‘கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே’வுக்கு 67 வயது!

ஜெமினி, சாவித்திரி, சந்திரபாபு நடிப்பில் கலகல ‘மாமன் மகள்’
ஜெமினி நடித்த ‘மாமன் மகள்’
ஜெமினி நடித்த ‘மாமன் மகள்’

தலைவலி என்று சிலர் டீ குடிப்பார்கள். உடனே சரியாகிவிடும். சிலர், ‘இந்த மாத்திரையைப் போட்டால்தான் குணமாகும்’ என்று சொல்லி அந்த மாத்திரையைப் போடுவார்கள். வலி பட்டென்று பறந்துவிடும். இன்னும் சிலர் தைலம் தேய்த்துக்கொள்வார்கள். அந்தக் காலத்தில், நெற்றியில் ரிப்பன் கட்டிக்கொண்டால் தலைவலி போய்விடும் என்றவர்களும் உண்டு. தேநீர் பாதி நம்பிக்கை மீதி கணக்குதான் வாழ்க்கையும்! இதை வலியுறுத்துவதற்கு, ரசிகர்களிடம் அறிவுரையாகச் சொல்லாமல், காதலும் காமெடியுமாகச் சொன்னதுதான் ‘மாமன் மகள்’ படம்.

ஜெமினி கணேசன், சாவித்திரி, சந்திரபாபு, பாலையா, சி.கே.சரஸ்வதி என பலரும் நடித்த இந்தப் படம், முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் நிறைந்திருக்கிற, கலகலப்பான படைப்பு.

‘மாமன் மகள்’ படத்தின் கதைதான் என்ன?

மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள் சாவித்திரி. அந்தக் கோடீஸ்வரருக்கு நண்பர் பாலையா. ஆனால் பாலையாவுக்கு சொத்துகளை அபகரிப்பதுதான் குறிக்கோள். சாவித்தி்ரிக்குத் திருமணம் செய்ய முடிவெடுப்பார்கள். மாப்பிள்ளை வீட்டாரை பாலையாவும் அழைத்துக்கொண்டே வருவார். ஆனால் சாவித்திரியின் அப்பா மறுத்துக்கொண்டே இருப்பார்.

’மாமன் மகள்’ படத்தின் டைட்டில்
’மாமன் மகள்’ படத்தின் டைட்டில்

அதற்குக் காரணமும் உண்டு. சாவித்திரியின் அம்மாவுக்கு ஒரு தம்பி. அவனுடைய மறைவுக்குப் பிறகு, தம்பி மகனையும் வளர்க்கிறார். சிறுவயதில், கோயில் திருவிழாவில் அந்தப் பையன் காணாமல் போய்விட, அந்தத் துக்கத்திலேயே அம்மா படுத்த படுக்கையாகிவிடுகிறார். பிறகு கணவரிடம், ‘’என் தம்பி மகனைக் கண்டுபிடித்து நம் மகளை அவனுக்குக் கல்யாணம் செய்துவைப்பதுதான் உங்கள் பொறுப்பு. நம் சொத்துகளையும் அவனுக்கு எழுதிவைத்துவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.

இதையெல்லாம் பாலையாவிடம் சொல்லி வருந்துகிறார் சாவித்திரியின் அப்பா. ‘’நான் தேடி அழைத்து வருகிறேன்’’ என்று சொல்லிக் கிளம்புகிற பாலையா, தன் மனைவி சி.கே.சரஸ்வதியின் தம்பி சந்திரபாபுவை ஏற்பாடு செய்து, இதோ பையன் கிடைத்துவிட்டான் என சொத்துகளை அபகரிக்க ஒரு டிராமா போடுகிறார். கூடவே, ‘அந்தக் குழந்தையின் இடது தோளில் காசு அளவுக்கு ஒரு மச்சம் உண்டு’ என்றும் சொல்லியிருக்கிறார் சாவித்திரியின் அப்பா.

இங்கே... கோயில் திருவிழாவில் தனியே நின்று அழுதுகொண்டிருக்கும் சிறுவனை, வயதான தம்பதி குடிசைக்கு அழைத்து வந்து வளர்க்கிறார்கள். அவர்களை தாத்தா, பாட்டி என்று அழைத்தபடி வளரும் அந்தச் சிறுவன்தான் ஜெமினி கணேசன். ஆனால் மிகவும் கோழை. எதற்கெடுத்தாலும் பயம், எவரைப் பார்த்தாலும் நடுக்கம் என்று பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார்.

’மாமன் மகள்’ டைட்டில்
’மாமன் மகள்’ டைட்டில்

அப்போது, ‘’உன் தாத்தாவும் இப்படித்தான் கோழையாக இருந்தார். ஒரு சாமியார் ஒருத்தர், மந்திர தாயத்தைக் கொடுத்தார். நம்பிக்கையோட கட்டிக்கொண்டார். மிகப்பெரிய தைரியசாலியானார். அந்த தாயத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன்’’ என்று சொல்ல, ஜெமினி அந்த தாயத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார். வீரம் பிறக்கிறது. துணிச்சலுடன் எல்லோரையும் எதிர்கொள்கிறார்.

