69வது தேசிய திரைப்பட விருதுகள்... தமிழில் யார் யாருக்கு விருதுகள்! சிறந்த படம் எது?

நடிகர்கள் தனுஷ் மற்றும் சூர்யா...
நடிகர்கள் தனுஷ் மற்றும் சூர்யா...

டெல்லியில் இன்று மாலை 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த வருடம் தமிழுக்கு அதிக விருதுகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள், நடிகர்கள் குறித்து ஒர் அலசல்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி நாட்டின் 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. 2021ம் ஆண்டிற்கான இந்த விருதுகள் இன்று மாலை 5 மணி அளவில் டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த முறை தமிழ் சினிமாவுக்கு ஏராளமான பிரிவுகளில் விருதுகள் கிடைத்ததால் இந்த முறையும் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெய்பீம் படத்தில் சூர்யா
ஜெய்பீம் படத்தில் சூர்யா

கடந்த முறை, நடிகர் சூர்யா ‘சூரரைப் போற்று’ படத்திற்காக தேசிய விருது வென்றிருந்தார். அதே போல, இந்தி திரைப்படமான ‘டன்ஹாஜி’க்காக அஜய் தேவ்கனும் சிறந்த நடிகர் விருதை வென்றார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை அபர்ணா பாலமுரளி ’சூரரைப் போற்று’ படத்திற்காக வென்றார். இந்தப் படம் சிறந்தப் படத்திற்கான விருதையும் வென்றது. ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்காக லட்சுமி பிரியா சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். இதனால், இந்த வருடமும் அதிக தேசிய விருதுகளை நிச்சயம் வெல்லும் என தாங்கள் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

‘கர்ணன்’
‘கர்ணன்’

அந்த வகையில், 2021ஆம் ஆண்டு வெளியான ‘கர்ணன்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ஜெய்பீம்’, ‘விநோதசித்யம்’, ‘மாநாடு’ ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

சிறந்த நடிகருக்காக போட்டியில் சூர்யா, தனுஷ், ஆர்யா, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் துணை நடிகர்கள் பட்டியலில் பசுபதி, மணிகண்டன் ஆகியோருக்கும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த நடிகைக்கான விருது ‘ஜெய்பீம்’ படத்தில் நடித்த லிஜோமோலுக்கு கிடைக்கும் எனவும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இது தவிர்த்து இயக்குநர்கள் ‘ஜெய்பீம்’ ஞானவேல், பா. இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரும் போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

கடந்த முறை சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் போல இந்த முறை சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படம் விருது பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்தியளவில் ‘புஷ்பா’ படம் போட்டியில் அதிக விருதுகளை அள்ளலாம் என்று ஆரூடம் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in