நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’

68 ஆண்டுகளாகியும் திரைச் சரித்திரத்தில் பறக்கும் கிளி
நடிகர் திலகமும் மக்கள் திலகமும்  இணைந்து நடித்த ‘கூண்டுக்கிளி’

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜியின் காலத்தைத்தான் பொற்காலம் என்று சொல்லுவார்கள். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அப்போது. வசனங்கள் திருத்தமாகச் சொல்லப்பட்டன. காதலனும் காதலியும் கண்ணியத்துடன் காண்பிக்கப்பட்டார்கள். உறவுகளின் மேன்மை சொல்லப்பட்டது. நல்லவன் வாழ்வான் என்று போதிக்கப்பட்டது. பெரியோரை மதிக்கவும் பெண்களை சக மனுஷியாகப் பார்க்கவுமாகக் காட்சிகள் இருந்தன. படத்தில் வருகிற பாடல்களுக்கு அவ்வளவு மெனக்கெட்டார்கள். பாடல்களின் மூலம் மிகப்பெரிய கருத்துகளையும் எளிமையாகச் சொன்னார்கள். ஒருபக்கம் எம்ஜிஆர், சூப்பர் ஹீரோவாகிக்கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் சிவாஜி சூப்பர் ஆக்டராகிக் கொண்டே இருந்தார். தமிழ் சினிமாவை நீண்டகாலமாக ராஜாங்கம் பண்ணிய இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடித்தார்களா? ஆமாம்... நடித்தார்கள். ஒரேயொரு படத்தில் நடித்தார்கள்.

எம்ஜிஆர் - சிவாஜிக்குப் பிறகு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்ட கமலும் ரஜினியும் ஏகப்பட்ட படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். பிறகு அவர்களே தீர்மானம் போட்டுக்கொண்டு, தனித்தனியே பாதை வகுத்துக்கொண்டு, களமாடினார்கள்; ஜெயித்தார்கள்; ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்கள். கமல் - ரஜினிக்குப் பிறகு வந்த அஜித்தும் விஜய்யும்கூட ஒரேயொரு படத்தில் சேர்ந்து நடித்தார்கள். ‘ராஜாவின் பார்வையிலே’... அந்தப் படத்தின் பெயர். எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த அந்த ஒரேயொரு படத்தின் பெயர்... ‘கூண்டுக்கிளி’.

1936-ல் திரையுலகிற்கு வந்த எம்ஜிஆருக்கு மளமளவென படங்கள் கிடைக்கவில்லை. சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் இரண்டாவது நாயக பாத்திரங்களிலும் நடித்து வந்தார். கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறினார். 1952-ல் அறிமுகமான சிவாஜி, தன் முதல் படமான ‘பராசக்தி’யிலேயே நாயக அந்தஸ்துக்கு வந்தார். தொடர்ந்து ‘பணம்’ முதலான படங்கள் வந்தன.

இயக்குநரும் தயாரிப்பாளருமான டி.ஆர்.ராமண்ணாவுக்கு எம்ஜிஆரும் பழக்கம். சிவாஜியும் நெருக்கம். அவர்கள் இவரை ’அண்ணா அண்ணா’ என்று கூப்பிடுவதும் இவர் அவர்களை ‘அண்ணா அண்ணா’ என்று அழைக்கிற அளவுக்கு நல்ல உறவு உண்டு. ‘ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கிறீங்களா? ஒரு படம் எடுக்கட்டுமா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார் டி.ஆர்.ராமண்ணா. ‘இதுல என்ன இருக்கு, தாராளமா சேர்ந்து பண்றோம், நடிச்சிட்டாப் போச்சு’ என்று எம்ஜிஆரும் சிவாஜியும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அதற்கான கதையும் நேரம் கைகூடிவரவில்லை ராமண்ணாவுக்கு!

அந்தச் சமயத்தில்தான் எழுத்தாளர் விந்தன் எழுதிய கதையைப் படித்தார் டி.ஆர்.ராமண்ணா. ‘இதைத் திரைக்கதையாக்கினால் என்ன’ என்று தோன்றவே பணிகளில் இறங்கினார். எம்ஜிஆர், சிவாஜி இருவருக்கும் கதையைச் சொன்னார். இருவரும் ‘சம்மதம்’ என்றார்கள். இப்படித்தான் உருவானது ‘கூண்டுக்கிளி’ திரைப்படம்.

படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்தன. படம் முழுவதும் முடிந்தது. திரையிட்டுக் காட்டப்பட்டது. எம்ஜிஆரின் நடிப்பை சிவாஜி பாராட்டினார். ‘நீதான் பிரமாதமா பண்ணிருக்கே’ என்று சிவாஜியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நெகிழ்ந்து பாராட்டினார் எம்ஜிஆர். ஆனால் படம்தான் ஓடவில்லை.

‘கூண்டுக்கிளி’ படத்தின் கதைதான் என்ன?

ஜீவா, தங்கராஜ், மங்களா... இந்த மூவரும்தான் கதையின் மையம். சிவாஜியின் பெயர் ஜீவா. எம்ஜிஆரின் பெயர் தங்கராஜ். பி.எஸ்.சரோஜாவின் பெயர் மங்களா.

சிவாஜிக்கு ஒரு பெண்ணைப் பார்த்திருப்பார்கள். அவள் புகைப்படம் பார்த்து மயங்கிப் போவார் சிவாஜி. எல்லாம் முடிந்து பணப் பிரச்சினையில் சிக்கலாக, பேச்சுவார்த்தைகள் அப்படியே நின்றுபோகும். அவளைத் தேடி அலைவார் சிவாஜி. அந்தக் குடும்பம் ஊரைவிட்டே போயிருப்பார்கள்.

எம்ஜிஆர், சிவாஜி (கூண்டுக்கிளி)
எம்ஜிஆர், சிவாஜி (கூண்டுக்கிளி)

எங்கெங்கோ தேடுவார். கிடைக்கவில்லையே... எனும் விரக்தியில் தற்கொலை முடிவுக்கு வருவார். தண்டவாளத்தில் ரயில் வரும் வேளையில் படுத்து உயிரை மாய்த்துக்கொள்ள சிவாஜி தயாராக இருக்க, அங்கே எம்ஜிஆர் வந்து சிவாஜியைக் காப்பாற்றுவார். பிறகுதான் இருவரும் பால்ய நண்பர்கள் என்பது தெரியவரும்.

எம்ஜிஆர் அவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பார். வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மனைவியை அறிமுகப்படுத்தி வைப்பார். திக்கென்று ஆகிவிடும் சிவாஜிக்கு. ‘தான் விரும்பிய பெண் நண்பனுக்கு மனைவியா?’ என்று ஒருகணம் விக்கித்துப் போவார். அந்தப் பெண்ணுக்கு, சிவாஜி பெண் பார்த்த விஷயமெல்லாம் தெரியவே தெரியாது.

ஊருக்குள், சிவாஜியைப் பற்றியும் சரோஜாவைப் பற்றியும் அரசல்புரசலாகப் பேசுவார்கள். ‘என் நண்பனையா தப்பாச் சொல்றே’ என்று ஆவேசமாகி அடித்துவிடுவார் எம்ஜிஆர். இதனால் சிறை செல்வார். ‘கவலைப்படாதே, உன்னையும் நம் குழந்தையையும் என் நண்பன் ஜீவா பார்த்துக் கொள்வான்’ என்று சிறையிலிருந்தபடி சொல்வார் எம்ஜிஆர். ஆனால், அடுத்தடுத்து சிவாஜியின் குணம் வக்கிரம் மேலோங்கத் தொடங்கும். பெண் பார்த்த விஷயமெல்லாம் சொல்லி மனம் மாற்ற முயற்சிப்பார். ஆனால் அவளோ, ‘அண்ணா அண்ணா’ என அன்பொழுகப் பேசுவார். ஆனால் அவளை அடைந்தே தீருவது என்று ‘டார்ச்சர்’ பண்ணுவார் சிவாஜி.

இத்தனைக்கும் சிவாஜியை அந்த ஊரில் ஒரு பெண் காதலிப்பாள். அதைக்கூட பொருட்படுத்தமாட்டார் சிவாஜி. வீடு வாசலை இழந்து பிச்சையெடுப்பவர்களுடன் தெருவோரத் திண்ணையில் எம்ஜிஆரின் மனைவியும் குழந்தையும் இருக்க, அப்போதும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாமல், ‘வா எங்காவது ஓடிப்போய்விடலாம்’ என்பார்.

