படும் அநேகரின் சுயரூபங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அப்படி என்ன நடந்தது, பிரச்சினையின் ஆதியான வெறுப்பின் ஊற்றை ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே ‘குருதி’யின் கதை.

திரைப்படத்தைத் தயாரித்து பிரதான எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், பழி வெறியேறிய பார்வையும் நிதானமான உச்சரிப்புமாகப் பயமுறுத்துகிறார். அவருக்கு இணையான பாத்திரத்தில் இப்ராஹிமாகத் தோன்றும் ரோஷன் மேத்யூ, மனைவி மகளை இழந்து சோகத்தில் மூழ்கியிருப்பது, இந்து பெண்ணின் காதலை ஏற்கத் தடுமாறுவது, மத நம்பிக்கைக்கும் மனிதத்தின் நம்பிக்கைக்கும் இடையே ஊசலாடுவது என அழுத்தமாக நடித்திருக்கிறார். இதுதவிர்த்து எஸ்ஐ-யாக வரும் முரளி கோபி, குடும்பத்துப் பெரியவராக தோன்றும் மம்முகோயா என பலரும் அசலான நடிப்பை வழங்கி உள்ளனர். அதிலும் மம்முகோயா வெள்ளந்தியாய் உதிர்க்கும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் பகடியும் கூர்மையும் அதிகம். வசனங்களை அனிஷ் பல்யால் எழுதியிருக்கிறார்.

பெரும்பாலும் இருட்டுக்குள் நகரும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் அபிநந்தன் சவாலுடன் பதிவு செய்துள்ளார். முரளிகோபி உள்ளே வந்ததும் வேகமெடுக்கும் கதையில், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பிரவேசிக்கும் பிருத்விராஜ் கதாபாத்திரம், அந்த வேகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லாது திணற விடுகிறது. குறிப்பிட்ட மத நம்பிக்கையை அதிகம் கேள்விக்குள்ளாக்கியதுடன், மதவாதத்தின் பின்னிருக்கும் அரசியலைக் கவனமாகத் தவிர்த்த வகையிலும் சறுக்கி யிருக்கிறார்கள். ஆனபோதும் மலையாள சினிமாவில் மட்டுமே வாய்ப்புள்ள நுட்பமான கதையுடன் ரசிகர்களைத் திருப்தி செய்திருக்கிறார் இயக்குநர் மனு வாரியர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in