ஓ.டி.டி. உலா: ஆந்தாலஜியில் சத்யஜித் ராய் சிறுகதைகள்

ஓ.டி.டி. உலா: ஆந்தாலஜியில் சத்யஜித் ராய் சிறுகதைகள்

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

இந்திய சினிமாவின் பிதாமகன்களில் முக்கியமானவர் சத்யஜித் ராய். மனித ஆழ்மனங்களில் சிக்கெடுக்கும் தனது கதைகளை, காலத்தால் அழியா காவியத் திரைப்படங்களாக்கி தந்திருப்பவர். ராயின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, அவரது முத்திரைக் கதைகளில் சிலவற்றைத் தழுவிய ‘ராய்’ (Ray) ஆந்தாலஜி தொகுப்பை அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

ராயின் 4 சிறுகதைகளைத் தழுவிய 4 குறும்படங்கள், இந்த ஆந்தாலஜியில் இடம்பெற்றிருக்கின்றன. சிறுகதையின் மையமான சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தங்கள் தனித்துவம் மற்றும் வலைத்தொடருக்கான வசீகரம் ஆகியவற்றைக் கலந்து ஸ்ரீஜித் முகர்ஜி, அபிஷேக் சௌபி, வாசன் பாலா ஆகிய இயக்குநர்கள் தந்துள்ளனர். மனோஜ் பாஜ்பாயி, கே.கே.மேனன், அலி ஃபாஸல் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இந்தப் படைப்புகளுக்குக் கூடுதல் வசீகரம் சேர்த்துள்ளனர்.

நினைவில் பிறழும் மனிதக் கணினி

முதல் குறும்படம், மனோதத்துவ த்ரில்லரான ‘ஃபர்கெட் மீ நாட்’(Forget Me Not). இப்ஸிட் என்ற வளரும் வர்த்தகப் புள்ளி, மும்பை கார்ப்பரேட் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறான். நடமாடும் சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் அளவுக்குத் துல்லிய நினைவுத் திறனே, அவனது வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கின்றது. திறமையின் உச்சமாக விருதுகளை வாங்கிக் குவிக்கும் அந்த கார்ப்பரேட் யானைக்கு, திடீரென அடி சறுக்குகிறது.

குறும்படத்தின் தொடக்கத்தில் இப்ஸிட்டிடம் முன்பின் அறிமுகமில்லாத ஒரு இளம்பெண் நெருங்கி, இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நெருங்கி பழகியதன் தடயங்களைச் சிலாகித்துவிட்டுச் செல்வாள். அவனுக்கோ அப்படியான சம்பவம் மட்டுமன்றி, அவளும் அடியோடு நினைவில் இல்லை. அங்கே தொடங்கி, குடும்பத்திலும் அலுவலகத்திலுமாக நினைவுகூர்தலில் தொடர் சறுக்கலைச் சந்திக்கிறான். படிப்படியாய் அவனது இயல்பைக் குலைத்துப் போடக் காரணமான அந்த சரச சம்பவம் உண்மைதானா, அவனைச் சுற்றி சிலந்தி வலையாகும் சித்து விளையாட்டின் பின்னணி எது என்ற ரகசியங்களை உடைப்பதுடன் குறும்படம் முடிகிறது. அலி ஃபாஸலின் அசத்தும் நடிப்பு, த்ரில்லர் பாணி திரைக்கதை, இரவில் ஒளிரும் மும்பை என கவரும் அம்சங்களுடன் முதல் குறும்படம் ஈர்க்கிறது.

புதிர் போடும் அரிதாரங்கள்

பிறருக்கு அரிதாரம் பூசிவிடுவதில் அவன் பிறவிக் கலைஞன். ஆனால், அவனுக்கான வாழ்க்கையோ மருந்துக்கும் மகிழ்ச்சியின் பூச்சு இன்றி வறண்டிருக்கிறது. காதல், வேலை, காசு என சகலத்திலும் தோல்வியையே சந்திக்கிறான். அரிதாரக் கலையை அவனுக்குக் கற்றுத்தந்த அவனது பாட்டியும் மரணமடைகிறாள். இறப்பதற்கு முன்னர் பெரும் பணத்தை பேரனுக்கு உயில் எழுதிச் செல்கிறாள். பாட்டி தந்த பணமும், அவளது பிரத்யேக அரிதாரப் பேழையும் அதற்குப் பின்னரான அவனது வாழ்க்கையை அடியோடு மாற்றுகின்றன.

பிறர் முகத்துக்கு அரிதாரம் பூசி வந்தவன், இனி தனக்குத்தானே பிறர் அடையாளங்களில் அரிதாரம் பூசி விசித்திர உலா வருகிறான். அரிதாரமே ஆயுதமென பல பழிவாங்கல்களையும் நிகழ்த்தி ஆறுதல் கொள்கிறான். ஆனால், அவனது அரிதாரத் திறமை முகம் பார்த்து குறிசொல்லும் பாபா ஒருவரிடம் மட்டும் பலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் முன்பு குட்டு உடைபடுகிறான். அவரை வெறுப்பேற்றும் அவனது இறுதி முயற்சி நம்ப முடியாத திருப்பத்துடன் கதையை முடிக்கிறது. வசனங்களுக்கு அதிக வாய்ப்பளிக்காத கே.கே.மேனனின் நடிப்பும், அரிதாரத்தை ஆயுதமாக்கிய திரைக்கதையும் ‘பெஹ்ருபியா’ என்ற இந்தக் குறும்படத்தின் சிறப்புகளாகின்றன.

