பா.இரஞ்சித்தின் அடுத்த படத்திலும் நான்..!- உற்சாகத் துள்ளலில் துஷாரா விஜயன்

பா.இரஞ்சித்தின் அடுத்த படத்திலும் நான்..!- உற்சாகத் துள்ளலில் துஷாரா விஜயன்

மகராசன் மோகன்
mohan.m@hindutamil.co.in

ஓடிடி டிஜிட்டல் தளம், தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்தியிருக்கும் புதிய நாயகி துஷாரா விஜயன். ‘போதையேறி புத்தி மாறி’, ‘அன்புள்ள கிள்ளி’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தாலும், அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் நடிப்பு இவருக்கு தனித்த இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தற்போது இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தில் நடித்து வரும் துஷாராவிடம் ‘காமதேனு’ மின்னிதழுக்காக பேசியதிலிருந்து...

உங்களின் பின்னணி என்ன?

‘துஷாரா’ என்றால் மலைகளின் அரசி என்று பொருள். தொடக்கத்தில் இருந்தே நடிக்க ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு படத்தின் இயக்குநர்களும்,  “சினிமாவுக்காக உங்களின் பெயரை மாற்றிக் கொள்ளலாமா?” என்றே கேட்டனர்.  “நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கோங்க... ஆனால், எனக்குப் பிடித்த பெயர் துஷாரா தான்” என்று நான் தெளிவாக இருந்தேன். சொந்த ஊர் திண்டுக்கல் அருகே உள்ள கன்னியாபுரம் கிராமம். அப்பா விஜயன் அரசியல்வாதி. ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். கோவையில் பொறியியல் படிப்பை தொடங்கினேன். முழுமையாக முடிப்பதற்குள் சினிமா மீது பேராசை துளிர்த்தது. ஃபேஷன் டிசைனிங், மாடலிங் என படிப்படியாக 6 ஆண்டுகால பயணத்துக்கு இடையே திரை நாயகி என்ற இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

‘சார்பட்டா பரம்பரை’ பெரிய அளவில் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளதே?

திரையரங்குகளில் வெளியாகும் ஒரு படத்தின் நடிப்புக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவுக்கு பெயர் கிடைத்துள்ளது. ‘போதையேறி புத்தி மாறி’ திரைப்படத்துக்கு பிறகு ஒரு இடத்தில் நடிப்பு தேர்வுக்காகச் சென்றிருந்தேன். ஆடிஷன் முடிந்தது. அந்தப் படத்தின் இயக்குநர்,  “இந்தப் பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லை” என தன் குழுவினரிடம் கூறியதாக தெரிவித்தனர். திரும்பிவிட்டேன். இப்போது அதே இயக்குநர், ‘சார்பட்டா’ பார்த்துவிட்டு போனில் அழைத்து பாராட்டினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் உயரம் தொட வேண்டும் என்கிற ஆர்வமும் பொறுப்பும் வந்துள்ளது.

தொடர்ந்து என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்யத் திட்டம்?

எனக்கு வருஷம் முழுக்க படம் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது விருப்பமில்லை. 5 வருடங்களில் ஒரு படம் நடித்தாலும் போதும். அது பிடித்தமாதிரி இருக்க வேண்டும். ஒரு படத்தில் ரெண்டே காட்சிகள் அமைந்தாலும் அது ஆழமான கருத்தை சரியாக வெளிப்படுத்துவதுடன், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் கேரக்டராகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களம் பற்றி உங்களின் கருத்து..?

பெண்களை மையமாகக் கொண்ட கதைகளை தற்போது இயக்குநர்கள் அதிகம் வடிவமைக்கின்றனர். எனக்கும் அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. அதுக்காக பெண்ணியம் பேசுவது, பெண்ணியவாதியாக மட்டுமே நடிப்பது என சொல்லவரவில்லை. திரை மொழி வழியே பெண் கதாபாத்திரங்களை கொண்டாட வேண்டும். சவால்கள் நிறைந்த கதையின் வழியே பெண்கள் சாதனை புரிய வேண்டும். அதில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்கிற ஆசையும் உள்ளது.

நாயகியை மையமாகக் கொண்ட கதைகளை சீனியர் நாயகிகள்தானே அதிகம் விரும்புகிறார்கள் இல்லையா?

சரியான வாய்ப்பு அமைந்தால் போதும். நடிப்புக்குள் வந்து 10 வருஷம் ஆனால் தான் அப்படி நடிப்பேன் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஒரு சரியான வாய்ப்பு வழியே மக்களுக்கு நல்ல கருத்துக் களை சொல்ல முடிந்தால், உடனே அதைக் கையில் எடுக்கலாம். எந்த நேரத்தில் நடிக்கிறோமோ, அப்போது அந்த தலைமுறையினரை அது நிச்சயம் ஈர்க்கும்.

துஷாரா... ஒரு தமிழ்ப் பெண். தொடர்ந்து தமிழில்தான் நடிக்க விருப்பமா?

ஒரு படத்தில் நடிக்கும்போது அது தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமான படம் என்று நடிப்பதில்லையே. சினிமாவை எல்லா மொழிகளிலும் கலை வடிவமாகத் தானே பார்க்கிறோம். வசனமே இல்லாமல் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு காட்சியையும்  திரை மொழியில் கொடுக்க முடிகிறது. எனவே, சினிமா மொழிகளை கடந்தது. அந்தக் கலையை ஒரு மொழிக்குள் ஏன் வரையறுக்க வேண்டும்?

திரையரங்குகள் திறக்கவில்லையே என்கிற கவலை உள்ளதா?

நாம் நடிக்கும் ஒரு படத்தை திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதற்கான காலச் சூழல் தற்போது இல்லை. அதுவரை காத்திருக்கத் தான் வேண்டும். நானும், இந்தக் காலகட்டத்தில் நடித்து வரும் சில படங்களுடன் நின்று விடப்போவதில்லை. இன்னும் பெரும் பயணம் உள்ளது. அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

இயக்குநர் வசந்தபாலனின் திரைப்படம் எந்த கட்டத்தில் உள்ளது?

 தேசிய விருது இயக்குநர். அவரது ஸ்டைல் திரைப்பட பணிகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது. நிறைய கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய எனெர்ஜி செலுத்தி பணிபுரிகிறார். ‘சார்பட்டா’ மாரியம்மா கதாபாத்திரத்துக்கு நேர் எதிரான ரோல். எனக்கான பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவு பெறும்.

‘அன்புள்ள கிள்ளி’ படத்தில் என்ன கதாபாத்திரம்?

அது குழந்தைகளின் பொழுதுபோக்கை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ஒரு படம். முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நாய் நடித்துள்ளது. படத்தில் எனக்கு பெரிய அளவில் நடிப்புக்கு வேலையில்லை. தற்போது அமைந்துவரும் புதிய படங்களின் பயணங்களுக்கு அந்தப் படமும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அது இல்லை யென்றால் எனக்கு அடுத்தடுத்த படங்கள் இவ்வளவு விரைவில் கிடைத்திருக்காது.

மீண்டும் பா.இரஞ்சித் படத்தில் நடிக்கிறீர்களாமே?

அதிகாரபூர்வமாக எதுவும் கூற முடியவில்லை. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. முன்பு ஏற்று நடித்த ‘மாரியம்மா’ கதாபாத்திரத்தில் இருந்து மாறுபட்ட ஒரு நடிப்பை வெளியே கொண்டு வர வேண்டும். மற்றபடி இப்போது எதுவும் கூற முடியாது.   

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in