எம்ஜிஆர், சிவாஜி நடித்த ‘கூண்டுக்கிளி’
எம்ஜிஆர், சிவாஜி நடித்த ‘கூண்டுக்கிளி’

இந்தச் சமயத்தில் எம்ஜிஆர் சிறையிலிருந்து வர, விவரம் மொத்தமும் தெரிந்துகொள்ள, சிவாஜியைப் புரட்டியெடுப்பார். ஏற்கெனவே மனம் திருந்திய சிவாஜி, அடித்துப் பெய்யும் மழை மின்னலில், மின்னல் வெட்டி சிவாஜியின் கண்களில் பார்வை பறிபோய்விடும். அதே தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்துக்கொள்ள ரயிலுக்குக் காத்திருக்கும் சிவாஜியை, எம்ஜிஆர் வெளியே இழுத்துவந்து துவம்சம் பண்ணுவார். சிவாஜியைக் காதலிக்கும் பெண் வந்து எல்லா விவரமும் சொல்ல, எம்ஜிஆர் அங்கிருந்து செல்வார். சிவாஜியைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி காதலி செல்வாள்.

ஆக, எம்ஜிஆர் நல்லவர்; சிவாஜி கெட்டவர். டைட்டிலில் இருவர் பெயரையும் சேர்த்துதான் போடுவார்கள். ஆனால் படத்தில் அதிக நேரம் சிவாஜிதான் வருவார். எம்ஜிஆர் ஜெயிலுக்குப் போய்விட, சிவாஜியின் கதாபாத்திரம்தான் படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கும். எல்லோருமே சிறப்பாக நடித்திருப்பார்கள். எழுத்தாளரும் பத்திரிகையாளருமான விந்தன் கதை, வசனம் எழுதினார். டி.ஆர். ராமண்ணா தன் ‘ஆர்.ஆர்.பிக்சர்ஸ்’ பேனரில் தயாரித்து இயக்கினார். விந்தன், தஞ்சை ராமையா தாஸ், கா.மு.ஷெரீப், மருதகாசி முதலானோர் பாடல்களை எழுத, படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கின்றன. கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.

நெகட்டிவ் ரோலில், கனகச்சிதமாக தன் நடிப்பையும் நடிப்பின் முத்திரையையும் பதித்திருந்தார் சிவாஜி. எம்ஜிஆர், தன் முத்திரையைத் திரையில் காட்டாத காலம் அது. தனக்கென ஒரு பாணியை எம்ஜிஆர் வகுத்துக் கொள்ளாத காலம். ஆனாலும் அவரின் தேர்ந்த நடிப்பும் கச்சிதம்.

இந்தப் படம் வந்த தருணத்தில், அதாவது படம் ரிலீசான போதா... பிறகா... அறுபது வயதுக்காரர்களுக்குக் கூட சரியாகத் தெரியவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் முட்டிக்கொண்டார்கள். தியேட்டரில் ஏக கலாட்டா. படம் திரையிடப்படாமல் பாதியிலேயே நின்றது. படத்தின் பிலிம் சுருள் எரிக்கப்பட்டது என்றெல்லாம் ஏகப்பட்ட கதைகளும் திரைக்கதைகளும் சொல்லுவார்கள்.

இதேகாலகட்டத்தில் வந்த படங்கள், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகள் வரைக்கும்கூட புத்தம்புதிய காப்பி என்று ஒரு ரவுண்டு வந்தன. ‘கூண்டுக்கிளி’ மட்டும் ஏனோ அடுத்தடுத்து தியேட்டர்களுக்கு வரவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ரீபிரின்ட்’ போடுவார்கள். ஆனால் ஏனோ ‘கூண்டுக்கிளி’ திரைப்படம், கூண்டில் சிக்கிய கிளியாகவே ஆகிப்போனது.

1954 ஆகஸ்ட் 26-ம் தேதி ‘கூண்டுக்கிளி’ வெளியானது. எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த இந்தப் படம், திரையுலகின் சரித்திரமாகிவிட்டது. சரித்திர நாயகர்களின் இந்த மகத்துவ இணைவுப் படம் வந்து, 68 ஆண்டுகளாகிவிட்டன! எம்ஜிஆரையும் சிவாஜியையும் நாம் என்றைக்கும் மறக்கமாட்டோம். படத்தைப் பார்க்காதவர்களும்கூட ‘கூண்டுக்கிளி’யை மறக்கவே மாட்டார்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in