உள்ளங்கவர் கள்வர்

ரயில் பயணம் ஒன்றில் சந்திக்கும் இருவர், முன்பே தாங்கள் சந்தித்திருப்பதாக ஐயம் கொள்கிறார்கள். இருவரில் ஒருவருக்கே முந்தைய சந்திப்பு முதலில் நினைவுக்கு வருகிறது. முன் சந்திப்பில் நிகழ்ந்த களவையும் அதையொட்டிய திருவாளர் திருடரின் பிரச்சினைகளையும் கதை ஆராய்கிறது. நடப்புச் சந்திப்பில் முந்தைய திருட்டின் குட்டு உடைவதுடன், பரஸ்பர விந்தையான விதந்தோதலுடன் குறும்படம் முடிகிறது.

கஸல் பாடகராக நடித்திருக்கும் மனோஜ் பாஜ்பாயி, குறும்படம் முழுக்கக் கட்டிப்போடுகிறார். பாட்டும் பகடியுமாக அவரையொட்டிய காட்சிகளும், கஜ்ராஜ் ராவுடன் அவர் நிகழ்த்தும் உரையாடலும் பட்டாசு ரகம். விளையாட்டாய் தலைகாட்டி விபரீதமாகும் களவாடல் பழக்கத்தின் பின்னணியில் குற்ற மனப்பான்மை, அதிர்ஷ்ட நம்பிக்கைகள் எனப் பலவற்றையும் ‘ஹங்கமா ஹை க்யோன் பார்பா’ குறும்படம் கூராய்கிறது.

ஒளியின் பின்னே இருள்

பாலிவுட்டின் வளரும் இளம் ஹீரோ விக்ரம். கடின உழைப்பில் தனக்கென்று தனி பாவனைகளை வளர்த்துக்கொண்டு ரசிகர்களை வசீகரித்துவருகிறான். புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளியூர் நட்சத்திர விடுதியில் தங்குபவனுக்குச் சில சந்தேகங்களும், தடுமாற்றங்களும் தலைகாட்ட ஆரம்பிக்கின்றன. பொதுமக்கள் மத்தியில் தன் மீதான வெளிச்ச வளையத்தை எப்படியாவது தக்கவைத்து வருபவனுக்கு, அங்கே அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அதே விடுதியில் தங்கும் ஒரு சாமியாரினிக்கான புகழ் வெளிச்சத்தில் விக்ரம் மீது நிழல் கவிழ்கிறது. சகலரும் சாமியார் பெண்ணின் புகழையே பாட, இவனோ பொறாமையில் வேகிறான். உச்சமாய் ஒரு நாள் இரவு அவளை நேருக்கு நேர் சந்திக்கவும் செய்கிறான். அது இருவர் போக்கையும் எப்படி மாற்றுகிறது, இருவரில் ஜித்தர் யார் என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது ‘ஸ்பாட்லைட்’ குறும்படம்.

திரைக்குள் விரியும் திரையாக சினிமாவின் போக்கை எள்ளுவதுடன், ஆன்மிகம், புகழ்போதை எனப் பல கற்பிதங்களையும் கட்டுடைக்கிறது இக்குறும்படம். பிரதான வேடத்தில் நடித்திருக்கும் ஹர்ஷ்வர்தன் கபூர் மட்டுமன்றி, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் மிளிர்கிறார்கள். முக்கியமாய் கதையின் இறுதியில் வாய் திறக்கும் ராதிகா மதன், ஷர்ஷ்வர்தனை நடிப்பில் தாண்டிச் செல்கிறார்.

‘ராய்’ ஆந்தாலஜியின் ஆகப்பெரும் ஆறுதலாக சத்யஜித் ரே கதைகளின் ஆன்மாவும், அவற்றை அதிகம் சிதைக்காது நகைச்சுவையுடன் பரிமாறிய இயக்குநர்களின் தனித் திறமையையும் சொல்லலாம். மற்றபடி, சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு நீளும் குறும்படங்களை 30-40 நிமிடங்களுக்குச் சுருக்கியிருப்பின் சில தொய்வுகளைத் தவிர்த்திருக்கலாம். மனோஜ் பாஜ்பாயி தோன்றும் குறும்படத்தில், சப்-டைட்டில் உதவியைவிட இந்தி தெரிந்தவர்களுக்கு கூடுதல் ரசிப்பு கிட்டியிருக்கும். குறும்படங்களின் இறுதியில் மறைமுகமாக உணர்த்தப்படும் ‘அம்புலிமாமா’ நீதிகள், வலைத்தொடர் காலத்து படைப்புகளின் பாணியிலிருந்து முரண்படுவதையும் சொல்லியே ஆக வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in