இதேகட்டத்தில், சாவித்திரியும் ஜெமினியும் சந்தித்துக்கொள்வார்கள். மூவாயிரத்து நானூத்தி சொச்சம் படங்களைப் போலவே, கண்டதும் காதல் மலர்கிறது. சாவித்திரிக்கு டியூஷன் எடுக்கும் வாத்தியாராகச் செல்லும்போது நிகழ்கிற காதல், ஒருகட்டத்தில், நம் அத்தை மகளைத்தான் விரும்புகிறோம் என்று தெரிந்ததும் இன்னும் ஆழமாகிறது. ஆனால் பாலையா அழைத்துவந்த சந்திரபாபு யார் எனும் குழப்பமும் இருக்கிறது. வீட்டு தோட்டக்கார கிழவர் வேடம் போட்டுக்கொண்டு, சகலத்தையும் கண்டறிகிறார் ஜெமினி. எல்லோரையும் ஓரிடத்தில் பாலையா அடைத்துவைக்க, அங்கிருந்து எல்லோரையும் வீழ்த்திவிட்டு, காப்பாற்றுகிறார் ஜெமினி.

அங்கே வளர்ப்புப் பாட்டி வந்து விஷயத்தையெல்லாம் சொல்ல, எல்லோரும் இணைகிறார்கள். ‘’பாட்டி கொடுத்த மந்திர தாயத்துதான் நான் வீரனானதற்குக் காரணம்’’ என்று ஜெமினி சொல்ல, ‘’இது மந்திரமும் இல்ல, தாயத்தும் இல்ல. அப்படியொரு நம்பிக்கையை உனக்குச் சொன்னேன்’’ என்கிறார் பாட்டி. ‘’அப்படின்னா இது தாயத்து இல்லியா பாட்டி?’’ என்று ஜெமினி கேட்க, “இது உங்க தாத்தாவோட மூக்குப்பொடி டப்பா’’ என்று சொல்ல ‘சுபம்’ போடுகிறார்கள். கலகலவென கவலைகளையெல்லாம் மறந்துவிட்டு, சிரித்த முகத்துடன் தியேட்டரைவிட்டு வெளியே வந்தார்கள் ரசிகர்கள்.

’மாமன் மகள்’ டைட்டில்
’மாமன் மகள்’ டைட்டில்

ஜெமினியின் காமெடி கலந்த நடிப்பு அற்புதம். சாவித்திரி வழக்கம்போலவே கொடுத்த கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருப்பார். சந்திரபாபுவின் அலப்பறைக்குச் சொல்லவா வேண்டும்?

எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் பாடல் ஒவ்வொன்றும் அற்புதம். ’என்றுமில்லா... நீ என்று சொல்லு தென்றலே’ என்ற பாடலை ஜிக்கி பாடியிருப்பார். நம்மை மயக்கியெடுக்கும். ’மலரும் மனமும்... ரகசியமாக...’ என்ற பாடலை ஏ.எம்.ராஜா தன் ‘ஹஸ்கி’ குரலில் பாடி நம்மை அசரடித்திருப்பார். 'நெஞ்சிலே உரம் தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற பாடலை டி.எம்.எஸ். பாடி நம்பிக்கை விதைத்திருப்பார். ’அதிசயமான ரகசியம்’, 'தேவி நீயே துணை’, ‘ஆசை நிலா சேர்ந்திடுதே’ என்ற பாடல்களை ஜிக்கி பாடியிருப்பார். பாபநாசம் சிவன், தஞ்சை ராமய்யாதாஸ், சுரபி, ஆத்மநாதன், சீத்தாராமன், கம்பதாசன் (ஆமாம், அப்படியொரு பாடலாசிரியர் இருந்திருக்கிறார்) பாடல்களை எழுத, ஸ்ரீதரின் வசனத்தில் ஆர்.எஸ்.மணி இயக்கினார். படம் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது. எல்லாப் பாடல்களையும் விட, சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

‘தாயத்து’ மேட்டர், ரஜினி நடித்து ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘ராஜாதி ராஜா’விலும் வரும் நினைவிருக்கிறதா? ‘இந்த ‘தாயத்து’ விஷயத்தை பல படங்களில் கோத்து கட்டிக்கொண்டு கதைக்குள் நுழைத்திருக்கிறார்கள்.

1955 அக்டோபர் 14-ம் தேதி வெளியானது ‘மாமன் மகள்’ படம். டைட்டிலில் ஜெமினி கணேசன் என்று போடவில்லை. ஆர்.கணேசன் என்று போடுகிறார்கள். தவிர, நடிகர்கள், நடிகைகள் பெயரைக் கொத்தாகப் போட்டிருப்பார்கள். படம் வெளியாகி, 67 வருடங்களாகின்றன. இன்னும் ‘மல்கோவா மாம்பழம்’ போல் இனித்துக்கொண்டுதான் இருக்கிறது ‘மாமன் மகள்’ திரைப்படம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in